தமிழகத்துக்கு காவிரி நீரை திறக்கக் கோரும் உச்ச
நீதிமன்ற தீர்ப்பை ஆட்சேபித்து கர்நாடக சட்டப் பேரவையில் அனைத்து
கட்சியினரின் ஆதரவுடன் சிறப்பு தீர்மானம் ஒருமனதாக
நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதில் காவிரி நீரை கர்நாடகாவில் குடிநீர் தேவைக்கு
மட்டுமே பயன்படுத்த வேண்டும் என கூறியதன் மூலம், தமிழகத்துக்கு நீரை
திறக்க வாய்ப்பில்லை என மறைமுகமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான மனுவை விசாரித்த உச்ச
நீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை, ‘‘தமிழகத்துக்கு செப்டெம்பர்
21 முதல் 27 ஆம் திகதி வரை தினமும் விநாடிக்கு 6 ஆயிரம் கன அடி காவிரி
நீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும். 4 வாரத்துக்குள் மத்திய அரசு
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும்’’ என உத்தரவிட்டது.
ஆனால் கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளில் இருந்து
தமிழகத்துக்கு திறக்கப்பட்ட காவிரி நீர் கடந்த 20 ஆம் திகதி
நிறுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து காவிரி விவகாரம் குறித்து
விவாதிப்பதற்காக கர்நாடக சட்டப்பேரவை மற்றும் சட்ட மேலவையின்
சிறப்பு கூட்டம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை கூடியது. இதில்
சிறப்பு தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. அதில்,
‘‘கர்நாடகாவில் வறட்சி நிலவுவதால் காவிரியின்
குறுக்கே உள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய 4
அணைகளிலும் 27.6 டி.எம்.சி. நீர் மட்டுமே இருப்பு உள்ளது. இந்த நீரை
பெங்களூர் மாநகரம் மற்றும் காவிரி நீர்ப்பாசனப் பகுதிகளின்
குடிநீருக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். வேறு எந்த
காரணத்துக்கும் இந்த அணைகளின் நீரை பயன்படுத்தக் கூடாது. தற்போதுள்ள
இந்த குறைந்த அளவிலான நீரைக் கொண்டே 2017 ஜனவரி 31 ஆம் திகதி
வரையிலான குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும்’’ என
குறிப்பிடப்பட்டிருந்தது.
தீர்மானம் குறித்து முதல்வர் சித்தராமையா பேசுகையில்,
கர்நாடகாவில் அடுத்த மழைக் காலம் வரை காவிரி
நீர்ப்பாசன பகுதி மக்களின் குடிநீருக்கு மட்டும் 24.11 டி.எம்.சி.
நீர் தேவைப்படுகிறது. போதிய மழை இல்லாததால் கிருஷ்ணராஜசாகர்,
ஹேமாவதி உள்ளிட்ட 4 அணைகளும் நீரின்றி வறண்டு மிக மோசமான நிலையில்
இருக்கின்றன. மைசூரு, மண்டியா, சாம்ராஜ்நகர், ராம்நகர்
மாவட்டங்களின் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய அவல நிலையில் தமிழகம் இல்லை. மேட்டூர் அணையில்
இன்றைய நிலவரப்படி 52 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது. தமிழக
விவசாயிகள் ஏற்கெனவே ஒரு போகம் வேளாண்மையை முடித்துவிட்டனர்.
தற்போது சம்பா பயிருக்காக மீண்டும் நீரை கேட்கின்றனர். நாங்கள்
உயிருடன் வாழ்வதற்கே குடிநீர் இல்லாதபோது, சம்பா பயிர்களுக்கு
எப்படி நீரை விட முடியும். அடுத்த ஆண்டு வரை நாங்கள் யாரிடம் போய்
கையேந்துவோம்?
கர்நாடகாவில் உள்ள அனைவருக்கும் நீதிமன்றங்கள் மீது
மிகுந்த மரியாதை உள்ளது. கனவிலும் நீதிமன்ற உத்தரவை மீறும் எண்ணம்
கர்நாடக அரசுக்கு இல்லை. கர்நாடகாவில் சில ஆண்டுகளாக தென்மேற்கு
பருவமழை பொய்த்துப்போகிறது. ஆனால் கடந்த 50 வருடங்களில்
ஒருமுறைகூட தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை பொய்க்கவில்லை.
அடுத்த மாதமும் தவறாமல் வடகிழக்கு பருவமழை அங்கே
பொழியும். இதனால் அங்கு சம்பா சாகுபடியும், குறுவை சாகுபடியும்
சிறப்பாக நடைபெறுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் 3 மீட்டர் தோண்டினாலே
நிலத்தடி நீர் கிடைக்கிறது. கர்நாடகாவில் ஆயிரம் அடிக்கு கீழே
தோண்டினால்தான் நிலத்தடி நீர் கிடைக்கிறது. ஆனாலும் கர்நாடகாவிடம் காவிரி
நீரை பெறுவதை தமிழகம் வாடிக்கையாக கொண்டுள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment