இரண்டாம் உலக மகாயுத்தத்தின் முடிவு நாட்களில்
அமெரிக்கா, சோவியத் யூனியன், பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் சீனா ஆகிய
நாடுகள் 1944 ஓகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதத்துக்கு இடைப்பட்ட காலத்தில்
வாஷிங்டனில் சந்தித்து உருவாக்கிய அமைப்பே ஐக்கிய நாடுகள் அமைப்பு.
அப்போது இருந்த லீக் ஒப் நேஷன்ஸுக்கு பதிலாக இது உருவாக்கப்பட்டது.
இதற்கான சாசனத்தை எழுதும்போது இந்தப் பெரிய தேசங்கள்
தமது சக்தியையும் நலனையும் தக்கவைத்துக் கொள்ளும் வகையிலேயே நடந்து
கொண்டன. அவர்களுடைய பொருளாதார, அரசியல் நலன்களுக்கு உலகம் இசைந்து
செல்லக்கூடிய வகையிலேயே ஐக்கிய நாடுகள் அமைப்புக்கான கட்டமைப்பு
மற்றும் விதிமுறைகள் என்பனவற்றை அவை உருவாக்கின.
கடைசியாக 1945 அக்டோபர் 24இல் ஐக்கிய நாடுகள் சபை
செயற்படத் தொடங்கியபோது, அதன் அங்கத்துவ நாடுகள் தமக்கிடையிலான
பிணக்குகளை சமாதானமான முறையில் தீர்த்துக் கொள்ளும், மேலும் உலகம் ஒரு
சமாதானமான இடமாக மாறும் என்ற நம்பிக்கை உருவாக்கப்பட்டது.
ஆனால், இந்த நம்பிக்கை உருவாக்கப்பட்டு இரண்டு வருட
காலத்திலேயே ஐ.நா. மரணித்துவிட்டது. சர்வதேச நீதி சிதைவடைந்தது.
மனித இனம் அச்சுறுத்தலுக்காளானது. காரணம், 1947 நவம்பர் 29இல்
பலஸ்தீன பூமியில் இஸ்ரேலை ஸ்தாபிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றுமாறு
அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ஹரி எஸ். ட்ரூமன் ஐக்கிய நாடுகள் சபையை
மிரட்டினார். இந்த தீர்மானம் எல்லாவிதமான தார்மிகக்
கொள்கைகளையும் சட்டங்களையும் மீறியதாகும். பலஸ்தீன மண்ணின்
மைந்தர்களும் புதல்விகளும் அங்கிருந்து அண்டை நாடுகளின் அகதி
முகாம்களை நோக்கி துரத்தியடிக்கப்பட்டனர். அதை மீறி அங்கு
இருந்தவர்கள் இரண்டாம்தரப் பிரஜைகளாக்கப்பட்டனர்.
பெரும் நம்பிக்கையோடு உருவாக்கப்பட்ட ஐ.நா. சபையை
பெரிய நாடுகள் தமது தேவைக்கேற்ப மிரட்டிப் பயன்படுத்தும் முறை
இங்கிருந்துதான் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து வந்த காலங்களில்
அமெரிக்கா தலைமையிலான பெரிய சக்திகள் ஐ.நாவை அவற்றின் கருவியாகப் பல
தடவைகளில் பாவித்து வந்தன. முஸ்லிம் நாடுகளை அழிக்கவும்
இலட்சக்கணக்கான முஸ்லிம்களை கொன்று குவிக்கவும், இன்னும்
இலட்சக்கணக்கான முஸ்லிம்களை அகதி முகாம்களுக்குள் சிறைவைக்கவும்,
முழு மத்திய கிழக்கையும் சின்னாபின்னமாக்கவும் கூட ஒரு கருவியாக
ஐ.நா. பயன்படுத்தப்பட்டுள்ளது.
பின்னர் 1967 ஆக்கிரமிப்பு யுத்தத்தை அடுத்து எகிப்தின்
சினாய் பாலைவனப் பகுதி, காஸா பள்ளத்தாக்கு பகுதி, மேற்கு கரை பகுதி,
ஜோர்தானின் கிழக்கு ஜெரூஸலம், சிரியாவின் கோலான் குன்று
என்பனவற்றையும் இஸ்ரேல் ஆக்கிரமித்துக் கொண்டது. இந்த
ஆக்கிரமிக்கப்பட்ட பூமிகளில் இஸ்ரேல் தனது நிலையை உறுதியாகத் தக்க
வைத்துக்கொள்ள அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகள்
முழுமையான ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கின. இஸ்ரேலிய
பாராளுமன்றமான நெஸட் 1981 டிசம்பரில் சிரியாவின் கோலான் குன்றை
தன்னோடு இணைத்துக் கொள்ளும் சட்டமூலத்தை நிறைவேற்றியது. அதன் பிறகு
ஒரு மாதம் கழித்து இந்தப் புதிய இணைப்புக்களை எதிர்க்கும் வகையில்
இஸ்ரேலுக்கு எதிராகத் தடைகளை கொண்டு வரும் பிரேரணை ஐ.நாவில் அறிமுகம்
செய்யப்பட்டபோது அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி
அதை தடுத்தது.
ஈரானுக்கும் ஈராக்கிற்கும் இடையில் நீடித்த எட்டு வருட
யுத்தத்தின் போது பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள்
கொல்லப்பட்டனர். இரு நாடுகளுக்கும் இடையிலான உட்கட்டமைப்புக்கள்
பல உருத் தெரியாமல் அழிக்கப்பட்டன. இந்த எட்டு வருட காலமாக ஐ.நா.
எங்கிருந்தது என்பது கூட எவருக்கும் தெரியாது.
1989இல் சோவியத் யூனியன் கட்டமைப்பு சிதைவுற்றபின்
நிலைமை மேலும் மோசமானது. உதாரணத்துக்கு 1990 வளைகுடா
நெருக்கடியின்போது ஐ.நாவை அமெரிக்கா கடத்திச் சென்று வைத்திருந்தது
என்றுதான் சொல்ல வேண்டும். தீர்மானங்களை நிறைவேற்றுவதில்
அமெரிக்கா தனிப்பெரும் ஆதிக்கத்தை வெளிப்படுத்தியது. அன்று முதல்
ஐ.நா. தீர்மானங்கள் புனிதமானவையாகவும் சர்வதேச சட்டங்களின் ஒரு
அங்கமாகவும் கருதப்பட்டன.
1990ஓகஸ்ட் இரண்டில் குவைத் மீதான ஆக்கிரமிப்புக்கும்
1991 ஜனவரி 17இல் ஈராக் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த
தொடங்கியதற்கும் இடையில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில்
அடுத்தடுத்து அவசரஅவசரமாகக் குறுகிய கால இடை வெளிகளுக்குள் 12
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. குவைத்திலி ருந்து ஈராக்கிய
படைகளை அகற்றிக்கொள்ள படைப் பலத்தை பாவிக்க மட்டுமே ஐ.நா.
அங்கீகாரமளித்தது. ஆனால் இதை மீறி இன்னொரு ஐ.நா. தீர்மானத்தைப்
பயன்படுத்தி அமெரிக்கா ஈராக்கை ஆக்கிரமித்து அந்த நாட்டின் மீது
குண்டுமழை பொழிந்து நாட்டையே சின்னாபின்னப்படுத்தியது. இதன்
தொடராக அந்த நாட்டின் மீது யுத்த சூனிய வலயத்தை பியோகித்து ஈராக்கை
மூன்று துண்டுகளாக அமெரிக்கா பிரித்தது.
அதனைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் பிரிட்டன், பிரான்ஸ்,
ரஷ்யா மற்றும் நாடுகளின் ஆதரவோடு அமெரிக்கா ஈராக்கை மேலும் சிதைக்கும்
வகையில் அந்த நாட்டின் மீது தடைகளைக் கொண்டுவரும் பிரேரணைகளை அமுல்
செய்ய ஐ.நாவை தூண்டியது. இந்த தடைகள் மூலம் ஈராக் மட்டுமன்றி ஈரான்,
சூடான், லிபியா, ஆப்கானிஸ்தான் என எல்லா முஸ்லிம் நாடுகளும் இலக்கு
வைக்கப்பட்டன. இந்த தடைகள் இந்த நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு
முடிவில்லாத துயரங்களையும் மரணத்தையும் கொண்டு வந்தன.
பலஸ்தீன மக்களுக்கு எதிராக இதுவரை இஸ்ரேல் 60க்கு
மேற்பட்ட தடவைகள் யுத்தக் குற்றங்களைப் புரிந்துள்ளது. இஸ்ரேலுக்கு
எதிராக 60க்கு மேற்பட்ட தீர்மானங்களை ஐ.நா. நிறைவேற்றியுள்ளது.
ஆனால் அதில் ஒன்றுகூட இதுவரை அமுல் செய்யப்படவில்லை. இவற்றுள்
தீர்மானம் இலக்கம் 242 மற்றும் 338 என்பன பிரதானமானவை. 1967 ஜுன்
யுத்தத்தின் மூலம் இஸ்ரேல் கைப்பற்றிய அரபு நாடுகளின்
பகுதிகளிலிருந்து அது விலகிக்கொள்ள வேண்டுமென இந்தத்
தீர்மானங்கள் வலியுறுத்துகின்றன.
ஐக்கிய நாடுகள் அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டது முதல்
இஸ்ரேலின் இணைப்புகளுக்கு எதிராக ஏதோ ஒரு வகையில் மாறி மாறி
நூற்றுக்கணக்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இவை
எல்லாமே ஐ.நாவின் பழைய ஆவணங்கள் பகுதியில் தூசு படிந்த நிலையில்
இன்னமும் காணப்படுகின்றன.
மூன்றாம் உலக நாடுகளுக்கு எதிரான குற்றங்களுக்குத்
துணை போவதில் ஐ.நாவும் ஒரு பங்காளியாகத் தொடர்ந்து செயற்பட்டு
வந்துள்ளது. உதாரணத்துக்கு பொஸ்னியா மோதலின் போது ஐ.நாவால்
பாதுகாப்பு வலயம் என பிரகடனப்படுத்தப்பட்ட செரப்ரனிகாவுக்கு
அருகிலுள்ள பகுதிக்குள்தான் சுமார் எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட
முஸ்லிம் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.
நூற்றுக்கணக்கான முஸ்லிம் பெண்களின் கற்பும் இதே பகுதிக்குள் வைத்து
தான் சேர்பியர்களால் சூறையாடப்பட்டன. கொன்று
குவிக்கப்பட்டவர்கள் இதே பகுதிக்குள்தான் பாரிய புதை குழிகளுக்குள்
புதைக்கப்பட்டனர்.
செரப்ரனிகாவில் உள்ளூர் பொதுமக்களைப் பாதுகாக்க
நியமிக்கப்பட்ட ஐ.நா. படைபிரிவின் டச்சு படை வீரர்கள் முஸ்லிம்கள்
பலிக்கடாக்கள் போல் அறுக்கப்படுவார்கள் என்பது தெரிந்தும் கூட
அவர்களைப் பிடித்து சேர்பியர்களிடம் கொத்து கொத்தாக ஒப்படைத்தனர்.
மேற்குலகும் ஐ.நா. சபையும் இந்த விடயத்தில் பூரண அமைதி காத்தன. இந்த
அமைதி முஸ்லிம்களுக்கு எதிரான சேர்பியர்களின் படுகொலைக்கான
திறவலானதோர் அங்கீகாரமாகவே அமைந்தது.
பல்கன் பிரதேசத்திலிருந்து முஸ்லிம்களை
அழித்தொழிக்கும் அவர்களது முயற்சியில் பொஸ்னியாவின் மூன்று
லட்சத்துக்கும் அதிகமான முஸ்லிம் ஆண்களையும் பெண்களையும்
சிறுவர்களையும் எந்தவிதமான வயது வித்தியாசமும் பால்
வித்தியாசமும் இன்றி அவர்கள் கொன்று குவித்தனர். இருபது
லட்சத்துக்கும் அதிகமான முஸ்லிம்களை அருகில் உள்ள பயங்கர காட்டுப்
பகுதிகளை நோக்கி விரட்டியடித்தனர். தமது குடும்பத்தவர்கள்
முன்னிலையிலேயே மிருகங்களைவிடக் கேவலமான முறையில் கொன்று
குவிக்கப்பட்ட முஸ்லிம் ஆண்களினதும் பெண்களினதும் அழுகுரலும்
அவலக் குரலும் பூட்ரஸ் பூட்ரஸ் காலியின் (அப்போதைய ஐ.நா. செயலாளர்)
செவிகளுக்கோ அல்லது வாய் கிழிய மனித உரிமைகள் பற்றி பேசும், போதிக்கும்
ஐரோப்பிய தலைவர்களின் செவிகளுக்கோ எட்டவே இல்லை.
இந்த விடயத்தில் ஐ.நா. அதன் நம்பகத்தன்மையை
முழுமையாக இழந்து நின்றது. பொஸ்னியாவுக்கு எதிராக ஆயுத, தடையைக்
கொண்டுவந்து முஸ்லிம்கள் தமது உயிரைப் பாதுகாக்க எதிர்த்து நிற்கும்
உரிமையை கூட அவர்களுக்கு வழங்க மறுத்தது. ஆனால் சேர்பிய
வெறியர்களுக்கு முஸ்லிம்களை கொன்று குவிக்க, சித்திரவதை செய்ய,
கற்பழிக்க, துரத்தி அடிக்க அவர்களின் சொத்துக்களை அழிக்க என
எல்லாவற்றுக்கும் தேவையான ஆதரவு வழங்கப்பட்டது.
இந்தச் சம்பவம், அதாவது பொஸ்னிய படுகொலைகள் ஐ.நாவுக்கு
என்றென்றும் தீராத அவமானத்தை ஏற்படுத்தியது என்பதை
பிற்காலத்தில் ஐ.நா. செயலாளர் நாயகம் கொபி அனான் ஒப்புக்
கொண்டிருந்தார். “பாதிக்கப்பட்ட தரப்பினர் சர்வதேச பாதுகாப்பில்
நம்பிக்கை கொண்டிருந்தனர்.
ஆனால் நாம் சர்வதேச சமூகம் அவர்களை மோசமாக கைவிட்டோம்”
என்று ஐரோப்பிய யூனியனின் செயலாளர் ஜாவியர் சொலானாவும் பிற்காலத்தில்
தெரிவித்திருந்தார். ‘இது ஒட்டு மொத்த வெட்கக்கேடான கூட்டு
தோல்வியாகும்’ என்பதுதான் அவரின் வார்த்தைகள்.
ஐக்கிய நாடுகள் சபை தோற்றுப் போன ஒரு அமைப்பு என்பது இதன்
மூலம் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப் போரின்
வெற்றியாளர்கள் என தம்மை பற்றி பிதற்றிக்கொள்ளும் நாடுகளின்
பிடியிலிருந்து பாதுகாப்புச் சபை விடுவிக்கப்பட வேண்டும்.
அதற்கேற்றவாறு உண்மையான காலத்துக்கு தேவையான
மறுசீரமைப்புக்கள் ஐ.நா. கட்டமைப்பில் செய்யப்பட வேண்டும்.
காலத்துக்கேற்ற தீவிர மாற்றங்கள் அறிமுகம் செய்யப்பட வேண்டும் என்ற
கோரிக்கையை கொபி அனான் 2006 பெப்ரவரியில் முன்வைத்துள்ளார்.
மீண்டும் நியுயோர்க்கிலும் வாஷிங்டனிலும் இடம்பெற்ற
செப்டம்பர் 11 சம்பவத்தின் தொடராக ஐ.நாவை தனது தேவைக்கேற்ப அப்போதைய
அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் பயன்படுத்தினார். முதலில்
ஆப்கானிஸ்தானையும் பின்னர் ஈராக்கையும் ஆக்கிரமிப்பதற்கான தனது
திட்டத்தை நியாயப்படுத்தும் வகையில் தீர்மானங்களை நிறைவேற்ற அவர்
ஐ.நாவை பயன்படுத்திக் கொண்டார். இந்த தீர்மானங்களை நிறைவேற்றும்
விடயத்தில் கூட சிறிய நாடுகளை அச்சுறுத்தியே அமெரிக்கா தனது
காரியத்தை சாதித்துக் கொண்டது. இதற்காக அரபுலக சர்வாதிகார
ஆட்சியாளர்கள் பலருடன் திரைமறைவு கொடுக்கல் வாங்கல்கள் பல
இடம்பெற்றன. இந்தக் கொடுக்கல் வாங்கல் காரணமாக ஆப்கானிஸ்தானிலும்
ஈராக்கிலும் தமது சகோதரர்கள் குண்டுகளுக்கும் ஏவுகணைகளுக்கும்
முகம் கொடுப்பதை கண்டுகொள்ளாமல் குருடர்களாகவே இருந்து விட்டனர்.
பின்னர் பிரிட்டனும் பிரான்ஸும் இணைந்து கொண்டுவந்த
தீர்மானத்தின் மூலம்தான் அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து லிபியாவை
அழிப்பதற்கான அடித்தளம் இடப்பட்டது. மக்கள் மிகவும் அமைதியாக அதி
உயர் வாழ்க்கைத் தரத்துடன் சகல வசதிகளுடனும் வாழ்ந்து வந்த
லிபியாவில் இன்று இரத்த ஆறு ஓடுகின்றது. இவ்வாறுதான் கடந்த இரண்டு
தசாப்தங்களாக அமெரிக்காவும் இஸ்ரேலும் ஐரோப்பிய நாடுகளும் இணைந்து
மேற்கொண்ட எல்லா தாக்குதல்களிலும் எல்லா யுத்தங்களிலும் ஐ.நா.
பலிக்கடா ஆக்கப்பட்டுள்ளது. இந்த யுத்தங்கள், தாக்குதல்கள் என
எல்லாமே ஐ.நா. தீர்மானங்களின் மூலம் தான் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இன்று அமெரிக்காவும் ரஷ்யாவும் இணைந்து சிரியாவை
அழித்துக் கொண்டு இருக்கின்றன. இதன் காரணமாக மரணம், அழிவு
என்பனவற்றுக்கு மேலதிகமாக இங்கும் சகல வசதிகளோடும் வாழ்ந்த
மக்கள் அடுத்த வேளை உணவுக்காக உடுத்த உடையுடன் உலகில் கையேந்தி நிற்கும்
நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இன்றும் கூட துரதிஷ்டவசமாக சிரியா
மற்றும் யெமன் தேச மக்களை காப்பாற்ற முடியாத கையாலாகாத நிலையிலேயே
ஐ.நா. காணப்படுகின்றது.
மலேஷியாவின் முன்னாள் பிரதமர் மஹதிர் மொஹமட், தென்
ஆபிரிக்காவின் தன்னிகரற்ற தலைவர் நெல்சன் மண்டேலா ஆகியோரைத் தவிர
ஐக்கிய நாடுகள் சபையின் கையாலாகாத்தனத்தை சுட்டிக்காட்டி அதைக்
கண்டித்துப் பேசும் வலிமை உலகின் எந்தத் தலைவருக்கும் இதுவரை வரவில்லை.
ஐ.நாவின் நம்பகத்தன்மைக்கு மஹதிர் மொஹமட் சவால் விட்டார். பாதுகாப்புச்
சபையில் தெரிவு செய்யப்பட்ட நாடுகளிடம் மட்டும் வீட்டோ அதிகாரம் இருப்பதை
அவர் வன்மையாகக் கண்டித்தார். ஏகாதிபத்தியவாதமும் பொம்மை அரசுகளும் உலகில்
மீண்டும் துளிர்விட ஐ.நா. காரணமாக இருப்பதாக அவர் வன்மையாகக் கண்டித்தார்.
ஐ.நாவின் மூலப் பிரச்சினை பற்றி கருத்து வெளியிட்ட மஹதிர்
“ஐ.நாவின் அங்கங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. பொம்மை ஆட்சியாளர்கள் தமது
எஜமானர்களுக்கு சேவகம் செய்யும் வகையில் அதன் எல்லா அங்கங்களும்
கட்டமைப்புக்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஜனநாயக நாடுகள் மீது ஒரு
குறிப்பிட்ட நாடுகள் மீது ஆதிக்கம் செலுத்துவதால் பொருளாதார நெருக்கடிகள்,
அரசியல் அடக்குமுறைகள், நிச்சயமற்ற நிலைமைகள் மற்றும் அச்ச நிலைமைகள் என்பன
தோற்றம் பெறுகின்றன” என்று கூறினார்.
தற்போது பிரச்சினைக்குரிய காஷ்மீர் பிரதேசத்தை எடுத்துக்
கொண்டால் காஷ்மீர் முஸ்லிம்களின் தன்னாதிக்க நிலையை வலியுறுத்தி ஐ.நாவில்
பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
ஆனால் அவற்றை அமுல் செய்வதற்கான எந்த நடவடிக்கையும் இதுவரை
எடுக்கப்படவில்லை. கடந்த இரண்டு மாத காலமாக இந்தியா மீண்டும் அதன்
காட்டுமிராண்டித்தனத்தை காஷ்மீரில் கட்டவிழ்த்து விட்டுள்ளது. வழமைபோல்
ஐ.நா. இன்றும் மௌனமாகவே உள்ளது.

0 comments:
Post a Comment