- யூ.கே.காலித்தீன் -
காரைதீவுபிரதேசசபைக்கான தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடுவதென ஊர்த்தீர்மானம்!
எதிர்வரும் காரைதீவு பிரதேசசபைக்கான உள்ளுராட்சித்தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிடுவதென நேற்றுமுன்தினம் (19)ஞாயிற்றுக்கிழமை ஊர்த்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
காரைதீவு விபுலானந்த மணி மண்டபத்தில் அறங்காவலர்சபைச் செயலாளர் சி.நந்தேஸ்வரன் தலைமையில் ஊர்ப்பொதுக்கூட்டம் நடைபெற்றது.
சுமார் 3மணிநேரம் இடம்பெற்ற இக்கூட்டத்தில் ஊருக்கான மகாசபையை அமைப்பதென்றும் அதன் முதற்கட்டமாக பிரிவுதோறும் ஒவ்வொரு உறுப்பினர்களைத் தெரிவுசெய்ததோடு தலைவர் செயலாளர் பொருளாளர் உள்ளிட்ட நிறைவேற்றுச்சபையும் ஆலோசகர் சபையும் தெரிவுசெய்யப்பட்டது.
ஊர்மக்களின் கருத்துக்கள் 3மணிநேரம் அறியப்பட்டது. புதிய கலப்பு முறைத்தேர்தல் தொடர்பாக சிரேஸ்ட்ட ஊடகவியலாளர் வி.ரி.சகாதேவராஜா விளக்கமளித்தார்.
இறுதியில் இம்முறை கட்சிகளை மறந்து ஊர் இறைமைகருதி ஒரு சுயேச்சை அணியில் கேட்பது எனவும் அதில் எந்தக்கட்சியை சார்ந்தவர்களும் போட்டியிடலாமெனவும் முடிவானது. அதற்கான திட்டங்களும் முன்வைக்கப்பட்டன.
சுயேச்சையில் போட்டியிடுவது தொடர்பிலும் த.தே. கூட்டமைப்பில் போட்டியிடுவது தொடர்பிலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
ஸ்ரீலசு.கட்சி, ஜ.தே.கட்சி மற்றும் ரி.எம்.வி.பி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் நாம் தனித்துக்கேட்க தயாராகவிருந்தாலும் ஊர்முடிவு என்னவோ அதற்கு கட்டுப்படுவோம் என கருத்துரைத்தனர்.
த.தே.கூட்டணிப்பிரமுகர்கள் அக்கட்சியிலே போட்டியிடவேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர்.
இறுதியாக மக்கள் விருப்பத்தை ஜனநாயகமுறைப்படி அறிவதற்காக தலைவர் சி.நந்தேஸ்வரன் சுயேச்சை அணியை களமிறக்குவது என்பதற்கு ஆதரவானோர் கையை உயர்த்தும்படி கூறினார். சபையிலிருந்த கணிசமானோர் கையை உயர்த்தி ஆரவாரித்தனர்.
த.தே.கூட்டமைப்பு போட்டியிடவேண்டுமென்பதறகு ஆதரவானோர் கையை உயர்த்தும்படி கோரினார். ஆக 3 பேர் மாத்திரமே கையை உயர்த்தினர்.
இறுதியில் ஜனநாயக முறைப்படி மக்கள் விருப்பப்படி பெரும்பான்மையோர் கோரும் சுயேச்சையில் போட்டியிடுவது என்று தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
இறுதியில் ஊர்த்தலைவர் சி.நந்தேஸ்வரன் அத்தீர்மானத்தை அறிவித்து பிரகடனத்தையும் வாசித்தார்.
10அம்சங்கள் அடங்கிய பிரகடனம் பின்வருமாறு.
1. தொன்றுதொட்டு காலம் காலமாகப் பேணிவரும் காரைதீவின் ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் தமிழர் தாயகத்தின் ஒற்றுமைக்கும் இறைமைக்கும் பங்கம் ஏற்படாதவண்ணம் பேணிப்பாதுகாக்க எம்மாலான சகல முயற்சிகளையும் தொடர்ந்தும் மேற்கொள்வோம்.
2. இந்த நோக்கத்திற்காக விபுலமுனி பிறந்த காரைதீவு மண் பற்றாளர்கள் அனைவரும் ஒருமித்தகருத்தோடு சங்கமித்து வலுவானதொரு மகாசபையை உருவாக்கி மீண்டும் ஊர்க்கட்டுப்பாடொன்றை ஊர்த்தலைமைத்துவத்தை ஏற்படுத்தவேண்டிய கட்டாயமேற்பட்டுள்ளதால் அனைவரும் வாஞ்சையுடன் ஒத்துழைப்போம்.
3.காரைதீவுக்கான உள்ளுராட்சி சபையை நாம் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வதற்கான அனைத்து வளங்களும் அடிப்படைத் தகுதிகளும் இருந்தும் இன்று அவை மண்ணைவிட்டுப் போய்விடுமோ என்ற பேரபாயம் தோன்றியுள்ளதால் நாம் நன்கு திட்டமிட்டு அதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதை சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தெளிவுபடுத்துகின்றோம்.
4. எமது பிரதேசத்தின் சமகால அரசியல் களநிலவரத்தை மையமாகக்கொண்டு இம்முறை நாம் அரசியல்கட்சிகளை மறந்து எமது தாய் மண்ணிற்காக காரைதீவு மகாசபையின் நெறிப்படுத்தலில் சுயேச்சைக்குழுவொன்றை தேர்தலுக்கு முன்னிறுத்துவோம்.
5. அந்த சுயேச்சைக்குழுவில் சமுகபிரக்ஞையுள்ள சமுகசேவையாற்றும் நல்லொழுக்கமுள்ள சிறந்த தரமான வேட்பாளர்களை தெரிவுசெய்து நிறுத்த காரைதீவார் அனைவரும் இதயசுத்தியுடன் ஒன்றுபட்டுச் செயற்படுவோம்.
6. உள்ளுராட்சிதேர்தல் முடியும்வரை காரைதீவு எல்லைக்குள் சுயேச்சை என்ற ஒருமித்த சிந்தனையில் செயற்பட்டு 100வீத வாக்களிப்பை மேற்கொள்ள காரைதீவார் அனைவரும் 100வீதம் முயற்சிக்கவேண்டும்.
7. அந்தக்காலப்பகுதிக்குள் இப்பிரதேச எல்லைக்குள் கட்சி அரசியல் நடவடிக்கைகளுக்கும் கட்சி செயலகங்களுக்கும் தற்காலிகமாக இடமளிக்காதிருக்கவும் எந்தவிதமான இடம்பெறுகின்ற அரசியல் நிகழ்வுகளுக்கும் கட்சி சார்ந்தவர்களை அழையாதிருக்க உள்ளுர் அரசியல் பிரமுகர்கள் பூரண ஒத்துழைப்பை வழங்கவேண்டும்.
8. இந்தப் பிரகடனத்தை மீறும் விதமாகச் செயற்படும் செயற்பட முயற்சிக்கும் அல்லது அவ்வாறு செயற்படுகின்றவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குகின்ற எமதூரைச் சேர்ந்த அனைவரும் இவ்வூரின் இறைமையை கட்டுப்பாட்டை மீறியவராகக் கருதப்படுவர்.
9. உள்ளுராட்சி சபையை தொடர்ந்து தக்கவைப்பதற்கான நடவடிக்கைகளை மழுங்கடிக்கும் விதமாக நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்த செயற்பாட்டையும் முன்னெடுக்கும் தனிநபர்கள் அனைவரும் துரோகிகளாவர்.
10. அவ்விதம் மாறாகச் செயற்படும் துரோகிகளை ஊரிலிருந்து விலக்கிவைக்கவும் மேலும் சிலபல எதிர் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மகாசபை உள்ளிட்ட காரைதீவார் திடசங்கற்பம் பூணவேண்டுமெனவும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
0 comments:
Post a Comment