நாடு சுதந்திரமடைவதற்கு முன்பிருந்தே இன்று வரை முஸ்லிம்கள் ஒரு தனியான தேசிய இனம் என்பதை ஏற்றுக் கொள்வதற்கு மாற்று இனத்தவர்களில் சிலர் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். இலங்கையில் வாழுகின்ற சிங்களவர்கள் ஆரியர்களின் பரம்பரையினர். இவர்கள் இலங்கைக்கு வருகை தருவதற்கு முன்னரே அரேபியர்கள் வந்து விட்டதாக 'வில்லியம் கைகர்' என்பவர் குறிப்பிடுகின்றார். ஆராய்ச்சியாளர் கலாநிதி பாலேந்திரா, கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக முஸ்லிம்கள் இலங்கையில் வாழ்ந்து வருகின்றமையால் வேடர்கள் ஏனைய பழங்குடிகள் போன்று அவர்களும் இந்நாட்டு குடிகளே என்று குறிப்பிட்டுள்ளார். இலங்கை மன்னர்களின் ஆட்சிக் காலங்களை எடுத்து நோக்கினாலும் முஸ்லிம்களின் தாயகம் இலங்கை என்பதை மிகத் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
மன்னர்களின் ஆட்சியில் முஸ்லிம்கள் மிகவும் கண்ணியப்படுத்தப்பட்டுள்ளார்கள். மன்னர்களின் ஆலோசகர்களாகவும், வெளிவிவகாரங்களுக்கு பொறுப்பாளர்களாகவும் பல்வேறு பதவிகளையும் அக்கால இலங்கை மன்னர்கள் முஸ்லிம்களுக்கு வழங்கியுள்ளார்கள்.
இவ்விதமாக முஸ்லிம்களின் வரலாறு இருந்தாலும், பொதுபல சேனா போன்ற இனவாத அமைப்புக்கள் முஸ்லிம்கள் இந்த நாட்டில் வாழ வந்தவர்கள். அவர்களுக்கு விசேட உரிமைகள் எதுவும் கிடையாதென்று சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். இதேவேளை, ஒரு சில தமிழ் தலைவர்களும் முஸ்லிம்களை தேசிய இனமாக ஏற்றுக் கொள்ளாத நிலை இன்றும் காணப்படுகின்றது.
முஸ்லிம்கள் பெரும்பாலும் தமிழை தாய் மொழியாகக் கொண்டுள்ளார்கள். இதனால், முஸ்லிம்கள் மொழியின் அடிப்படையில் தமிழர்கள் என்று அடையாளப்படுத்துவதற்கு முனைந்துள்ளார்கள்.
முஸ்லிம்களை இஸ்லாமியத் தமிழர்கள் என்று அழைக்க முற்பட்டார்கள். 1885ஆம் ஆண்டு சட்டவாக்கப் பேரவையில் சேர்.பொன்.இராமநாதன் உரையாற்றுகையில், 'இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றும் தமிழர்கள் தமிழ்த் தேசிய இனத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் அவர்களுக்குத் தனியான பிரதிநிதித்துவம் வழங்குதல் தவறானது' என வாதிட்டார்.
இதனை அப்துல் அஸீஸ் போன்ற முஸ்லிம் தலைவர்கள் எதிர்த்தார்கள். இதன் காரணமாக 1889ஆம் ஆண்டு சட்ட நிருபண சபைக்கு எம்.சீ.அப்துல் ரஹ்மான் நியமிக்கப்பட்டார். இதன் மூலமாக முஸ்லிம்கள் பெரும்பாலும் தமிழை பேசினாலும் , அவர்கள் இலங்கையில் வாழும் தேசிய இனங்களில் ஒன்று என்பதனை காலனித்துவ ஆட்சியாளர்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்பதனை காட்டுகின்றது.
இஸ்லாம் மார்க்கத்தை பின்பற்றுகின்றவர்கள் யாராக இருந்தாலும், எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்த மொழியை பேசினாலும் அவர்கள் முஸ்லிம்கள் என்றுதான் அழைக்கப்படுகின்றார்கள்.
முஸ்லிம்கள் தங்களை மதத்தின் அடிப்படையில்தான் அடையாளப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். இதில் எந்த விட்டுக் கொடுப்பையும் செய்வதற்கு முஸ்லிம்கள் தயாரில்லை. இந்த நிலைப்பாட்டில்தான் இலங்கை முஸ்லிம்களும் உள்ளார்கள்.
இந்நிலையில், அண்மையில் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், முஸ்லிம்கள் அரசியல் காரணங்களுக்காக தமது அடையாளம் மதம் சார்ந்தது, மொழி சார்ந்தது அல்ல என்று கூறி வருகின்றனர். கிழக்கு வாழ் முஸ்லிம்கள் தமிழ் மொழி பேசும் போதும், தமிழ் மொழியில் கவிதைகள் எழுதி பாடும் போதும் அவர்களின் கலை அடையாளமும் மொழி சார்ந்தது என்று சொல்லத் தோன்றுகின்றது என மட்டக்களப்பில் நடைபெற்ற தமிழ் மக்கள் பேரவையின் முத்தமிழ் விழாவில் உரையாற்றிய போது தெரிவித்துள்ளார்.
வடமாகாண முதலமைச்சரின் இக்கருத்து முஸ்லிம்களிடையே விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழர்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையாக செயற்பட்டு தமது உரிமைகளை வென்றெடுக்க வேண்டுமென்ற சிந்தனை ஏற்பட்டுக் கொண்டிருக்கும் இன்றைய அரசியல் சூழலில், வடமாகாண முதலமைச்சரின் இக்கருத்து தமிழர்கள் 1885ஆம் ஆண்டு சேர். பொன்.இராமநாதன் முன் வைத்த கருத்திலிருந்து இன்னும் விடுபடவில்லை என்பதனைக் காட்டுகின்றது.
இலங்கையில் ஆயுதப் போராட்டம் உச்சக் கட்டத்தில் இருந்த காலத்திலும், அதற்கு முன்னரும் முஸ்லிம்கள் தமிழ் மொழியை பேசுகின்றவர்கள். அவர்கள் தனித்துவமானதொரு இனமல்ல. அவர்களுக்கு தனியான அதிகாரங்கள் வழங்க வேண்டியதில்லை என்று தெரிவிக்கப்பட்டது. பின்னர் இக்கருத்திலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தம்மை விடுவித்து முஸ்லிம்கள் ஒரு தனித்துவமான இனம் என்பதனை ஏற்றுக் கொண்டார்கள். இதன் பின்னர் தமிழ், முஸ்லிம் மக்களிடையே உறவுகள் பலமடைந்து கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன், முஸ்லிம் கட்சிகளும் இணைந்து கொள்ள வேண்டுமென்று முஸ்லிம்கள் மத்தியில் பரவலான அபிப்பிராயங்கள் ஏற்பட்டன. ஆயினும், முஸ்லிம் கட்சிகள் தங்களின் அரசியல் இருப்புக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவதற்கு முன் வரவில்லை.
முஸ்லிம்கள் தமிழ் மொழியை பேசினாலும், அவர்கள் அரசியல் காரணங்களுக்காக தமது அடையாளமாக மதத்தைக் கொள்ளவில்லை. முஸ்லிம்களுக்கான அரசியல் கட்சிகள் தோற்றம் பெறுவதற்கு முன்னர் முஸ்லிம்கள் தமிழரசுக் கட்சியிலும், ஐ.தே.கவிலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலும் தேர்தலில் போட்டியிட்டுள்ளார்கள்.
இக்கட்சிகளில் போட்டியிட்ட போது தங்களை மதத்தின் அடிப்படையில் அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை. மதத்தின் அடிப்படையில் அடையாளப்படுத்தியிருந்தால் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு தமிழ், சிங்கள வாக்காளர்கள் வாக்களித்திருக்கமாட்டார்கள்.
முஸ்லிம்கள் தமிழை பேசும் அதே வேளை, அவர்களின் கலை, கலாசாரம், பழக்க வழக்கங்கள் தமிழர்களை விடவும் மாறுபட்டதாகவே இருந்து வருகின்றன.
ஆகவே, முஸ்லிம்கள் அரசியல் காரணங்களுக்காக மதத்தை அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை.
முஸ்லிம்கள் தமிழ் மொழியை பேசினாலும், அவர்கள் தனித்துவமான கலை, கலாசாரங்களைக் கொண்ட இனம் என்பதனை ஏற்றுக் கொண்டால்தான் தமிழர்களும், முஸ்லிம்களும் கைகோர்த்துப் பயணிக்க முடியும்.
ஒரு நாட்டின் எல்லைக்குள் வாழ்கின்ற ஒரே மொழியைப் பேசுகின்ற இனங்கள் தங்களுக்கு சுய நிர்ணய உரிமை வேண்டுமென்று கேட்ட வரலாறுகள் பல உள்ளன.
முஸ்லிம்களும்...
(03ஆம் பக்கத் தொடர்ச்சி)
இலங்கையில் சிங்கள மொழி பேசுகின்றவர்கள் தமிழ் மொழி பேசுகின்றவர்களை ஒடுக்கியதனைப் போன்று, ஒரே மொழியை பேசுகின்ற இனங்களின் உரிமைகளை மறுத்து ஒடுக்க எடுத்த நடவடிக்கைகள் அழிவுகளை ஏற்படுத்தியுள்ளமையை உலக வரலாற்றில் காணலாம்.
ஐயர்லாந்து மக்களும் இங்கிலாந்து மக்களும் ஆங்கில மொழியை பேசுகின்ற ஒரே காரணத்திற்காக ஐயர்லாந்து மக்கள் தம்மை ஆங்கிலத் தேசிய இனமாக ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் தங்களை தனித்துவமானதொரு இனம் என்று அடையாளப்படுத்தினார்கள். அவர்கள் தமது தனித்துவத்தைப் பேணுவதற்காக பிரித்தானியாவிலிருந்து பிரிந்து செல்ல எண்ணினார்கள். இதற்காக நீண்ட ஆயுதப் போராட்டத்தை மேற்கொண்டார்கள்.
இவ்வாறு உலகில் ஒரு மொழியை பேசுகின்றவர்கள் தங்களை வேறுபட்ட தனித்துவமான இனமாக காட்டிக் கொண்டிருக்கையில், இலங்கையில் முஸ்லிம்கள் மொழியின் அடிப்படையில் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டுமென்று எண்ணுவது, கருத்துக்களை முன் வைப்பது இனவாத சிந்தனையாகவே இருக்கின்றது. முஸ்லிம்களை ஒரு தனித்துவமான இனமென்று ஏற்றுக் கொள்ளாமையை காட்டுகின்றது.
நாட்டில் நாங்கள் பெரும்பான்மையினர். நாடு எங்களுக்குரியதென்று சிங்களத் தலைவர்கள் செயற்பட்டதன் காரணத்தினால்தான் தமிழர்கள் ஆயுதப் போராட்டத்தை மேற்கொண்டார்கள். இதனால், பல இழப்புக்களை தமிழர்கள் சந்தித்தார்கள். இன்று சிங்களத் தலைவர்களில் ஒரு பகுதியினர் கடந்த கால தவறுகளை உணர்ந்துள்ளார்கள். ஆதலால், தமிழர்கள் முஸ்லிம்கள் ஒரு மொழியை பேசுகின்றார்கள் என்பதற்காக முஸ்லிம்களுக்கு சுயநிர்ணய உரிமைகள் தேவையில்லை என்று கருதக் கூடாது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முஸ்லிம்களுக்கு சுயநிர்ணய உரிமை வழங்க வேண்டுமென்பதகை ஏற்றுக் கொண்டுள்ளது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் இந்த சிந்தனை தமிழ், முஸ்லிம்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. இதில் யாரும் கல் எறிந்து விளையாடுவதனை அனுமதிக்கக் கூடாது.
நாட்டை ஆட்சி செய்த சிங்கள தலைவர்கள் எல்லோரும் இந்நாட்டு மக்கள் என்ற நல்ல சிந்தனையுடன் செயல்பட்டிருந்தால், அவர்களுக்குரிய உரிமைகளை வழங்கி இருந்தால், இன்று இனங்கள் தங்களுக்கு சுயநிர்ணய உரிமை வேண்டுமென்று கோரிக்கைகளை முன் வைக்கும் நிலை ஏற்பட்டிருக்காது. இலங்கை மிகப் பெரிய பொருளாதாரத்தைக் கொண்டதாக இருந்திருக்கும்.
இந்நாடு சிங்களவர்களுக்குரியதென்ற விவாதங்கள் இன்றைய நவீன உலகில் ஏற்றுக் கொள்ள முடியாததாகும். இந்த விவாதத்தை ஏற்றுக் கொள்வதாக இருந்தால், இந்நாடு சிங்களவர்களின் நாடு என்று ஏற்றுக் கொள்ள முடியாது. இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஆதிக் குடிகளுக்குத்தான் இந்நாடு சொந்தமாகும்.
மேலும், அமெரிக்காவும், கனடாவும் செவ்விந்தியர்களுக்கே உரித்தானதாக இருக்க வேண்டும். அவுஸ்திரேலியா அப்ரோஜீன் இன மக்களுக்கே உரித்தானது. இந்தியா திராவிடர்களுக்கே உரித்தானது என்ற வாதங்களையும் முன்வைக்கலாம். இவ்வாறான வாதங்களுக்கு அப்பால் தேசிய ஒற்றுமையை வளர்க்க வேண்டும். இனங்களுக்கு இடையே ஐக்கியத்தை ஏற்படுத்த வேண்டும். யார் பூர்வீகக் குடிகள் என்பதும், ஆண்ட பரம்பரை என்ற கருத்தும் தேசியத்திற்கு எதிரானது. நிலப்பிரபுத்துவ சிந்தனைக்குரியது.
தென் இத்தாலியில் குடியேறிய இந்தியர்கள் இன்று அடையாளம் தெரியாமல் இத்தாலியர்கள் ஆகிவிட்டார்கள். இதே போன்று துலூஸ் போன்ற பிரஞ்சு நகரங்களில் வாழ்ந்த வட ஆபிரிக்க அரேபியர்கள் பிரஞ்சுக்காரர்களாகவே மாறிவிட்டார்கள். தொழிலுக்காக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றவர்கள், கல்விக்காக சென்றவர்கள் அந்நாட்டின் பிரஜைகளாகி விட்டார்கள். இவ்வாறு உலகில் மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கையில் இலங்கை பௌத்தவர்களுக்கு சொந்தம் என்ற விவாதங்கள் காலத்திற்கு பொருத்தமற்றது.
ஆகவே, இவ்வாறு மாற்றங்கள் உலகில் ஏற்பட்டுக் கொண்டிருக்கையில் பௌத்தர்கள் இந்நாடு எங்களுக்கு மாத்திரம் உரித்தானது என்ற சிந்தனையிலிருந்து விடுபட்டு, இந்நாடு இங்கு வாழும் அனைவருக்கும் சொந்தமானது. இது எங்கள் நாடு என்ற பற்றுதலுடன் வாழ வேண்டும். மேலும், முஸ்லிம்கள் தமிழை பேசுகின்றார்கள் என்பதற்காக அவர்களின் தனித்துவத்தை புறக்கணிக்கக் கூடாது.
ஒரு இனம் தமக்கான தனித்துவத்தையும், கலைகளையும், கலாசாரத்தையும், விழுமியங்களையும் பாதுகாத்துக் கொள்வது அவசியமாகும். ஒரு இனம் தங்களின் கலை, கலாசாரத்தை உறுதியாக பேணிப் பின்பற்றாவிட்டால், குறிப்பிட்ட அவ்வினம் வேறு ஒரு இனத்தின் கலை, கலாசாரத்தைப் பின்பற்றும் சூழல் ஏற்படும். அந்த வகையில் முஸ்லிம்கள் தங்களது கலை, கலாசாரத்தை, விழுமியங்களை பேணிக் கொள்வதில் இறுக்கமான கொள்கைகளைக் கொண்டவர்கள். ஒரு முஸ்லிம் தம்மை மொழியால் அடையாளப்படுத்துவதில்லை. மதத்தால்தான் அடையாளப்படுத்துவர். முஸ்லிம்கள் தங்களின் கலை கலாசாரத்தை மற்றொரு இனத்திற்கு ஏற்ப பின்பற்ற முடியாது. அவ்வாறு பின்பற்றினால் முஸ்லிம்கள் தங்களின் தனித்துவத்தை இழக்க வேண்டியேற்படும். இன்று முஸ்லிம்கள் இலங்கையில் அரசியல், பொருளாதார ரீதியில் பந்தாடப்பட்டுக் கொண்டிருப்பதற்கு , சுயநலப் போக்குடைய முஸ்லிம் தலைவர்கள்தான் காரணமாகும்.
Virakesari Weekly -

0 comments:
Post a Comment