• Latest News

    September 18, 2016

    சாய்ந்தமருதிலும் கிழக்கு எழுச்சி

    M.Y.அமீர் -

    கிழக்கின் எழுச்சி அமைப்பினை மக்கள் மயப்படுத்தும் பொதுக்கூட்டமும் அவ்வமைப்பின் முஸ்லிம் தேசிய முஸ்லிம் சுய நிர்ணய பிரகடனமும் 2016-09-16 ஆம் திகதி சாய்ந்தமருது கடற்கரை வீதியில் இடம்பெற்றது.
    கிழக்கின் எழுச்சி அமைப்பின் தலைவர் வபா பாறுக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் குறித்த மக்கள் பிரகடனத்தை தலைவரின் சார்பில் செயலாளர் அஸ்ஸுஹூர் சேகு வாசித்தார்.
    பிரகடனம் பின்வருமாறு:
    பல தசாப்தங்கள் அடிமைகளாய் திக்கற்றுக்கிடந்த முஸ்லிம்களுக்கு அரசியல் அடையாளத்தை பெற்றுக்கொடுக்கும் இலட்சியத்துடன் கிழக்கு மண்ணில் முதல் மக்கள் எழுச்சிக்கு வித்திட்டு தன் உயிரையே பலிகொடுத்த அஞ்சாச்சிங்கம் தலைவர் அஷ்ரஃப் அவர்களின் சுவனத்து உயர் அந்தஸ்த்துக்காக இச்சந்தர்ப்பத்தில் இறைவனை இரைஞ்சியவனாக ஆரம்பிக்கின்றேன். மேடைப்பேச்சாற்றக்கூடிய உடல் நிலை இல்லாமையால் மிகச்சுருக்கமான எனது உரையை ஆரம்பிக்கின்றேன்.
    முஸ்லிம்களின் அரசியல் விடிவுக்காய் ஸ்தாபிக்கப்பட்ட எமது பேரியக்கமான முஸ்லிம் காங்கிரஸ் தனியாரின் வியாபாரப்பண்டமாக மாற்றிவிட்ட துரோகிகளிடமிருந்து எமது கட்சியை மீட்டெடுப்பதற்காக கிழக்கின் எழுச்சியை தலைவர் அஷ்ரஃப் தினமான 16/09/2016 ஆகிய இன்றைய தினத்தில் இக்கிழக்கு மண்ணில் பகிரங்கமாய் பிரகடணம் செய்கிறோம்.
    வட-கிழக்கில் வாழும் முஸ்லிம்களுக்கான தனித்துவ தேசிய அடையாளத்தை ஏற்றுக்கொண்டு அதன் அடிப்படையில் முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகளை சம்பந்தப்பட்ட தரப்புகள் கவனத்தில் கொண்டு கிழக்கு முஸ்லிம்களின் சுய நிர்ணய உரிமையை புதிய யாப்பில் உத்தரவாதப்படுத்தவேண்டும் என கிழக்கு முஸ்லிம்கள் சார்பாக கிழக்கின் எழுச்சி பகிரங்கமாய் வேண்டுகிறது.
    ஒரு பேரெழுச்சி ஒடுக்கப்பட்ட இன்றைய நாளில் கிழக்கின் எழுச்சியான மீள் எழுச்சி. கிழக்கு முஸ்லிம்களின் உள்ளக சுய நிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும். என்ற கோசத்துடன் முஸ்லிம் தேசியம் என்ற அடையாளத்தை பிரகடணம் செய்கின்றோம்.
    இலங்கை என்ற எம் தாய் நாட்டில் வாழும் சிங்கள, தமிழ் தேசியங்களுக்கு இருக்கின்ற, புதிய யாப்பு மாற்றத்தினூடாக கொடுக்கப்பட இருக்கின்ற அனைத்து கௌரவங்களும் அந்தஸ்து-அதிகாரங்களுக்கும் கிழக்கை மையமாகக்கொண்ட முஸ்லிம் தேசியம் உரித்துடையது என்று பிரகடணம் செய்கின்றோம்.
    முஸ்லிம் தேசியத்தின் விடயதானங்களில் வடக்கு கிழக்கைச் சேர்ந்த முஸ்லிம் அரசியல் தலைமைகளின் கருத்துக்கள் உள்வாங்கப்படவேண்டும். என பிரகடணம் செய்கின்றோம்.
    தனிப்பட்ட அரசியல் இலாபங்களுக்காக திட்டமிட்டு தூபமிடப்பட்ட அக்கரைப்பற்று-கல்முனை சாய்ந்தமருது-கல்முனை பிரதேச வாதங்கள் இன்றைய நாள் இம்மண்ணுக்கடியில் புதைக்கப்பட்டதாய் கிழக்கின் எழுச்சி பிரகடணம் செய்கிறது.
    கிழக்கின் எழுச்சியின் முன்னெடுப்புகளால் உருவாக்கப்படும் சமூக நிர்வாகச்செயற்பாடுகள் அனைத்தும் முற்றிலும் இஸ்லாமிய வழிமுறையைக் கொண்டதாகவே அமையும் என்பதை இந்த மக்கள் கூட்டத்தை சாட்சியாய் வைத்து பிரகடனம் செய்கிறோம்.
    கிழக்கின் எழுச்சியின் அத்தனை செயல்பாடுகளும் இஸ்லாமிய சிந்தனைகொண்ட சத்தியமான மசூறா வழிகாட்டலையுடைய கூட்டுத்தலைமைத்துவத்தை உருவாக்கி முழு உலகுக்கும் நீதி, நியாயம், அன்பு,அரவணைப்புக்கொண்ட இஸ்லாமிய அரசியலை நிறுவி அதன் அழகை உலகுக்கு காட்டுவதே எமது ஒரே இலக்காகும் என்பதை அல்லாஹ்வையும் சாட்சியாய் வைத்து பிரகடனம் செய்கின்றோம். என்று குறிப்பிடப்பட்டது.
    நிகழ்வில் தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ், கிழக்குமாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை, அமைப்பின் பிரதித்தலைவர் ஆலிப் ஷப்றி, கலாநிதி எஸ்.எல்.றியாஸ், கிழக்கின் எழுச்சி அமைப்பின் தேசிய அமைப்பாளர் மஜீட் மற்றும் தேசிய காங்கிரஸின் உயர்மட்ட உறுப்பினர்கள் என பலரும் பங்குகொண்டிருந்தனர்.
    kilakku-jpg2 kilakku-jpg2-jpg3 kilakku-jpg2-jpg3-jpg4 kilakku-jpg2-jpg3-jpg4-jpg6 kilakku-jpg2-jpg3-jpg8 kilakku-jpg2-jpg9
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சாய்ந்தமருதிலும் கிழக்கு எழுச்சி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top