தேர்தல் தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் எவ்வித பிழைகளும் இல்லையென்றும் மோசடியான வர்த்தமானி எதுவும் தயாரிக்கப்படவில்லையெனவும் உள்ளுராட்சி மன்றங்கள் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இன்று பாராளுமன்றத்தில் விவாதம் ஆரம்பமானவுடனேயே அமைச்சர் பைசர் முஸ்தபா அமைச்சரவை அறிவித்தல் தொடர்பாக உரையாற்ற போவதாக தெரிவித்தார். பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் அவ்விடயம் இல்லையென்பதால் சபாநாயகர் அதற்கு இடமளிக்கவில்லை. இதனை தொடர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தினிஸ்ரீஸ்கந்தராசா தனது உரையை ஆரம்பித்தார். அதனை தொடர்ந்து வரவு செலவு திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்ற அமைச்சர் பைசர் முஸ்தபாவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பாராளுமன்றத்தில் கடும் சூடான வாத பிரதிவாதங்கள் இடம்பெற்றன.
இதன் போது அமைச்சர் பைசர் முஸ்தபா தேர்தல் தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானியில் பிழைகள் இல்லையெனவும் மோல்டா நாட்டில் இடம்பெற்ற உள்ளுராட்சிமன்றங்கள் தொடர்பான மாநாட்டில் பங்கேற்பதற்காகவே தான் வெளிநாடு சென்றதாகவும் ஜனாதிபதியின் அனுமதியுடனனேயே தான் சென்றதாகவும் கூறினார். நாட்டை விட்டு தப்பிச் செல்லவில்லையெனவும் தமக்கு எதிராக 2 நம்பிக்கையில்லா பிரேரணைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தயாரிக்கப்படும் போது அனைத்துகட்சிகளுக்கும் அறிவித்ததாகவும் வர்த்தமானியில் எவ்வித தவறும் இல்லையென்பதை பொறுப்புடன் தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தார். மக்களின் நீதிமன்றத்தில் தான் தயாரானதாகவும் மோசடி வர்த்தமானி அறிவித்தல் தான் தயாரிக்கவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.

0 comments:
Post a Comment