2015 ஆம்
ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் இந்த நாட்டு முஸ்லிம்களுள்
95 வீதமானவர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை கவிழ்ப்பதற்கே வாக்களித்தனர்.இவ்வாறு முஸ்லிகள் ஒன்றிணைந்து
நின்றமைக்குக் காரணம் அவரது ஆட்சியில்
முஸ்லிம்களுக்கு எதிராக அதிக கொடுமைகள்
இழைக்கப்பட்டமைதான்.
முஸ்லிம்களின்
வர்த்தகம்,இருப்பு மற்றும் மார்க்கம்
என முஸ்லிம்களுடன் தொடர்புபட்ட அனைத்து விடயங்களுக்கும் ஆப்பு
வைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன;இவை அனைத்துக்கும் எதிராக
இனவாதக் கருத்துக்கள் பரப்பப்பட்டன.ஹலால் எதிர்ப்பு போராட்டத்தில்
தொடங்கி அலுத்கம அழிப்புவரை பேரினவாதிகளின்
அட்டூழியங்கள் தொடர்ந்தன.
மார்க்க
விடயங்களை கட்டுப்படுத்துவதற்காக புதிய சட்ட ஏற்பாடுகளைக்
கொண்டு வருவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.2013 ஆம் ஆண்டு பெப்ரவரி
மாதம் எட்டாம் திகதி நாடாளுமன்றில்
நிறைவேற்றப்பட்ட பயங்கரவாதிகளுக்கு நிதி வழங்குவதைத் தடுக்கும்
திருத்தச் சட்ட மூலத்தில் பயங்கரவாத
செயலுக்கான வரைவிலக்கணங்கள் பல உள்ளடக்கப்பட்டன.அதில்
மதம் சார்ந்த சில செயற்பாடுகளும்
பயங்கரவாத செயற்பாடுகள்தான் என்று
வரைவிலக்கணம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதை அடிப்படையாகக் கொண்டு இஸ்லாமிய மார்க்க
செயற்பாடுகளை முடக்குவதே மஹிந்தவின் நோக்கமாக இருந்தது.இதை மெய்ப்பிக்கும் வகையில்,பல சம்பவங்கள் நாட்டில்
இடம்பெற்றன.பள்ளிவாசல்கள் பல தாக்கப்பட்டன;மத்ரஸாக்களுக்கு
எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டன;குர்பான் கொடுத்தலுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டன.
இவ்வாறு
மஹிந்தவின் ஆட்சியில் முஸ்லிம்கள் பல கொடுமைகளை அனுபவித்து
வந்தனர்.இந்தக் கொடுமைகள் அனைத்துக்கும்
முற்றுப் புள்ளி வைக்கும்விதமாக 2015 ஜனாதிபதித்
தேர்தலில் முஸ்லிம்கள் மஹிந்தவை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.மைத்திரி-ரணில் தலைமையிலான புதிய
அரசை உருவாக்கினர்.
மைத்திரியை
விடவும் ரணில்மீதே முஸ்லிம்கள் அதிக நம்பிக்கை வைத்தனர்.அவர் ஒரு ஜென்டில்மேன்
என முஸ்லிம்கள் நம்புகின்றனர்.முஸ்லிம்களுக்கு பாதுகாப்பாக இருப்பார்;மஹிந்த காலத்தில் உருவான பேரினவாதக்
குழுக்களைத் தடை செய்வார்;முஸ்லிம்களின்
மார்க்க விடயங்களை பாதுகாப்பார் என்று நம்பியே இந்த
அரசின் உருவாக்கத்துக்கு முஸ்லிம்கள் ஆதரவு வழங்கினர்.
ஆனால்,அவரது ஆட்சி மலர்ந்து
சிறிது காலத்துக்குள்ளேயே அவர் இந்த நம்பிக்கைகள்
அனைத்தையும் சிதைக்கத் தொடங்கியுள்ளார்.மஹிந்தவின் ஆட்சியில் போன்றே இந்த ஆட்சியிலும்
பேரினவாதக் குழுக்கள் செயற்படத் தொடங்குகின்றன.பள்ளிவாசல்களும் தாக்கப்பட்டுள்ளன.
இந்த வரிசையில் இஸ்ரேலின் பலஸ்தீன நில ஆக்கிரமிப்புக்கு
எதிராக யுனஸ்க்கோ அமைப்பால் ஐ.நாவில் கொண்டு
வரப்பட்ட பிரேரணைக்கு வைக்களிக்காமல் இலங்கை அரசு தவிர்ந்துகொண்டது.இது இந்த அரசை
உருவாக்குவதற்கு ஆதரவளித்த முஸ்லிம்களுக்கு பலத்த ஏமாற்றத்தைக் கொடுத்ததோடு
முஸ்லிம்களுக்கு எதிரான சர்வதேச நிகழ்ச்சி
நிரலுக்கு ஏற்ப ரணிலின் அரசு
செயற்படுகிறதா என்ற சந்தேகத்தையும் கிளப்பியுள்ளது.
இந்த சந்தேகத்தை உறுதிப்படுத்தும்வகையில்,இரண்டா வது நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.ஐரோப்பிய ஒன்றியத்தால் இலங்கைக்கு வழங்கப்பட்டு வந்த ஜீஎஸ்பி பிளஸ்
வரிச் சலுகையை மீள பெறுவதற்கு
முஸ்லிம்களின் தனியார் சட்டத்தில் கைவைக்கும்
நடவடிக்கையில் இந்த அரசு ஈடுபட்டுள்ளமையே
அந்த இரண்டாவது செயற்பாடாகும்.
இது இப்போது இலங்கை முஸ்லிம்கள்
மத்தியில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மஹிந்த ஆட்சியில் பொது
பல சேனா ஹலால் எதிர்ப்புப்
போராட்டத்தைத் தொடங்கியபோது முஸ்லிம்கள் மத்தியில் எவ்வாறானதோர் அச்சம் ஏற்பட்டதோ அதேபோன்றதோர் அச்சம் இப்போது ஏற்பட்டுள்ளது.
இலங்கைக்கு ஜீஎஸ்பி
பிளஸ் வரிச் சலுகையை மீள
வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள நிபந்தனைகளில் ஒன்றான முஸ்லிம்களின்
விவாகச் சட்டம் திருத்தப்பட வேண்டும்
என்ற நிபந்தனை முக்கியமான நிபந்தனையாக அமைந்துள்ளது.இலங்கை அரசு எல்லா
நிபந்தனைகளையும் விட்டுவிட்டு இந்த நிநிபந்தனையை மாத்திரம்
அவசர அவசரமாக நிறைவேற்றுவதற்கு முற்படுவதை
அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.இதற்காக அமைச்சவை உப
குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
ஜீஎஸ்பி பிளஸ் வரிச்
சலுகை என்பது ஐரோப்பிய ஒன்றியத்துக்கும்
இலங்கைக்கும் இடையிலான வர்த்தகத்துடன் தொடர்புபட்ட ஒன்றாகும்.இது தொடர்பில் நிபந்தனைகள்
விதிப்பதென்றால் அது வர்த்தகம் சார்ந்த
ஒன்றாக இருக்க வேண்டும்.ஆனால்,ஐரோப்பிய ஒன்றியம் விதிக்கும் நிபந்தனையோ வர்த்தகத்துடன் எந்த வகையிலும் தொடர்புபடாத
ஒரு நாட்டின்-ஓர் இனத்தின் கலாசாரத்தை
சிதைக்கும் சதியாகவே இருக்கின்றது.இதற்கும் வர்த்தகத்துக்கும் என்ன தொடர்பு?
ஒரு காலத்தில் இராணுவரீதியாக உலகை ஆக்கிரமித்து நாசம்
செய்த மேற்குலக சக்திகள்
இப்போது கலாசாரரீதியாக உலகை சீரழித்து வருவதை
அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.இந்த உண்மையை அறிந்து
இருந்தும் இந்த நாட்டு அரசு
அதற்கு அடிபணிவதுதான் கவலைக்குறிய விடயமாகும்.
கம்பியா
நாட்டிற்கு நிவாரணப் பொருட்களை வழங்குவதற்காக அந்த நாட்டில் ஓரினச்
சேர்க்கை மற்றும் விபசாரத்தை சட்டபூர்வமாக்க
வேண்டும் என்று பிரிட்டன் அண்மையில்
ஒரு நிபந்தனையை விதித்தது.ஆனால்,அந்த நாட்டின்
ஜனாதிபதி முதுகெலும்புடன் அந்த நிபந்தனையை எதிர்த்தார்.இப்படியான ஒரு கேவலமான ஒரு
நிபந்தனைக்கு கட்டுப்பட்டு உங்களது
நிவாரண உதவிகளை பெற வேண்டிய
கட்டாயம் எமக்கு இல்லை என்று
பிரிட்டனின் முகத்தில் அறைந்தால்போல் கூறிவிட்டார்.
நிவாரண
உதவிகளை வழங்குவதற்கும் ஓரினச் சேர்க்கையை சட்டபூர்வமாக்குவதற்கும்
என்ன தொடர்பு இருக்கின்றது?அது
ஒரு நாட்டை கலாசாரரீதியில் சீரழிக்கும்
செயல் என்பதை உணர்ந்தே கம்பியா
நாட்டு ஜனாதிபதி அதை எதிர்த்தார்.
அதேபோல்தான்
இந்த ஜீஎஸ்பி
பிளஸ் வரிச் சலுகையை விவகாரமும்.இந்த ஜீஎஸ்பி
பிளஸ் வரிச் சலுகைக்கும் முஸ்லிம்களின்
விவாக சட்டத்துக்கும் இடையில் எந்தத் தொடர்பும்
இல்லை என்று இந்த அரசுக்குத்
தெரியாதா?
தெரியும்.தெரிந்திருந்தும்,முஸ் லிம்களை இரையாக்கி ஜீஎஸ்பி பிளஸ் வரிச்
சலுகையை மீளப் பெறுவதற்கு இந்த
அரசு முற்படுகின்றது.இது இந்த அரசை
உருவாக்குவதற்கு துணைபோன முஸ்லிம்களுக்கு செய்கின்ற
பெரும் துரோகமாகும்.ஒருவேளை,தப்பித் தவறி
மஹிந்த வென்றிருந்தால் முஸ்லிம்களின் நிலை என்னவாகியிருக்கும் என்று
சொல்லத் தேவையில்லை.அப்படி தியாகத்துடன் இந்த
அரசை ஆட்சிபீடமேற்றிய முஸ்லிம்களுக்கு இந்த அரசு கொடுக்கும்
பரிசு இதுதானா?
சர்வதேச
நாடுகளுடன் நல்ல உறவு ஏற்பட்டுள்ளது
என்றால் அந்த உறவைப் பயன்படுத்தி ஜீஎஸ்பி
பிளஸ் வரிச் சலுகையை மீளப்
பெறவேண்டியதுதானே.எதற்காக அவர்களுக்கு அடிமைப்பட்டு
அதை பெற வேண்டும்?அப்படியென்றால்
சர்வதேச நாட்களில் இந்த அரசு உருவாக்கி
இருப்பது உறவா அல்லது அடிமைத்தனமா?
முஸ்லிம்களை
பலிகொடுத்து இந்த ஜீஎஸ்பி
பிளஸ் வரிச் சலுகையைப் பெறுவதற்குத்
துடிக்கும் இந்த அரசின் நயவஞ்சக
நடவடிக்கையை முறியடிப்பதற்கு இன்று முஸ்லிம்கள் கிளர்ந்தெழுந்துள்ளனர்.நாடுபூரா கவும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளனர்.
சிறிலங்கா
தவ்ஹீத் ஜமாஅத் அந்த ஆர்ப்பாட்டங்களை
கொழும்பிலும் சம்மாந்துறையிலும் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது.இதனைத் தொடர்ந்து நாடுபூராகவும்
இதுபோன்ற ஆர்ப்பாட்டங்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.மறுபுறம்,மஹி ந்த அணியின் முஸ்லிம்
பிரிவும் இதற்கு எதிராக நடவடிக்கையில்
இறங்கவுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் அகில இலங்கை உலமா
சபையும் முஸ்லிம் அரசியல் தலைமைகளும் என்ன
செய்யப்போகிறார்கள் என்று முஸ்லிம்கள் கேள்வி
எழுப்பியுள்ளனர்.என்ன செய்யப் போகிறார்கள்
என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
[எம்.ஐ.முபாறக் ]

0 comments:
Post a Comment