கல்முனை அபிவிருத்திக்கும் முகாமைத்துவத்துவத்திற்குமான சபை மறுப்பறிக்கை
எம்.வை.அமீர் -
“கல்முனை தமிழ் பிரதேச
செயலகத்திற்கான பிரதேச எல்லைகளை நிர்ணயிப்பது தொடர்பாகவும் உத்தேச வட்டார எல்லைகள்
நிர்ணயிக்கப்படும் பொழுது கல்முனை மாநகர சபையின் வட்டார எல்லைகளை வரையறுப்பது
தொடர்பாகவும் பல முரண்பாடுகளும், பிரச்சனைகளும் எழுந்துள்ளன”
தமிழ்தேசியக்கூட்டமைப்பு பாராளுமன்ற
உறுப்பினர்களும் பாராளுமன்றத்திற்கு வெளியே இயங்குகின்ற சில அமைப்புகளும் கல்முனை
நகரம் தமிழ் மக்களுக்குரியதென்றும் அதனை கல்முனைக்குடியைச் சேர்ந்த முஸ்லிம்கள்
கபளிகரம் அல்லது அபகரிக்க முயற்சியெடுத்து வருகின்றனர் என்றும்; முரண்பாடான கருத்துக்களையும் எவ்வித ஆதாரமற்ற பொய்களையும்
புழுகுகளையும் பாராளுமன்றத்திலும் வெளியிலும் பரப்பி வருகின்றனர். இது தொடர்பான
மறுப்பறிக்கையொன்றினை கல்முனை அபிவிருத்திக்கும் முகாமைத்துவத்துவத்திற்குமான
சபையின் சார்பாக அதன் பொதுச்செயலாளர் சிரேஸ்ட சட்டத்தரணி ஜனாப் யூ.எம்.நிஸார் விடுத்துள்ளார்.
அந்த அறிக்கையின் அம்சங்கள் பின்வருமாறு:
உண்மை வரலாறு தெரியாததாலும், உண்மையை மறைத்து பொய்யான வரலாறுகளை உருவாக்கி அதில் இலாபம் தேட
முயற்சிப்பவர்களாலும் என்றும் நீடித்து நிற்கக்கூடிய தமிழ், முஸ்லிம் நல்லுறவு சீர்குலையக்கூடாது என்ற ஒரேயொரு நோக்கத்திற்காக
கல்முனை நகர் சம்பத்தப்பட்ட ஒரு சில உண்மை வரலாறுகளை இங்கு குறிப்பிட விரும்புகிறோம்.
தற்போது தோற்றமளித்துக்கொண்டிருக்கும்
கல்முனை மாநகர சபையானது நான்கு உள்ளுராட்சி பிரிவுகளை 1933ல் அமுலுக்கு வந்த டொனமுர்
கொமிஸன் சீர்திருத்தத்திற்கமைய கல்முனை பட்டின சபை சபையும் அதன் எல்லைகளாக வடக்கே
தாழவட்டவான் வீதியையும், தெற்கே கல்முனை
ஸாஹிரா கல்லூரி வீதியையும், கிழக்கே கடலையும், மேற்கே வயல் வெளிகளையும் கொண்டிருந்தது. மேற்கூறிய எல்லைகளுக்குட்பட்ட பட்டினசபைப்பிரதேசம் தற்காலம் கல்முனை நகரம், கிழக்கேயமைந்துள்ள
தமிழ் குடியிருப்புகள், தெற்கேயமைந்துள்ள கல்முனைக்குடி எனும் முஸ்லிம் கிராமம்,
மற்றும் மணற்சேனை, இஸ்லாமபாத்கிராமம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகவும் அத்தோடு கரவாகு
தெற்கு கிராமச்சபை (தற்காலம் சாய்ந்தமருது பிரதேச செயலகப்பிரிவு), கரவாகு வடக்கு கிராமச்சபை, (பாண்டிருப்பு, மருதமுனை, பெரிய நீலாவணை
கிராமங்களை உள்ளடக்கியது), கரவாகு மேற்கு கிராமச்சபை (நற்பட்டிமுனை
தமிழ், முஸ்லிம் பிரிவுகள், சேனைக்குடியிருப்பு, துரவந்திய மேடு ஆகிய கிராமங்களை உள்ளடக்கியது). ஆகியன ஏனைய
மூன்று உள்ளுராட்சி பிரிவுகளாகும்.
கல்முனை பட்டின சபை எல்லைக்குள்ளான
பிரதேசத்திலேயே தற்சமையம் முரண்பாடான கருத்துக்களும், பிரச்சினைகளும் எழுந்த வண்ணம் இருக்கின்றன.
கல்முனை பட்டின சபை 1946ம் ஆண்டு
காலத்திலிருந்து இயங்கிய பொழுதே அதன் பரப்பெல்லைக்குள் கல்முனை வர்த்தக மையம், முஸ்லிம்களை
பெரும்பான்மையாகக் கொண்ட கல்முனைக்குடி கிராமம், தமிழர்களை பெரும்பான்மையாகக் கொண்ட கல்முனை நகரத்தின் கிழக்குப்
பகுதி, நற்பிட்டிமுனை
தமிழ், முஸ்லிம் பிரிவுகள், மணற்சேனை போன்ற பிரிவுகளை காணலாம். 1946ம் ஆண்டு காலத்திலிருந்து
விகிதாசார அடிப்படையில் 1994 இல் நடந்த பிரதேச சபைத் தேர்தல் வரை கல்முனை பட்டின
சபை எவ்வித இன. மத ரீதியிலான
பாகுபாடுகளின்றி தமிழர்கள் செறிந்து வாழும் கல்முனை 1ம் வட்டாரம், கல்முனை 2ம் வட்டாரம் என இரு வட்டாரங்களையும் முஸ்லிம்கள்
செறிந்துவாழும் கல்முனை 3ம், 4ம், 5ம்,6ம்,7ம் வட்டாரங்களையும் நடந்து முடிந்த
கல்முனை பட்டின சபைத்தேர்தல்கள்; அடிப்படையில் 2 தமிழ் பிரதிநிதிகளையும், 5 முஸ்லிம் பிரதிநிதிகளையும்
கொண்டிருந்தது.
1946ம் ஆண்டு நடைபெற்ற முதலாவது
கல்முனை பட்டின சபைத்தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களாக எஸ்.தங்கராசா மாஸ்டர்,
கே.கணபதிப்பிள்ளை, மீ.ஆதம்பாவா, இ.லே.சாஹுல்ஹமீது, எஸ்.எம். யாசின் தம்பி, எம்.எம்.
இஸ்மாயில் காரியப்பர், ஏ.சி.மதார்லெவ்வை என்பவர்களும் தெரிவுசெய்யப்பட்டதோடு
அச்சபையின் முதலாவது தவிசாளராக எம்.எம். இஸ்மாயில் காரியப்பரும் உப தவிசாளராக
எஸ்.தங்கராசா மாஸ்டரும் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.(நன்றி:ஏ. ஏம்.பறக்கத்துள்ளாஹ்,
கல்முனை மாநகரம், உள்ளுராட்சியும் சிவில் நிர்வாகமும்) இத்தெரிவிலிருந்;து தமிழர்களும் முஸ்லிம்களும் ஓற்றுமையாக கல்முனை பட்டின சபையை
நிர்வகித்து வந்தனரென்பதும் நல்முனை நகரம்,தமிழர்கள் செறிந்து வாழும் கல்முனை 1ம்
வட்டாரம், கல்முனை 2ம்
வட்டாரம் என இரு வட்டாரங்களும் முஸ்லிம்கள் செறிந்து வாழும் கல்முனை 3ம்,4ம்,5ம்,6ம்,7ம் வட்டாரங்களும் ஒன்றிணைந்த ஓரு உள்ளுராட்சி பிரிவின் கீழ் எவ்வித இன,மத,பிரதேச ரீதியிலான பாகுபாடுகளின்றி
1994ம்ஆண்டு பிரதேசசபைத் தேர்தல் வரை நிர்வகிக்கப்பட்டுவந்ததென்பது
தெட்டத்தெளிவாகிறது.(ஆதாரம்: கல்முனை மாநகர சபை வரிமதிப்பு ஏடுகள்)
கல்முனை நகரம்
கல்முனை நகரம் - கல்முனை
பட்டினத்தின் மத்தியபகுதி பெரும்பாலும்
கடைத் தொகுதிகளையும், கல்முனை பிரதேச
செயலக கட்டடம், கல்முனை மாநகர சபைக்கட்டடம், பொலிஸ் நிலையம், கல்முனைச் சந்தைக் கட்டடம், இ.போ. சபையின் கல்முனை டிப்போ, தேசிய வீடமைப்பு அதிகார சபைக் கட்டடம், கல்முனை வாசிகசாலை போன்றவற்றையும், ஏனைய அரசாங்க, தனியார் கட்டடங்களை கொண்டிருக்கிறது.
இந்நகருள்தான் கல்முனை பிரதேச செயலக, கல்முனை தமிழ் பிரதேச செயலக
கட்டடங்களும் அடங்கி உள்ளன.
கல்முனை நகரின் மத்திய பகுதி அதாவது
பஸார் அமைந்துள்ள பிரதேசத்திலுள்ள கடைகளில் 90 வீதமானவை தற்போது முஸ்லிம்களுக்குச்
சொந்தமாக இருப்பதோடு அதில் பெரும்பாலான கடைகள் கல்முனைக்குடி முஸ்லிம்களுக்கு
சொந்தமாகவுள்ளதென்பது மறுக்க முடியாத விடயமாகும். இக்கடைகளின் பூர்வீகத்தை
தேடிப்பார்க்கையில் டி.எம்.எம்.அப்துல் காதர், எஸ்.எஸ். சொலுக்கார்,
எம்.எல்.புஹாரி கொழும்பு ரேபரி ஹாஜியார், மௌலானா பாமசி, லலிதா ஜூவலர்ஸ்
போன்றவர்களுக்குச் சொந்தமாக விருந்தது. யாழ்ப்பாண ஸ்ரோர்ஸ், சிசிலியா ஸ்ரோர்ஸ்,
அன்பு ஸ்ரோர்ஸ், செல்வநாயகம் பெட்ரோல் நிலையம், வீரப்பாசெட்டியார், கதிரையாவுக்குச்
சொந்தமான ஒரு சில கடைகளும் பின்னர் கல்முனையைச் சேர்ந்த முஸ்லிம்களுக்கு
சட்டரீதியாகக் கைமாறியது வரலாறாகும்.
1970 இன் பின்னர் கல்முனை கல்முனை பஸ்
நிலையம் அமைந்திருக்கும் இடத்திற்கும் கல்முனை தரவை பிள்ளையார்
கோவிலுக்குமிடையிலுள்ள குளத்தை அண்டிய
பிரதேசம் அரச பூமியாகவிருந்து பின்னர் அப்பிரதேசம் கடைகளை அமைப்பதற்காக இன
விகிதாசார அடிப்படையில் பெரும்பான்மையான முஸ்லிம்களுக்கும் சிறுபான்மையான
தமிழர்களுக்கும் அரசாங்கத்தால் பகிர்ந்தளிக்கப்பட்டன. (ஆதாரம்:காணிப்பேர்மிட்டுகள்,
கல்முனை பிரதேச செயலகம்)
கல்முனை நகருக்கு வடக்கில் வடக்கு ஆதார
வைத்திய சாலைக்கு முன்பாக அமைந்துள்ள கடைத்தொகுதியில் சில கடைகள்
கல்முனைக்குடியைச் சேர்ந்த ரோஜாபேக்கரி
உரிமையாளருக்குச் சொந்தமான ஓரு சில கடைகள், யார்ட் வீதியின் மூலையிலுள்ள பசில்-ஏ-மஜிட்டுக்குரிய
காணியும் கட்டிடம், ஏ.ஆர்.எம்.ஹனிபாவுக்குச் சொந்தமான பெட்ரோல் நிலையம், மல்லிகா
முதலாளிக்குச்சொந்தமான காணி, எஸ்.எல்.ஆர்.ரெஸ்டுரண்ட் அமைந்திருக்கும் காணி
மற்றும் கல்முனையில் பிரபல்யமான சொர்ணம் நகை மாளிகை ஆகியன முதலில் முஸ்லிம்களுக்கு
சொந்தமாகவிருந்து பின்னர் பயங்கரவாத காலத்தில் தமிழர்களுக்கு கைமாறியது வரலாற்று
உண்மையாகும்.
காலப்போக்கில் தமிழர்களுக்கு
வழங்கப்பட்ட காணித்துண்டுகள் முஸ்லிம்களுக்கு கொழுத்த விலைக்கு கைமாறிய கதையும்
பயங்கரவாத காலத்தில் முதலில் முஸ்லிம்களுக்கு சொந்தமாகவிருந்து பின்னர் தமிழர்களுக்கு கைமாறியது வரலாறும் தெரியாத ஒரு
சிலர் இன்று ஒரு சில ஊடகங்களில் முஸ்லிம்கள் தமிழர்களை அடித்து விரட்டி
அவ்விடங்களை ஆக்கிரமிப்பு செய்ததாக அபாண்டமாக புனை கதைகளை பரப்பி விட்டுள்ளனர்.
கல்முனை நகருக்கு கிழக்கே அமைந்துள்ள
குடியிருப்பு காணிகள் தற்காலம் இஸ்லாமபாத் பிரதேசம். கல்முனை நகர அபிவிருத்தி
வரலாற்றில் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது.
இஸ்லாமபாத் கிராமம்:
இஸ்லாமபாத் என்ற பெயருடன் இப்பொழுது
அமைந்திருக்கும் கல்முனை நகருக்கு கிழக்கேயமைந்துள்ள காடாய்க்கிடந்த பூமி பூர்வீக
காலந் தொட்டு சிங்களவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் விரல் விட்டு
எண்ணக்கூடிய ஓரு சில தமிழர்களுக்கும் சொந்தமான பூமியாக இருந்து வந்துள்ளது. ஹரிசன்
தியேட்டர் உரிமையாளர் டிக்ஸன் டி சில்வா. கேட் முதலியார் எம். எஸ். காரியப்பர்
மருதமுனையைச் சேர்ந்த எஞ்சினியர் காரியப்பர், சாஹுல் ஹமீது வைஸ் சேர்மன், கொழும்பு ஸ்ரேர்ர், டாக்டர் ஜெமீல், எஸ்.எம்.இஸ்மாயில் ஹாஜியார், கொழும்பு ஸ்ரேர்ர் அகமதுலெவ்வை ஹாஜியார்,
றவுப் ஹாஜியார், ஞானரட்ணம் மாஸ்டர், நவரட்னம் சார்ஜன்ட், மட்டக்களப்பைச் சேர்ந்த
சட்டத்தரணி எட்வேர்ட் ஆகியோருக்கும் பல ஏக்கர் காணிகள் சொந்தமாக இருந்துள்ளன. 1976
ன் பின்பே முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணிகளில் முஸ்லிம் குடியேற்றம் நிகழ்ந்து “இஸ்லாமபாத்’; என்ற பெயரும் சூட்டப்பட்டது.
இத்தகவல்கள் எல்லாம்; இற்றைக்கு 75
வருடங்களுக்குட்பட்டவையாகும்.
சுனாமியின் பின்பு பாதிக்கப்பட்ட
மக்களுக்கு 400 க்கு மேற்பட்ட வீட்டுத்தொகுதி கட்டிக்கொடுக்கப்பட்டு சகல இன
மக்களுக்கும் வீடுகள் வழங்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களுக்குச் சொந்தமான பல ஏக்கர்
காணிகள் சட்டரீதியாக அரசாங்கத்தால் சுவிகரிக்கப்பட்டு 400 க்கு மேற்பட்ட
வீட்டுத்தொகுதி, சுகாதரர நிலையம், காதிநீதிமன்றம், வாசிகசாலை,பல் தேவைக்கட்டிடம்,
வலய கல்வி திணைக்களம், ஆயுள்வேத வைத்திய சாலை, அரசாங்க பாடசாலை போன்ற மக்களுக்குசேவையாற்றக்கூடிய கட்டிடங்கள்
கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன. இதில் எவ்வித கபளிகரமோ ஆக்கிரமிப்போ ஏற்பட்டதாகத்
தெரியவில்லை. தமிழர்களுக்குச்சொந்தமான எந்தக்காணியிலும் பலாத்காரமாகவோ அல்லது
அத்துமீறியோ முஸ்லிம்கள்
குடியேற்றப்படவில்லையென்பதை திட்டவட்டமாக சட்டரிதீயான ஆவணங்களுடன்
நிருபிக்கலாம்.
கல்முனைக்குடி முஸ்லிம்கள்
வியாபாரத்தினை பிரதான வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளதால் கல்முனை நகரில் காணிகளை வாங்கி
தமது சொந்த செலவில் கட்டியெழுப்பியுள்ளனர், கல்முனை நகரில்
அமைந்துள்ள கடைகள் தான் அவர்களது வாழ்வாதாரமும் பொருளாதாரமும் எனக் கூறினால் அது
மிகையாகாது. எக்காரணத்தைக் கொண்டும் கல்முனைக்குடி கிராமமும், கல்முனை பஸார் அமைந்துள்ள பகுதியும்
இருவேறு பிரதேச செயலகங்களுக்கு உள்ளடக்கப்படுவதை முஸ்லிம்கள் விரும்பமாட்டார்கள்.
கல்முனை பஸார் பிரதேசம் கல்முனைக்குடி முஸ்லிம்களின் இதயம் எனக் கூறினால் கூட
மிகையாகாது. இந்த யதார்த்தத்தினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற
உறுப்பினர்களும் ஏனையவர்களும் உணர்ந்து தேசிய ரீதியாக இனங்களுக்கிடையில் நல்லெண்ண
முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் உங்களது அதிகார வெறிக்கு
அப்பாவி தமிழ்.முஸ்லிம் சமுகங்களை
பலிக்கடாக்களாக்கும் வண்ணம் செயற்பட
வேண்டாமெனக் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு கல்முனை அபிவிருத்திக்கும்
முகாமைத்துவத்துவத்திற்குமான சபையின் சார்பாக அதன் பொதுச்செயலாளர் சிரேஸ்ட
சட்டத்தரணி யூ.எம்.நிஸார் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment