சிறுபான்மை சமூகங்கள் அதுவும் வடக்கு கிழக்கில் மிகப் பெரும்பான்மையாக வாழ்கின்ற, வாழப்போகின்ற இரண்டு தமிழ்பேசும் சமூகங்களும் இதய சுத்தியுடன் தனியான கூட்டமைப்புகளாக உருப்பெற்று மனம் விட்டு பேசவேண்டும். அவ்வாறான ஒரு சமரசப் பேச்சு இல்லாமல் ஒரு நிரந்தரத் தீர்வை எம்மால் பெற்றுக் கொள்ள முடியாது. தமிழ் முஸ்லிம் சமூகங்களை திருப்திப்படுத்தாத எந்த ஒரு தீர்வுத் திட்டமும் நிரந்தர சமாதானத்தைக் கொண்டுவரப் போவதில்லை என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான எம்.ரி.ஹசனலி வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்.அவர் வழங்கிய செவ்வி முழுமையாகக் கீழே தரப்படுகிறது.
கேள்வி: இலங்கையில் இன ஒற்றுமை யினை ஏற்படுத்துவதற்கான ஒரு பூரணமான தீர்வுத் திட்டம் அமையும் சாத்தியம் பற்றி உங்களது அபிப்பிராயம் என்ன?
பதில்: அரசியல்வாதிகளின் பெருந்தன்மையில்தான் இது தங்கியுள்ளது. இவர்கள் ஒவ்வொருவரும் மற்றவரின் உரிமையையும், கௌரவத்தையும், மதிப்பவர்களாகவும் உள்ளதைப் பகிர்ந்து கொள்ளும் மனப்பாங்கையுடையவர்களாகவும், சகவாழ்வின் கனதியான பெறுமானத்தின் மகத்துவத்தை மிகுந்த விட்டுக் கொடுப்புடன் கடைப்பிடிப்பவர்களாகவும் தம்மை மாற்றிக் கொள்ள முடியுமென்றால் பூரணமான தீர்வுத் திட்டத்தை எட்டி விடலாம்.
நமது அனைத்து மதங்களும் இந்த உயரிய பண்புகளைத்தான் போதிக்கின்றன. இந்த நாட்டில் வாழும் நல்லவர்களும் இதைத்தான் விரும்புவார்கள். ஆனால் நல்லவர்கள் எல்லோரும் நாட்டில் எண்ணிக்கையில் தாராளமாக இருந்தாலும் இவர்களை அடக்கிவாழும் மிகச் சிறுபான்மையினரான பெரும்தேசிய கடும்போக்கு வாதிகளின் பிடியிலிருந்து மட்டும் இவர்களால் தங்களை விலக்கிக் கொள்ள முடிவதில்லை. ஏனெனில் நமக்கெதற்கு வம்பு என்று ஒதுங்கிக்கொண்டு நிம்மதியாக வாழத் துடிக்கும் இந்த நல்லவர்களையெல்லாம் நமது அரசியல்வாதிகள் வெறும் வாக்காளர்களாக மட்டும்தான் அடையாளம்கண்டு வருகின்றார்கள். இந்நாட்டின் பெறுமதிமிக்க குடிமக்களாக இவர்களை என்றுமே அரசியல்வாதிகள் காண்பதில்லை. எனவே நல்லவர்கள் எல்லாரும் வல்லவர்களாக மாறும் நிலைமை வரும்வரை தீர்வுத் திட்டம் வெறும் கேள்விக் குறியாகவே இருக்கும்.
கேள்வி: தத்துவ ரீதியான உங்கள் விளக் கப்படி ஒரு நிரந்தர தீர்வுத் திட்டம் சாத்திய மாகாது என அர்த்தப்படுமா?
பதில்: ஆம். அரசியல்வாதிகளும், அரசியல் கட்சிகளும், தனிநபர்களாகவும், குழுக்களாகவும் பிரிந்து நின்று இதனை ஒருபோதும் சாதிக்க முடியாது. ஆகக் குறைந்த நிலையாக நாம் சமூக ரீதியாகவாவது ஒற்றுமைப்பட்டு இந்த விடயத்தை அணுக சகலரும் முன்வர வேண்டும். நமது நாட்டில் இனப்பிரச்சினைக்கான தீர்வுபற்றி எண்ணத் தொடங்கும்போது கண்முன் தோற்றம் தருவது இலங்கை- – இந்திய ஒப்பந்தத்தின் எச்சமெனப்பட்ட இன்றும் எமது அரசியல் சூழலை ஆட்கொண்டிருக்கும் மாகாணசபை முறைமையாகும். இதனை மையமாகக் கொண்டே தீர்வுத் திட்டங்களும் சிந்திக்கப்படுகின்றன. இதனை முற்றாகக் களைந்து வேறுவிதமான திட்டம் எதுவும் முன்வைக்கப்படப் போவதில்லை.
இந்தியாவும் இலங்கையும் தங்களது பிராந்திய நலன்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக ஒன்றையொன்று நெருக்கிக் கொண்டு விளையாடிய அரசியல் சதுரங்கத்தின் பெறுபேறுதான் மாகாணசபை முறைமை. இலங்கையில் இனப்பிரச்சினையில் சம்பந்தப்பட்ட பெரும்பான்மை சிங்களவர்களும் இரண்டாவது பெரும்பான்மை சமூகமான தமிழர்களும், மூன்றாவது எண்ணிக்கையை கொண்ட இனமாகிய முஸ்லிம்களும் இதனை அன்று எதிர்த்தது வரலாறாகும்.
புலிகளுடன் இந்திய அமைதிப்படை பொருதியதும், சிங்களவர்களின் முக்கியமான பல அரசியல் கட்சிகள் வடகிழக்கு மாகாணசபை தேர்தல்களில் பங்குபற்றாது பகிஷ்கரித்ததும், இலங்கைக்கு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வருகை தந்த இந்தியப் பிரதமரை ஒரு படை வீரர் தாக்க முனைந்ததும், பின்னர் இலங்கை, இந்தியப் பிரதமர்கள் இருவரும் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டதும், ஆரம்பத்திலேயே முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மர்ஹும் அஷ்ரப் இந்த ஒப்பந்தமானது முஸ்லிம்களின் முதுகில் கத்தியால் குத்தப்பட்ட துரோகத்தனமானதொன்று எனக்கூறி அதிருப்தியை வெளிப்படுத்தியதும் வரலாற்றுச் சான்றுகளாகும்.
சமாதானம் என்ற போர்வையில் திணிக்கப்பட்ட இந்த ஒப்பந்தம் மக்களின் நன்மைக்காக அன்றி இரு நாடுகளின் முறுகல் நிலையில் காய்கள்நகர்த்தப்பட்டு திணிக்கப்பட்ட ஒரு சாசனம் என்பதற்கு மேற்கூறிய சம்பவங்கள் போதுமானவையாகும்.
கேள்வி: ஆனாலும் இந்த ஒப்பந்தப் படி அமைந்த மாகாணசபை முறைமையில் தான் மீண்டும் நாம் தீர்வைத் தேடப்போகின் றோம். உள்நாட்டில் வாழும் இனங்களுக் கிடையில் சமாதானத்தை உறுதிப்படுத்த முனையும்போது இரு நாடுகளுக்கிடையி லான பிராந்திய நலனுக்கான போட்டியானது மீண்டும் நிழல்போல ஏதோ ஒரு வகையில் மூக்கை நுழைக்காது என்பதற்கு என்ன உத்தரவாதமுள்ளது?
பதில்: சிறுபான்மை சமூகங்கள், அதுவும் வடகிழக்கில் மிகப் பெரும்பான்மையாக வாழ்கின்றஇ வாழப்போகின்ற இரண்டு தமிழ்பேசும் சமூகங்களும் இதய சுத்தியுடன் தனியான கூட்டமைப்புகளாக உருப்பெற்று மனம் விட்டு பேசவேண்டும். அவ்வாறான ஒரு சமரசப் பேச்சு இல்லாமல் ஒரு நிரந்தரத் தீர்வை எம்மால் பெற்றுக் கொள்ள முடியாது. தமிழ் முஸ்லிம் சமூகங்களை திருப்திப்படுத்தாத எந்த ஒரு தீர்வுத் திட்டமும் நிரந்தர சமாதானத்தைக் கொண்டுவரப் போவதில்லை. எந்தவொரு தனிப்பட்ட நிகழ்ச்சிநிரல்களுக்கும் ஆட்படாது கட்சிகள் தமது நிலைப்பாடுகளை தாம்சார்ந்த சமூகங்களின் நலன்களை முன்னிறுத்தி தெளிவாக முன்வைக்க வேண்டும். எங்கிருந்தோ ஒரு சமிக்ஞை வரும்வரை காத்திருப்பது போன்று மௌனம் காப்பது வெறும் சந்தேகத்துக்கு வழிவகுக்கும். இறுதிவரை காக்கும் மௌனம் படுகுழியில் வீழ்த்திவிடும்.
கேள்வி: அப்படியானால் தற்போதுள்ள மாகாணசபை அமைப்பு முழுமையான அதி காரப்பரவலுக்கான ஒரு தளமாக அமை யாதா?
பதில்: இலங்கையில் சமூகங்களுக்கிடையில் தோன்றிய இனப்பிரச்சினைக்கான தீர்வாக மாகாணசபை முறை திணிக்கப்பட்ட போது அது சமூக ரீதியான அதிகாரப் பரவலாக்கலா? அல்லது பிராந்தியரீதியான அதிகாரப் பரவலாக்கலா? என்ற மயக்க நிலையே தோற்றுவிக்கப்பட்டது.
முறையான கலந்துரையாடல்கள் சமூகங்களுக்கிடையில் நடாத்தப்படாமல் அரைகுறையாகவே இந்திய – இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
இந்தியாவும் இலங்கையும் பேசும்போது வடக்கு கிழக்குக்கு வெளியில் மாகாண சபைகள் அமைக்கப்படும் என்று எவருமே எதிர்பார்க்கவில்லை. சிங்கள மக்கள் கேட்காமலேயே அவர்களுக்கு மாகாண சபைகள் வழங்கப்பட்டன. நான் தமிழருக்கு விஷேடமாக எதனையும் வழங்கவில்லை. அவர்களுக்குக் கொடுத்தது போன்றே உங்களுக்கும் தந்திருக்கிறேன் என்று சிங்கள மக்களுக்குக் கூறவே ஜே.ஆர். ஜெயவர்தன அவ்வாறு செய்தார்.
அதே வேளை வடக்கும் கிழக்கும் இணைக்கப்படவுள்ள விடயம் அந்த மாகாணங்களில் வாழ்ந்த சமூகங்களுக்கு தெரியாமலேயே இடம்பெற்றது. எனவேதான் இந்தியாவினால் திணிக்கப்பட்ட இத்தீர்வு இங்கு எதையும் சாதிக்கவில்லை. மாறாக பிரச்சினைகளை மேலும் சிக்கல் நிலைக்குக் கொண்டு வந்தது. அது மட்டுமல்லாமல் தீர்வுக்குப் பின் சமாதானத்தை நிலை நாட்டவந்த படையினரும் இங்கு போர் புரியும் ஒரு நிலைக்கு தள்ளப்பட்டனர்.
கேள்வி: இந்திய – இலங்கை ஒப்பந்தம் கிழக்கு முஸ்லிம்களை உள்ளடக்காமல் அவர்கள் மீது திணிக்கப்பட்டது என்றா கூற வருகின்றீர்கள்?
பதில்: ஆம் அது கிழக்கிலுள்ள மக்களுக்கல்லாது பிராந்தியம் எனும் அடிப்படையிலேயே அதிகாரத்தை வழங்கியிருக்கிறது. இத்தகைய அணுகுமுறை பிழையான செயற்பாடாகும். வடக்கில் முஸ்லிம்கள் இருப்பதும் கவனிக்கப்படவில்லை. இந்தியாவும் இலங்கையும் பேச்சுவார்த்தை நடாத்திக் கொண்டிருந்தபோது முஸ்லிம்கள் அழைக்கப்படவில்லை.
அரசும் தமிழ் போராளிகளும் இரு நாடுகளோடும் பேசுகையில் குறை நிறைகள் சமர்ப்பிக்கப்படும் போது முஸ்லிம்களும் சென்றிருந்தனர். அந்த உடன்படிக்கையின் முகத்தோற்றமாக ஒப்பந்தம் முடிந்ததும் கைச்சாத்திட்டபின் முஸ்லிம் பிரதிநிதிகள் இந்தியாவுக்கு அழைக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடாத்தப்படும் என்றிருந்தது.
04.05.1986 மற்றும் 19.12.1986ஆம் திகதிகளில் பேசப்பட்ட கருத்துக்கு அமையவே ஒப்பந்தம் அமையும் என்றும் அதில் காணப்பட்டது. (பந்தி 2-2-1-5) இது பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமாயின் இந்திய ராஜதந்திரிக
ளான நட்வார் சிங்கும், சிதம்பரமும் 1986 இல் கூறிய கருத்துக்களை மீட்டுக்கொள்ளலாம்.
கேள்வி: அப்படியானால் இந்த உத்தரவாதம் மீறப்பட்டுள்ளது என்றா கூற வருகின்றீர்கள். முஸ்லிம்கள் ஏமாற்றப்பட்டார்களா?
பதில்: ஆம், முஸ்லிம்கள் அழைக்கப்படவும் இல்லை. எமது அபிப்பிராயம் கோரப்படவுமில்லை. எம்மைப் புறந்தள்ளி விட்டு ஒரு தலைப்பட்சமாகவே தாமே வகுத்துக் கொண்ட தீர்மானத்தை எம் தலைமீது திணித்து விட்டார்கள்.
கேள்வி: மாகாண, மாவட்ட எல்லைகள் உங்களின் வேண்டுகோளிற்கமைய மாற்றியமைக்கப்பட வேண்டும் என்கின்றீர்களா?
பதில்: சமூகங்கள் திருப்திப்படுத்தப்பட வேண்டுமானால் அதனைச் செய்வதில் ஒரு தவறும் இல்லை. நமது நாட்டிலுள்ள மாகாணசபை மற்றும் மாவட்ட எல்லைகள் எல்லாம் மாற்ற முடியாதவையல்ல. ஒரு முழுமையான அரசியல் அமைப்பை உருவாக்கும் நோக்கோடு நமது பாராளுமன்றம் ஒரு அரசியல் நிர்ணய சபையாக மாற்றமடைந்திருக்கும் இன்றைய காலகட்டத்தில் சமாதானத்தையும் சகவாழ்வையும் வலுப்படுத்துவதற்காக தேவையான மாற்றங்களை செய்வதில் என்ன தவறு உள்ளது?
தற்போதுள்ள மாகாண எல்லைகளாவன நிர்வாகத்தை சிரமமின்றி செய்வதற்காக காலனித்துவ அரசாங்கங்களால் அவ்வப்போது போடப்பட்டவைதான்.
ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தை அடக்கி ஆளும் நோக்குடன் மாவட்ட எல்லைகள் மாற்றி அமைக்கப்பட்ட சம்பவம் கிழக்கிலும் வடக்கிலும் இடம்பெற்ற கறைபடிந்த வரலாறு நம் நாட்டில் பதியாமலில்லை. எனவேதான் இவ்வாறான பாகுபாடுகள் சீர்திருத்தப்பட்டு சிறுபான்மை சமூகங்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் நிர்வாகங்கள் சீரமைக்கப்பட வேண்டும். காணிப்பகிர்வுஇ மற்றும் தொழில் வாய்ப்புக்கள் வழங்குதல்இ வளப்பங்கீடுகள் அனைத்தும் மாவட்டங்களில் வாழும் சிறுபான்மை சமூகங்களின் இனப்பரம்பலுக்கு ஏதுவாக வழங்கப்படுவதற்கான சட்ட மூலங்கள் புதிய யாப்பு மாற்றத்தின்போது உள்வாங்கப்பட வேண்டும். மாவட்ட எல்லைகள் திருப்தியான வகையில் மாற்றியமைக்கப்பட வேண்டும். 1871ஆம் ஆண்டிலிருந்து 2012 ஆம் ஆண்டு வரை 16 மாவட்டங்களே தொடர்ந்து ஒரே எல்லையைக் கொண்டவையாகும். ஏனைய மாவட்டங்கள் எல்லாம் காலக்கிரமத்தில் எல்லைகள் மாற்றப்பட்ட வையாகும்.
கேள்வி: அரசியல் மாற்றத்தின் போது காணிப்பிரச்சினைகளின் தீர்வுகள் உள்ளடக்கப்பட வேண்டும் எனக்கூறியுள்ளீர்கள். எவ்வாறான தீர்வுகளை நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்?
பதில்: இனப்பிரச்சினைத் தீர்வின்போது தவிர்க்க முடியாத மிகவும் ஆழமாகப் பதிய வேண்டிய ஒரு கூறுதான் நிலம் சம்பந்தமான விடயங்களாகும். காணி உரிமையும்இ பங்கீட்டு முறைகளும் பிராந்திய மக்களின் உரிமையாகும். மத்தியில் உள்ள அரசு கலப்படமற்ற தெளிவான சட்டதிட்டங்களை புதிய யாப்பில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தெளிவற்ற பங்கீட்டு முறைகளால் தான் சிறுபான்மை சமூகங்கள் வாழ்ந்த மாகாணங்களிலும் மாவட்டங்களிலும் எல்லைகள் தன்னிச் சையாக மாற்றியமைக்கப்பட்டன. நிர்வாகத் திணிப்புக்கள் இறுக்கமாக இன்னும் கடைப் பிடிக்கப்படுகின்றன.
கிழக்கு மாகாணத்தில் மட்டும் சுமார் 60 ஆயிரம் ஏக்கர் காணிகளை முஸ்லிம்கள் இழந்துள்ளதாக பதிவுகள் உள்ளன. அம் பாறை மாவட்டத்தில் மட்டும் சுமார் 32 ஆயி ரம் ஏக்கர் காணிகளை முஸ்லிம்கள் இழந் துள்ளதாக முறைப்பாடுகள் உள்ளன. இவை பற்றிய பின்வரும் காணிகள் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் 100 நாள் அரசாங்கத்தின் போது என்னால் பிரதமருக்கு பாரப்படுத்தப்பட்டன.
வட கிழக்கு முஸ்லிம்களின் காணிப்பிரச் சினை பற்றி ஆராய ஒரு விசேட அதிகாரம் பொருந்திய சுயாதீனமான காணிக் கச்சேரி அமைக்கும்படி கோரிக்கை விடுத்தும் அவரால் இன்றுவரை அது நிறைவேற்றப்படவில்லை.
இவ்வாறான முக்கிய பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் அதற்கான தீர்வுகளை உள் ளடக்கப்படாமல் பிரச்சினைக்குக் காரண மான விடயங்கள் ஒதுக்கப்படாமல் நிர் வாக ரீதியானஇ சட்டரீதியான ஓட்டைகள் அடைக்கப்படாமல் எவ்வாறு பிரச்சினைகள் முற்றுப்பெறும்? எனவேதான் ஒரு முழுமை யான இதயசுத்தியான அப்பழுக்கற்ற சுத்து மாத்தில்லாத அரசியல் யாப்பினூடான தீர்வுப் பொதியினையே எமது மக்கள் எதிர்பார்த் துள்ளனர்.
நன்றி - வீரகேசாி வார வெளியீடு
0 comments:
Post a Comment