அழுத்கமைக்கு நீதியை பெற்றுக்கொடுக்க முயற்சிக்காத இவ்வரசு, கிந்தோட்டை பிரச்னைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் என நம்புவதைப் போன்ற ஏமாளித்தனம் வேறு ஏதுமில்லை என பாராளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த தெரிவித்தார்.
களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அளுத்கமை சம்பவம் இடம்பெற்ற போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நாட்டில் இருந்திருக்கவில்லை. அவர் இருந்திருந்தால் அது அத்தனை தூரம் பெரிதாக சென்றிருக்காது. அவர் நாடு திரும்பியதும் வேறு எங்கும் செல்லாது பாதிக்கப்பட்ட பகுதிக்கே விஜயம் செய்திருந்தார். இன்றைய ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேன நாட்டில் தான் உள்ளார். இருந்தும் கிந்தோட்டை பக்கம் செல்லவில்லை என்பதே இரு ஜனாதிபதிகளும் முஸ்லிம்கள் விடயத்தில் கொண்டுள்ள கரிசனையை எடுத்து காட்டுகிறது. அவ்வாறு சென்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உடனடியாக பெருந்தொகை பணத்தை ஒதுக்கி இராணுவத்தினரை கொண்டு பாதிக்கப்பட்ட இடங்களை மிகக் குறுகிய புணரமைப்பு செய்து கொடுத்தார்.
குறித்த பாதிக்கப்பட்ட இடங்களுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சென்று புணரமைத்து தருவோம் என கூறியிருந்தாலும் செயலில் எதனையும் இதுவரை செய்யவில்லை. அவரின் பல பேச்சுக்கள் வாயளவில் முற்றுப்பெருவதும் யாவரும் அறிந்த விடயம். இந்த பிரச்சினையின் அடிப்படையாக யார் இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். குறிப்பாக அசாத்சாலி, அமைச்சர் றிஷாத் பதியுர்தீன் போன்றவர்கள் யாரோ ஒரு மதகுரு இதனை தலைமை தாங்கி செய்ததாக குற்றம் சுமத்தியுள்ளனர். இவர்களை விசாரித்து குறித்த மத குரு யார் என்பதை அறிந்து உரிய தண்டனை வழங்க வேண்டும்.
இவ்வாட்சி அமைத்தலுக்கு முஸ்லிம்கள் வாக்குகள் ஓரிடத்தில் குவிந்தமையே பிரதான காரணமாகும். அவ்வாறு குவிய அலுத்கமை கலவரமே முதன்மை காரணமாக அமைந்திருந்தது. இப்படியான விடயத்தை இவ்வரசு இது வரை ஒரு பொருட்டாகவே கவனிக்கவில்லை. சில வேளை ஜனாதிபதி கிந்தோட்டை சம்பவத்தில் கரிசனை அற்று முஸ்லிம்களை ஒரு பொருட்டாகவே கவனிக்காது நடப்பதைப் போல் அளுத்கமை விடயத்திலும் முஸ்லிம்களுக்கு நடந்த அநியாயத்தை ஒரு பொருட்டாகவே கணக்கிடாமல் இருக்கலாம். இப்படியான அரசிடம் சென்று கிந்தோட்டைக்கு நியாயம் தேடுவதைப் போன்ற ஒரு ஏமாளித் தனம் வேறு எதுவுமில்லை.
நன்றாக சிந்தித்து பாருங்கள். இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்ட போது அதற்கான காரணம் அறிய ஒரு குழு நியமிக்கப்பட்டிருந்தது. அந்த குழுவில் எரிபொருளுடன் சம்பந்தப்பட்டவர்கள் உட்பட வேறு சிலரும் இருந்தனர். அந்த அறிக்கையும் மிக விரைவாக வெளிவந்தது. கிந்தோட்டை சம்பவத்துக்கான அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர் உத்தரவிட்டுள்ளார். இது நியாயமான அறிக்கையாக இருக்க முஸ்லிம் அமைச்சர் ஒருவராவது குறித்த குழுவில் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த அறிக்கை தாருங்கள் என்பதெல்லாம் வெறும் கண் துடைப்புச் செயற்பாடுகள். மர்ஹூம் அஷ்ரபின் மரண அறிக்கை காணாமல் போனது போன்று இதுவும் காணாமல் போய்விடும். அன்று அந்த அறிக்கை வந்த போது ஆட்சி செய்தவர்களே இன்று இவ்வாட்சியின் முக்கியஸ்தர்களாவர் என்பது குறிப்படத்தக்கது.
0 comments:
Post a Comment