ஜெருசலம் நகரில் அமைந்துள்ள மஜ்ஜிதுல் 
அக்ஸா பள்ளிவாசலுக்குள்ளும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும், இஸ்ரேல் 
மேற்கொண்டுவரும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்குக் கண்டனம் தெரிவிக்கும் 
தீர்மானமொன்றினை, ஐக்கிய நாடுகளின் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாசார அமைப்பான
 யுனெஸ்கோ கடந்த மாதம் நிறைவேற்றியிருந்தது. 
மேற்படி தீர்மானத்துக்கு ஆதரவாக 24 
நாடுகள் வாக்களித்திருந்தன. அல்ஜீரியா, பிரேசில், சீனா, ஈரான், ரஷ்யா 
மற்றும் தென் ஆபிரிக்கா போன்றவை, தீர்மானத்தை ஆதரித்த நாடுகளில் சிலவாகும்.
   அமெரிக்கா, பிரித்தானியா, 
ஜேர்மனி, நெதர்லாந்து, லிதுவேனியா மற்றும் எஸ்டோனியா ஆகிய ஆறு நாடுகள் 
யுனெஸ்கோ தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன.  இந்த
 நிலையில் அல்பீனியா, ஆஜன்டீனா, பிரான்ஸ், கிறீஸ், ஜப்பான், தென்கொரியா 
மற்றும் சுவீடன் உள்ளிட்ட 26 நாடுகள், இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல்
 தவிர்த்திருந்தன.  
சேர்பியா மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளும் வாக்கெடுப்புக்கு வருகை தரவில்லை.  இங்கு குறிப்பிட வேண்டிய விடயம் என்னவென்றால், இஸ்ரேலின்
 ஆக்கிரமிப்பினை எதிர்த்து வாக்களிக்காமல் ஒதுங்கியிருந்த 26 நாடுகளில் 
இலங்கையும் ஒன்றாகும். இலங்கையின் இந்த நிலைப்பாடானது, இங்குள்ள 
முஸ்லிம்களிடையே கடுமையான ஆத்திரத்தினை ஏற்படுத்தியுள்ளது. யுனெஸ்கோ 
தீர்மானத்துக்கு வாக்களிக்காமல் தவிர்த்துக் கொண்டதன் மூலம், இஸ் ரேலுக்கு 
ஆதரவான நிலைப்பாடொன்றினை இலங்கை எடுத்துள்ளது. இதனூடாக அமெரிக்காவை 
சந்தோசப்படுத்துவதற்கு இலங்கை முயற்சித்துள்ளது. இஸ் ரேல் என்பது 
‘அமெரிக்காவின் கள்ளக் குழந்தை’ என்கிற விமர்சனம் உலகளவில் உள்ளமை 
குறிப்பிடத்தக்கது. 
யுனெஸ்கோவின் மேற்படி தீர்மானத்தில் கலந்து கொண்டு, இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு எதிராக வாக்களிக்காமல் - இலங்கை 
ஒதுங்கிக் கொண்டமை குறித்து, இலங்கையிலுள்ள சில முஸ்லிம் அரசியல்வாதிகள் 
தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.   குறிப்பாக,
 ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம், 
இலங்கையின் இந்த நிலைப்பாடு குறித்து, நாடாளுமன்றில் தனது அதிருப்தியினை 
வெளிப்படுத்தியதோடு, பலஸ்தீனத்துடன் இலங்கைக்கு இருந்து வரும் நீண்டகால 
உறவு குறித்தும் நினைவுபடுத்தியுள்ளார். மேலும், இதுகுறித்து வெளிவிவகார 
அமைச்சு உரிய விளக்கமொன்றினை வழங்க வேண்டுமெனவும் ஹக்கீம் 
வலியுறுத்தியுள்ளார்.  
இந்த நிலையில், யுனெஸ்கோ 
தீர்மானத்துக்கு வாக்களிக்காமல், இலங்கை விலகி நின்றமைக்கு கண்டனம் 
தெரிவிக்கும் வகையில், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன், 
தனிநபர் பிரேரணை கொண்டுவரும் முயற்சியொன்றினை மேற்கொண்டார். இதற்கிணங்க, 
கடந்த 27 ஆம் திகதி நடைபெற்ற மாகாணசபை அமர்வுக்கான நிகழ்ச்சி நிரலில், தனது
 பிரேரணையினை இணைத்துக் கொள்ளுமாறு, பல நாட்களுக்கு முன்னரே எழுத்து மூலம்
 அறிவித்துமிருந்தார். ஆயினும், கடந்த சபை அமர்வுக்கான நிகழ்ச்சி நிரலில், 
அந்தப் பிரேரணை சேர்க்கப்படாமல் தடுக்கப்பட்டு விட்டதாகத் 
தெரிவிக்கப்படுகிறது. இதில் அவமானத்துக்குரிய விடயம் என்னவென்றால், குறித்த
 பிரேரணையினை நிகழ்ச்சி நிரலில் சேர்க்காமல் தடுத்தவர், கிழக்கு மாகாண 
முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் என்று கூறப்படுகிறது. இந்தக் 
குற்றச்சாட்டினை மாற்றுக்கட்சிக்காரர்கள் எவரும் கூறவில்லை. முஸ்லிம் 
காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும், அந்தக் கட்சியினுடைய அரசியல் மற்றும் மத
 விவகாரங்களுக்கான செயலாளருமான சட்டத்தரணி எம்.ஏ.அன்சில்தான் இந்தக் 
குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார். 
சட்டத்தரணி அன்சில், இது தொடர்பாகக் 
கடந்த சனிக்கிழமை அறிக்கையொன்றினை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கை 
அவருடைய பேஸ்புக் பக்கத்திலும், ஊடகங்களிலும் வெளியாகியிருந்தன.   இலங்கையிலுள்ள
 மாகாணசபைகளில், கிழக்கு மாகாணத்தில் மட்டும்தான் முஸ்லிம் முதலமைச்சர் 
ஒருவர் உள்ளார். அந்த முதலமைச்சர் முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்தவர். அந்தக்
 கட்சியின் பிரதித் தலைவர்களில் ஒருவராகவும் அவர் பதவி வகிக்கின்றார். 
ஆரிப் சம்சுதீனினால் கொண்டுவர 
முயற்சித்த பிரேரணையானது, அரசாங்கத்தின் கொள்கைக்கு எதிரானது என்றும், 
அவ்வாறானதொரு விடயத்தினை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள முடியாது என்றும், 
முஸ்லிம் காங்கிரஸின் மாகாணசபை உறுப்பினர்களிடம் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் 
தெரிவித்ததாக, தனது அறிக்கையில் அன்சில் குறிப்பிட்டுள்ளார். மேலும், 
குறித்த பிரேரணையினை சபை அமர்வுக்கான நிகழ்ச்சி நிரலில் சேர்ப்பதற்கு, 
ஒரேயொரு முஸ்லிம் உறுப்பினரைத் தவிர, வேறு எவரும் ஆதரவு தெரிவிக்கவில்லை 
என்றும் தனது கண்டன அறிக்கையில் மு.காவின் அரசியல் விவகாரங்களுக்கான 
செயலாளர் சட்டத்தரணி அன்சில் சுட்டிக்காட்டியுள்ளார்.  
உண்மையில், மேற்படி பிரேரணையினை 
எடுக்காமல் தடுத்ததன் பின்னணியில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் 
அஹமட் இருந்திருப்பாராயின் அது முஸ்லிம் சமூகத்துக்கு இழைக்கப்பட்ட 
துரோகமாகும்.   இன்னொருபுறம், 
யுனெஸ்கோ தீர்மானத்துக்கு இலங்கை ஆதரவளிக்காமல் விலகி நின்றமை குறித்து, 
மு.கா தலைவர் நாடாளுமன்றில் அதிருப்தி வெளியிட்டுள்ள நிலையில், அந்தக் 
கட்சியின் பிரதிதித் தலைவரான கிழக்கு மாகாண முதலமைச்சர், ‘அரசாங்கத்தைக் 
கண்டிக்கக் கூடாது’ எனும் நிலைப்பாட்டினை எடுத்திருப்பதானது, அவர் சார்ந்த 
கட்சித் தலைமையின் தீர்மானத்தினை மீறும் செயற்பாடாகவும் உள்ளது. 
கிழக்கு மாகாண முதலமைச்சராக முஸ்லிம் 
ஒருவர் பதவி வகிப்பது, முஸ்லிம்களுக்குப் பெருமை என்கிற மாயப் பிரசாரமொன்று
 உள்ளது. இந்தப் பெருமையினை வைத்துக் கொண்டு, தாங்கள் ஒரு புல்லைக்கூட 
பிடுங்க முடியாது என்பதை, முஸ்லிம் மக்கள் அனுபவபூர்வமாக 
உணரத்தொடங்கியுள்ளனர்.   பிரச்சினைகளை
 எல்லாம் சுட்டிக்காட்டி, முதலமைச்சர் ஹாபிஸ் நசீரிடம் கேள்விகள் கேட்டால்,
 “கிழக்கு மாகாணத்தின் நிருவாகத்தினை சிறப்பாகச் செய்வதற்கு, ஆளுநர் தடையாக
 இருக்கின்றார்” என்று, மறுநாள் ஊடகங்களில் அறிக்கை விட்டு, விடயம் திசை 
திருப்பப்பட்டு விடுகிறது. 
இது இப்படியிருக்க, கிழக்கு 
மாகாணசபையில் உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் கொண்டுவர முயற்சித்த மேற்படி 
தனிநபர் பிரேரணை தடுத்து நிறுத்தப்பட்டமை குறித்தும், இதன் பின்னணியில் 
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இருந்தார் எனும் 
குற்றச்சாட்டு தொடர்பாகவும் மு.கா தலைவர் ரவூப் ஹக்கீமிடம் கேட்கப்பட்டது. 
அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருதில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை 
நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போது, மு.கா தலைவரிடம் ஊடகவியலாளர் 
ஒருவர் இவ்விடயம் தொடர்பில் கேள்வியெழுப்பினார்.  இதற்குப்
 பதிலளித்த மு.கா தலைவர், “ஊடகவியலாளர் கேட்கும் வரையில், இதுகுறித்துத் 
தான் அறிந்திருக்கவில்லை” என்று கூறினார். மேலும், இவ்விடயம் தொடர்பில் 
தான் விசாரிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.  
மு.கா தலைவரின் கூற்றுப்படி பார்த்தால்,
 கிழக்கு மாகாணசபையில் அரசாங்கத்தைக் கண்டித்து பிரேரணையொன்றினைத் தான் 
கொண்டுவரப் போவது குறித்து, கட்சித் தலைவரிடம் ஆரிப் சம்சுதீன் 
தெரியப்படுத்தவில்லை எனப் புரிந்துகொள்ள முடிகிறது. அதன்பின்னர், குறித்த 
பிரேரணை, சபை அமர்வு நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்படாததன் பின்னணியில் 
முதலமைச்சர் இருந்தார் என்கிற குற்றச்சாட்டுக் குறித்தும், மு.கா தலைவரிடம்
 கூறப்படவில்லை என்பதையும் விளங்கிக் கொள்ளக் கூடியதாக உள்ளது. மேற்படி 
விடயங்கள் மு.கா தலைவருக்கு ஏற்கெனவே தெரியப்படுத்தப்பட்டிருந்தால், “இவை 
குறித்து எனக்கு எதுவும் தெரியாது” என்று, மு.கா தலைவர் கூறியிருக்க 
மாட்டார் என்று ஒருபக்கம் யோசிக்கத் தோன்றினாலும், இந்த விவகாரம் தொடர்பில்
 ஊடகங்களிடம் வாயைக்கொடுத்து வம்பில் மாட்டி விடக் கூடாது என்பதற்காக, 
“இதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது” என்று ரவூப் ஹக்கீம் கூறியிருக்கக் 
கூடுமென, மறுபுறமாக யோசிக்கவும் தோன்றுகிறது. 
இந்தப் பத்தி வெளியான பிறகு, இது 
தொடர்பில் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரும், தம்மை தவறுகளற்றவர்களாகக் காட்டிக் 
கொள்ளும் எத்தனங்களை விரைந்து மேற்கொள்ளத் தொடங்குவார்கள். “குறித்த 
பிரேரணையினை அடுத்த மாத அமர்வில் எடுக்கவுள்ளோம்” என்று, சம்பந்தப்பட்டோர் 
அறிவிக்கவும் கூடும். அப்படித்தான், அந்தப் பிரேரணையினை அடுத்த மாத 
அமர்வில் எடுத்துக் கொண்டாலும், அது உணர்வுபூர்வமானதொன்றாக 
இருக்கப்போவதில்லை. காலங்கடந்து ஊடக அழுத்தங்களுக்காகக் கொண்டுவரப்படும் 
அந்தப் பிரேரணை, நாறிப்போன மீனுக்கு ஒப்பானதாகவே இருக்கும். 
சமூக அக்கறையென்பது கணக்குப் போட்டுப் பார்த்து வருவதில்லை. சமூகத்தை நேசிப்பவர்களிடமே சமூக சிந்தனையினை எதிர்பார்க்க முடியும்.  ‘ஆட்சியாளன் சிந்தினையாளனாக இருக்க வேண்டும். அல்லது, சிந்தனையாளன் ஆட்சி நடத்த வேண்டும்’ என்றார் பிளேட்டோ.   முஸ்லிம் சமூகத்துக்கு இரண்டுமே வாய்க்கவில்லை.   

 
 
 
 
 
 
 
 
0 comments:
Post a Comment