இலங்கையிலும் எதிர்காலத்தில் நிலநடுக்கங்கள் ஏற்படலாம் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் புவிச்சரிதவியல் தொடர்பான சிறப்பு பேராசிரியர் நோபர்ட் அன்டனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
2018ஆம் ஆண்டில் உலகில் எதிர்பார்க்காத பல்வேறு நாடுகளில் நிலநடுக்கங்கள் ஏற்படலாம் என்று அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் புவியியல் ஆய்வு மையம் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை இந்த வார ஆரம்பத்தில் விடுத்திருந்தது.
அத்துடன் அடுத்த வருடம் 20க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் ஏற்படலாம் என்றும் அந்த மையம் எதிர்வு கூறியுள்ளது.
புவிச் சுழற்சி வேகம் மில்லி செக்கனில் குறைவடைந்திருப்பதே இதற்கான காரணம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக ஐ.பி.சி தமிழ் செய்திப் பிரிவு, கொழும்பு பல்கலைக்கழகத்தின் புவிச்சரிதவியல் தொடர்பான சிறப்பு பேராசிரியர் நோபர்ட் என்டனியிடம் தொலைபேசி ஊடாக வினவியது.
இதுகுறித்து தெளிவுபடுத்திய பேராசிரியர், குறிப்பிட்ட காலத்தில் நிலநடுக்கம் ஏற்படும் என்பதை யாராலும் சரிவர கூறமுடியாது என்று குறிப்பிட்டார்.
இந்திய - அவுஸ்திரேலியா புவித்தட்டில் முறிவு ஏற்பட்டுள்ளதால் ஸ்ரீலங்காவிலும் எதிர்வரும் காலங்களில் நிலநடுக்கம் ஏற்படலாம் என்று தெரிவித்த பேராசிரியர் நோபர்ட் அன்டனி, இது எப்போதாகிலும் ஏற்படலாம் என்றும் எச்சரித்தார்.
இதேவேளை 400க்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை பலியெடுத்த ஈராக் – ஈரான் எல்லைப் பகுதியில் அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் உணர்வு இலங்கையின் இரு இடங்களில் உணரப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment