யுத்தத்தினால்
பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களில் நிலவும் காணிப் பிரச்சினைகளை
குறுகிய காலத்துக்குள் தீர்த்து வைப்பதற்கு விசேட நீதிமன்றங்கள் நிறுவப்பட
வேண்டும் அல்லது நிறுவப்பட்டுள்ள இணக்க சபைகளுக்கு அதிகாரங்களை
வழங்குவதற்கு நீதி அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என புனர்வாழ்வு
மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்
நாடாளுமன்றத்தில் நேற்று வலியுறுத்தினார்.
இதேவேளை,
யுத்த காலப்பகுதியில் இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்களது காணிகளை மீள
ஒப்படைக்கப்படுவது தொடர்பில் நாடாளுமன்றத்தில் இராஜாங்க அமைச்சர்
ஹிஸ்புல்லாஹ்வுக்கும் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவுக்கும் இடையே கடும்
விவாதம் நடைபெற்றது. இறுதியில் முஸ்லிம்களது காணிகளை மீள ஒப்படைப்பதற்கு
நீதி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாக விஜயதாஸ ராஜபக்ஷ வாக்குறுதி வழங்கினார்.
நீதிமன்ற
குற்றவியல் திருத்தச் சட்டத்தின் மீதான விவாதம் நேற்று செவ்வாய்க்கிழமை
நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே
இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறியதாவது:-
“யுத்தினால்
பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கு –கிழக்கு மாகணங்கள் பல்வேறு பிரச்சினைகள்
உள்ளன. அவற்றுள் காணிப் பிரச்சினை என்பது மிகப் பிரதானமான ஒன்றாகும். சிறிய
சிறிய காணிப்பிரச்சினைகள் தொடர்பான ஏராளமான வழக்குகள் வருடக்கணக்காக
நீதிமன்றங்களில் கிடப்பில் உள்ளன.
யுத்தம் காரணமாக
தங்களது காணிகளை விட்டு இடம்பெயர்ந்த மக்களுக்கு, இன்று தமது சொந்த இடங்களை
மீண்டும் பெற்றுக் கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது. இவ்வாறான
பிரச்சினைகளை பிரதேச செயலாளர்கள் நீதிமன்றங்கள் ஊடாக தீர்வினைப் பெற்றுக்
கொள்ள அனுப்பிவைக்கின்றனர்.
யுதத்தினால் வீடு
வாசல்களை இழந்து அகதி முகாம்களிலும் - உறவினர் வீடுகளிலும் தங்கியுள்ள ஏழை
மக்கள் தங்களது காணிகளை மீண்டும் பெற்றுக் கொள்வதற்காக ஆயிரக்கணக்கான
ரூபாய்களை செலவழித்தும் தீர்வினைப் பெற்றுக் கொள்ள முடியாதுள்ளது.
இந்நிலையில், அவர்களால் தொடர்ந்தும் நீதிமன்றம் செல்ல பண
வசதியில்லாமையினால் வழக்குகளை கைவிடுகின்ற நிலை வடகிழக்கு பகுதிகளில்
ஏராளம் ஏற்பட்டுள்ளன.
காணிப் பிரச்சினை மட்டுமல்லாது
ஏராளமான பிரச்சினைகளுக்கு வடக்கு கிழக்கு மக்கள் தொடர்ந்தும்
முகம்கொடுத்து வருகின்றனர். எனவே, நீதியமைச்சரே! வடக்கு கிழக்கு
மாகாணங்களில் நிலவும் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்க
குறுகிய காலத்துக்கு விசேட நீதிமன்றங்களை உருவாக்குங்கள். அதனூடாக
கிடப்பில் உள்ள காணி வழக்குகளுக்கு விரைவில் தீர்ப்பினை வழங்குங்கள்.
அவ்வாறில்லையெனில்
காணிப் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு விசேட நீதிமன்றங்களுக்கு அப்பால்
அதிகாரமுள்ள சபையாவது நீங்கள் உருவாக்க வேண்டும்.”
இடையில் குறுக்கிட்ட நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ,
“அமைச்சர்
குறிப்பிட்டது போன்று வடக்கு கிழக்கு மாகாணங்களில் காணிப் பிரச்சினை
பெரும் பிரச்சினையாக உள்ளன. எனவே, நாங்கள் அவ்விரு பகுதிகளுக்கும் விசேட
கவனம் செலுத்தியுள்ளோம். அதற்கமைய அப்பகுதிகளில் உள்ள நீதிமன்றங்களை
புனரமைத்து அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து புதுப்பித்துள்ளோம். அதற்கு
மேலதிகமாக இரண்டு மாதங்களுக்கு முன்னர் விசேட இணக்க சபையொன்றை வடக்கு
கிழக்கு மாகாணங்களில் மாத்திரம் அறிமுகப்படுத்தியுள்ளோம். இதில் காணிப்
பிரச்சினைகள் தொடர்பிலும் பரிசீலிக்கப்படும். எனினும், எம்மால் அனைத்தும்
பிரிபூரணமாக நிறைவேற்றப்படவில்லை. சிறு சிறு குறைப்பாடுகள் உள்ளன.
எதிர்காலத்தில் அதனை நிவர்த்தி செய்ய முயற்சிக்கின்றோம்’’- என்றார்.
தொடர்ந்தும் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்,
“நிச்சயமாக
உங்களது சேவையை நாங்கள் பாராட்டுகின்றோம். ஆனால், காணிப் பிரச்சினைகள்
இன்னும் உள்ளன. விசேடமாக, வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள முஸ்லிம்
பிரதேசங்களிலே அது அதிகமாக உள்ளது. குறிப்பாக, யுத்ததினால் இடம்பெயர்ந்த
முஸ்லிம் மக்கள் மீண்டும் தங்களது சொந்த இடங்களுக்குச் செல்கின்ற போது
அங்கு வேறு மக்களை குடியேற்றியுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களிடம் சகல
ஆவணங்கள் இருந்தும் அதனை மீள பெற்றுக் கொள்ள முடியாதுள்ளது. பிரதேச
செயலாளர்கள் இது போன்ற சிக்கலான பிரச்சினைகளை நீதிமன்றங்களுக்கே அனுப்பி
வைக்கின்றனர்.
ஆனால், பாதிக்கப்பட்ட அம்மக்களுக்கு
வழக்கினை தொடர முடியாத நிலையில் அவர்களது வறுமை காணப்படுகின்றது. இவ்வாறான
பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு நீங்கள் கூறிய இணங்க சபைகளால் முடியாது
போயுள்ளன. இணக்க சபைகளுக்கு அதிகாரங்கள் வழங்கப்படும் பட்சத்தில் காணிப்
பிரச்சினைகளை அதனூடாகவே தீர்க்க முடியும். அவ்வாறு இல்லாவிட்டால், ஏதேனும்
ஒரு விதத்தில் விசேட திட்டங்கள் ஊடாக குறுகிய காலத்துக்குள் இப்பிரச்சினையை
தீர்த்து வைப்பதற்கு நீங்கள் முயற்சிக்க வேண்டும்.
கடந்த
இரு நாட்களாக வாகரை, மட்டக்களப்பு போன்ற பகுதிகளில் நான் விஜயம்
செய்திருந்தேன். அப்பகுதிளில் உள்ள மக்கள் இவ்வாறான ஏராளமான பிரச்சினைகளை
என்னிடம் முன்வைத்திருந்தனர்;. எனவே, அம்மக்களுக்கு ஏதேனும் ஒரு தீர்வினை
பெற்றுக் கொடுக்க வேண்டியது எனது பொறுப்பாகும். –என்றார்

0 comments:
Post a Comment