தேர்தலை எதிர்கொள்ள அஞ்சும் இவ்வரசு தேர்தலை பிற்போட உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவை பயன்படுத்தியதா என்ற அச்சம் எழுவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
ஊடகளுக்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஒரு அமைச்சருக்கு என்ன அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதோ அதைத் தான் ஒரு அமைச்சரால் செய்ய முடியும். அதனை மீறி எதனையும் செய்ய முடியாது. அவ்வாறு மீறி எதனையாவது செய்கின்ற போது அதனை நீதிமன்றத்தால் கேள்விக்குட்படுத்த முடியும்.
உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம், உறுப்பினர்கள் எண்ணிக்கை போன்றவை தொடர்பான விடயங்கள் அடங்கிய அறிக்கை ஒன்றை தயாரிக்க அசோக பீரிஸ் தலைமையிலான ஒரு குழு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டிருந்தது. அந்த குழுவின் அறிக்கையில் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவுக்கு எல்லை நிர்ணய விடயத்தில் மாத்திரமே தலையீடு செய்து மாற்றம் கொண்டு வர முடியும். மாறாக ஒரு சபையின் உறுப்பினர் எண்ணிக்கை, ஒற்றை உறுப்பினர் வட்டாரத்தை இரட்டை வட்டாரமாக்கல்,இரட்டை உறுப்பினர் வட்டாரத்தை ஒற்றை உறுப்பினர் வட்டாரமாக்கல் போன்றவற்றை செய்யும் அதிகாரமில்லை.
அசோக பீரிஸ் தலைமையிலான குழு வெளியிட்ட அறிக்கையில், அமைச்சர் பைஸர் முஸ்தபா தலைமையிலான ஒரு குழு அமைக்கப்பட்டு, அவருக்குள்ள அதிகாரத்தை மீறிய விடயங்கள் உட்புகுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாகத் தான் இன்று உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தலை நடாத்துவதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளது. ஒரு அமைச்சரின் தான்தோற்றித் தனமான செயற்பாட்டால் மக்களின் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அமைச்சர் பைஸல் முஸ்தபா, தன்னால் சிறந்த முறையில் தனக்கு வழங்கப்பட்ட அமைச்சை கையாள முடியாது என்ற தனது இயலாமையை உணர்ந்து தனது அமைச்சை இராஜினாமா செய்ய வேண்டும்.
அமைச்சர் பைஸர் முஸ்தபா ஒரு சட்டத்தரணி. அவர் ஜனாதிபதி ஆலோசகராகவும் பணியாற்றியவர். அவருக்கு இந்த சிறிய சட்ட விடயம் தெரியாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை. தேர்தலை பிற்போட என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையையும் செய்யும் இவ்வரசு, அமைச்சர் பைஸல் முஸ்தபாவை பயன்படுத்தி தேர்தலை பிற்போட, இவ்விடயத்தை செய்துள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது. இதுதான் அவர்களுக்குள்ள இறுதி சந்தர்ப்பமுமாகும். இவ்வரசின் இச் செயற்பாட்டின் ஊடாக அமைச்சர் பைஸல் முஸ்தபாவின் சட்டத்துறை அறிவு கூட கேள்விக்குட்படுத்தப்படுகிறது.

0 comments:
Post a Comment