நபி
பெருமானார் காட்டிய வழி எந்தளவு முக்கியமானது என்பதை தெளிவுபடுத்த நபி
பெருமானாரின் பிறந்த தினம் சிறந்த சந்தர்ப்பமாக அமைவதாக பிரதமர் ரணில்
விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மிலாத் உன் நபி தினத்தை முன்னிட்டு பிரதமர் விசேட வாழ்த்துச் செய்தியை இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது:
இஸ்லாமிய சமய நம்பிக்கையின்படி இறைவனால் முஹம்மத் நபியவர்கள்
இஸ்லாத்தின் இறுதி நபியாகத் தெரிவு செய்யப்பட்டதுடன், அவர் சிறந்த
சமூகமொன்றை உருவாக்குவதில் தனிச்சிறப்பான பணியை முன்நின்று ஆற்றிய தூதுவர்
ஆவார்.
மிகவும் எளிமையான முறையில், சுகபோகமற்ற, சிறப்பான வாழ்வினை வாழ்ந்து,
சமயத்தை நடைமுறைரீதியாக உயிர்ப்பித்த நபியவர்கள், தியாகத்தன்மை, சமத்துவம்,
சகவாழ்வு, சகோதரத்துவம், பொறுமை, நட்புறவு மற்றும் நெகிழ்வான கொள்கைகள்
ஊடாக சிறந்த சமூகமொன்றை உருவாக்க முடியும் என்பதை உலகிற்கு எடுத்துக்
காட்டினார்.
நபியவர்கள் சஊதி அரேபியாவின் மதீனா நகரில் சந்ததி சந்ததியாக நிலவி
வந்த கோத்திரச் சண்டைகளை சமாதானமாகத் தீர்த்து வைத்து அமைதியான சூழலொன்றை
உருவாக்கினார். அவ்வாறு அகிம்சையுடனும் நன்னெறியுடனும் வெற்றி கொண்ட மதீனா
நகரம் இன்று உலகம் முழுவதுமுள்ள முஸ்லிம்களின் புனிதஸ்தலமாக
மாறியுள்ளமையினை அவர்களது பிறந்த தினத்தில் விசேடமாகக் குறிப்பிட வேண்டும்.
நபியவர்களின் பிறந்த தினம் எமது நாட்டில் நிலையான அமைதி,
நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப முஹம்மத் நபியவர்கள் காட்டித் தந்த வாழ்க்கை
வழிமுறை எந்தளவு முக்கியமானது என்பதைத் தெளிவுபடுத்த சிறந்த
சந்தர்ப்பமாகவும் அமையும்.
இலங்கைவாழ் சகோதர முஸ்லிம்கள் உட்பட அனைத்து உலகவாழ்
முஸ்லிம்களுக்கும் சிறப்பான மீலாதுன் நபி தினமாக அமையட்டும் எனப்
பிரார்த்திக்கிறேன்.
ரணில் விக்கிரமசிங்க
பிரதம அமைச்சர்

0 comments:
Post a Comment