• Latest News

    January 12, 2018

    பிணைமுறி விவகாரத்தை எதிர்க்கட்சிகள் சந்தர்ப்பவாத அரசியலுக்கு பயன்படுத்துகின்றன - ஹக்கீம்

    - ஊடகப்பிரிவு -

    பிணைமுறி விவகாரத்தை எதிர்க்கட்சிகள் சந்தர்ப்பவாத அரசியலுக்கு பயன்படுத்துகின்றன: அமைச்சர் ரவூப் ஹக்கீம்

    பிணைமுறி விவகாரத்தை எதிர்க்கட்சிகள் சந்தர்ப்பவாத அரசியலுக்கு பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன. பாராளுமன்றத்தில் பிணைமுறி விவாதம் நடைபெறாமல், கைகலப்பு சம்பவம் நடைபெற்றது மிகவும் மோசமான செயற்பாடாகும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

    3.5 மில்லியன் ரூபா பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டில் நடைபெறும் அட்டுலுகம அல்–ஹஸ்ஸாலி மத்திய கல்லூரி மைதான புனரமைப்பு வேலைகளை நேற்று  பார்வையிட்ட பின்னர், அட்டுலுகம ஐ.தே.க. வேட்பாளர் ஒருவரின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

    அங்கு உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது;

    நாட்டில் ஊழல், மோசடிகள் நடைபெற்றால் அதை மூடிமறைப்பதற்கு யாரும் எத்தனிக்கவேண்டிய அவசியமில்லை. பிணைமுறி விவகாரத்தில் முறைகேடுகள் நடைபெற்றிருந்தால், தற்போது அமுலிலுள்ள தகவலறியும் சட்டமூலம் மக்கள் அதனை தெளிவாக அறிந்துகொள்ளமுடியும்.

    இப்படியான சூழ்நிலையில், பிழையான தகவல்களை வழங்கி மக்களை திசைதிருப்புவதற்கு எதிர்க்கட்சிகள் முயற்சித்துக்கொண்டிருக்கின்றன. பிணைமுறி முறைகேட்டினால், தேசிய உற்பத்தில் நூற்றுக்கு ஒரு வீதம் குறைந்துந்துவிட்டதாக பந்துல குணவர்த்த கூறுவது பிழையான குற்றச்சாட்டு. 

    பிணைமுறி முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படும் பேப்பச்சுவல் ட்ரசரீஸ் கம்பனியின்  10 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. தற்போது தொடரப்பட்டுள்ள நீதிமன்ற வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் இழக்கப்பட்டுள்ள பணம் அரசாங்கத்துக்கே திரும்பிவரும். 

    ஒரு நிறுவனம் மோசடி, குற்றச்செயல் மூலம் தவறான முறையில் இலாபம் ஈட்டியிருந்தால், குறித்த பணத்தை அரசாங்கத்தினால் சுவீகரிக்க முடியும். குறித்த பிணைமுறி மூலம் இழந்த பணத்தை அரசாங்கத்தினால் மீளப் பெற்றுக்கொள்ள முடியும்.

    டொலர் ஒன்றின் பெறுமதி 150 ரூபாவையும் தாண்டியுள்ளதற்கு பிணைமுறி விவகாரமே காரணம் என்று ஒருவர் கூறியதை நான் கேட்டேன். உண்மையில், டொலர் ஒன்றின் பெறுமதி இந்தளவுக்கு செல்லுமென்ற தீர்க்கதரிசனம் 4 வருடங்களுக்கு முன்பே இருந்தது.

    அதாவது, மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் பாரிய பொருளாதார கடன் தொகையொன்று, கடன் பெற்றுக்கொண்ட நேரத்தில் அறவிடப்படும் வட்டியின் மதிப்பீட்டுத் தொகை பற்றி பல பொருளாதார நிபுணர்களும், அறிஞர்களும் தகவல் வெளியிட்டிருந்தனர். டொலர் ஒன்றின் பெறுமதி 150 ரூபாவையும் தாண்டிச் செல்லும் என்பது தொடர்பாக அன்றிலிருந்தே கூறினார்கள்.

    இதுபோன்ற நிலை உருவானது தொடர்பாக மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். சாதாரண மக்களுக்கு இது தொடர்பாக எதுவும் தெரியாது. மத்திய வங்கியில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தை சொல்லிச் சொல்லி, இந்த அரசாங்கம் பாரிய நிதி மோசடிக்கு ஆளாகியதாகவும், இதனால் நாட்டுக்கு பாரிய நிதி இழப்பீடு ஏற்பட்டதாகவும் கிராம மக்கள் மத்தியில் போலிப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

    பிணைமுறி மோசடிகள் நடைபெற்றது என்றாலும், அவை வெளிப்படையானவை. இதற்கு முன்பிருந்த அரசாங்கத்தில் எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை. எல்லா கொள்ளையும் பகல்நேரக் கொள்ளையாகவே நடைபெற்றது. இதன்மூலம் ஒரு சதத்தைக்கூட அரசாங்கத்தினால் மீளப்பெற முடியவில்லை. எதனையும் நிரூபிக்கமுடியாத நிலையில் இந்த பணப் பயன்பாடு நடைபெற்றுள்ளது.

    முந்திய ஆட்சிக் காலத்தில் எது நடந்தாலும், யாராக இருந்தாலும் தண்டனை வழங்கக்கூடிய நடவடிக்கைகள் எதுவும் நடைபெறவில்லை. ஆனால், தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் முன்பிருந்த அரசாங்கத்தை போலன்றி வித்தியாசமான முறையில் முன்னகர்வுகளை மேற்கொண்டு வருகிறது. 

    தேசிய அரசாங்கம் என்ற முறையில் பிரதான இரு கட்சிகளிலும் சில சிரமங்கள் காணப்படுகின்றன. எனினும் அது இயற்கையான ஒரு விதியாகும். இது அரசியலில் விலக்கமுடியாத ஒன்றாகும். எனினும், பிணைமுறி விவகாரத்தை காரணம்காட்டி யாரும் குழப்ப நிலையை உருவாக்கவேண்டிய அவசியமில்லை.

    கொலைக் குற்றவாளியானாலும் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கினாலேயன்றி யாரையும் நாம் குற்றவாளிகாக நினைப்பது சட்டத்துக்கு விரோதமான செயலாகும். எனினும் இது தொடர்பாகவும் நாம் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும் என்றார்.


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பிணைமுறி விவகாரத்தை எதிர்க்கட்சிகள் சந்தர்ப்பவாத அரசியலுக்கு பயன்படுத்துகின்றன - ஹக்கீம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top