• Latest News

    September 24, 2016

    47 அத்தியாவசிய மருந்துகளின் விலைகளை குறைக்க தீர்மானம் - அமைச்சர் ராஜித சேனாரத்ன

    தேசிய ஔடத கொள்கையின் கீழ் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இருதய மற்றும் நீரிழிவு நோய் உட்பட 47 அத்தியாவசிய மருந்துகளின் விலைகளை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
    அத்துடன் எதிர்வரும் காலங்களில் புதிய மருந்துகளும் அறிமுகம் செய்து வைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
    சேனக பிபிலேவின் நினைவு தினத்தையொட்டி நேற்று கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே குறித்த விசேட அறிவிப்பினை அமைச்சர் வௌியிட்டார்.
    அங்கு அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் குறிப்பிடுகையில்,
    தேசிய ஔடத கொள்கை தயாரித்து அதனை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு சேனக பிபிலே பெரும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். இதற்காக தேசிய ஔடத சட்டமூலம் தயாரிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் சுமார் 40 வருடங்களாக அதனை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாமல் போனது.
    கடந்த ஆட்சியின் போதும் தேசிய ஔடத சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு அப்போதைய சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன பாரிய முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் ஔடத தேசிய கொள்கை சட்டமூலம் கொண்டு வர முடியாமல் போனது. அதற்கு பெரும் தடைகள் ஏற்பட்டன. அப்போது ஔடத சட்டமூல பணிகள் முழுமையாக நிறைவடைந்து நிறைவேற்றுவதற்கான செயற்பாடு மாத்திரமே இருந்தது. இருந்தாலும் பாராளுமன்றத்திற்கு கொண்டு வர முடியவில்லை.
    எனினும் தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கனவின் பயனாக நல்லாட்சியில் குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.
    இதன்விளைவாக மிகவும் அத்தியாவசிய மருந்துகளின் விலையை குறைக்க போவதாக அறிவித்திருந்தோம். இந்நிலையில் தேசிய ஔடத கொள்கையை தயாரித்த சேனக பிபிலேவின் நினைவு தினத்தின் போது அதற்கான முக்கிய அறிவிப்பை வெளியிட தீர்மானித்தோம்.
    இதன்பிரகாரம் தேசிய ஒளடத கொள்கையின் கீழ் இருதய நோய் மற்றும் நீரிழிவு உள்ளிட்ட 47 அத்தியாவசிய மருந்துகளின் விலைகளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளோம். மேலும் மிகவும் விலை உயர்ந்த மருந்துகளுக்கு நிர்ணய விலையை ஏற்படுத்தவுள்ளோம்.
    அத்துடன் ஔடத கொள்கையின் கீழ் புதிய வகையான மருந்துகளை அறிமுகம் செய்யவும் திட்டமிட்டுள்ளோம். இதேவேளை தனியார் வைத்தியசாலைகளின் கட்டண கண்காணிப்புகளை தேசிய ஔடத கொள்கையின் கீழ் கொண்டு வரவுள்ளோம் என்றார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: 47 அத்தியாவசிய மருந்துகளின் விலைகளை குறைக்க தீர்மானம் - அமைச்சர் ராஜித சேனாரத்ன Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top