• Latest News

    January 13, 2018

    அமீர் அலியின் படம் இந்த தேர்தலுடன் முடிவுக்கு வரும்: - வாழைச்சேனையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம்

    - ஊடகப்பிரிவு -

    மீர் அலி தனக்கு செல்வாக்கு இருப்பதாக, ஐக்கிய தேசியக் கட்சியிடம் காட்டிக்கொண்டிருக்கும் படம் இந்த தேர்தலோடு முடிவுக்கு வரும். ஓட்டமாவடி பிரதேச சபையை வெல்லக்கூடிய சூழலை இப்போது ஏற்படுத்தியிருக்கிறோம். வாழைச்சேனையில் ஐக்கிய தேசியக் கட்சியும், இரட்டைக்கொடியும் தோல்வியடைச் செய்வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

    கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையில் ஒட்டகச் சின்னத்தில் (சுயேட்சைக் குழுவில்)  போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களின் தேர்தல் பிரசார அலுவலகங்களை வாழைச்சேனையில் திறந்துவைத்த பின்னர், கல்குடா தொகுதி அமைப்பாளர் றியால் தலைமையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்‌றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

    அங்கு உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது;

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் மரச்சின்னத்தில் போட்டியிட்ட காரணத்தினால், அமீர் அலி சில நூறு வாக்குகளால் தப்பிப்பிழைத்து உறுப்பினராக தெரிவானார். கல்குடா தொகுதியில் முஸ்லிம் காங்கிரஸ் பெரியதொரு முன்னேற்றத்தை அத்தேர்தலில் கண்டுகொண்டது.

    பசீர் சேகுதாவூதுக்கு மூன்று முறை தேசியப்பட்டியல் கொடுத்து நான்காவது தடவையும் கொடுக்கவில்லையென்றால், தலைவர் மீது அவதூறு சொல்லிக்கொண்டு திரிகிறார். அதுபோல, ஹஸன் அலியும் இரண்டு தடவை தேசியப்பட்டியல் பெற்றுக்கொண்டு மூன்றாவது தடவையும் அதை கேட்டுக்கொண்டு முரண்பட்டுச் சென்றுள்ளார். கட்சியில் அனுபவித்தவர்கள் விலகிச் சென்றாலும், கட்சியின் ஆதரவாளர்கள் எங்களுடன்தான் இருக்கின்றனர்.

    அம்பாறையில் யானைச் சின்னத்தை எங்களிடம் தந்த ஐக்கிய தேசியக் கட்சி, இங்கு அமீர் அலியிடம் கொடுத்துள்ளது. நாங்கள் யானையை தோற்கடித்து காட்டும்போது, தான் விட்ட தவறை பிரதமர் உணர்ந்துகொள்வார். மறைந்த தலைவர் அஷ்ரஃபின் காற்றுக்கூட படாத மயில் கட்சியின் தலைவர், இப்போது அவரின் கனவுகளை பேசிக்கொண்டு, அவரது படத்தையும் போட்டு போஸ்டர் அடித்து  திரிகிறார். இப்படியான சூழ்நிலைகளில் அசல் முஸ்லிம் காங்கிரஸ்காரர்கள் இவர்களுக்கு சோரம்போக முடியாது. 

    நாங்கள் ஆட்சியில் இருக்கின்ற இந்த நேரத்தில்தான் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவேண்டும். இதற்கு நீங்கள் எங்களின் கரங்களை பலப்படுத்தவேண்டும். கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகம் இன்னும் சரியான எல்லைகள் இல்லாமல் இருந்துகொண்டிருக்கிறது. இந்த எல்லைப் பிரச்சினை தீர்வுக்கு காணவேண்டும். அமைச்சர் வஜிர அபயவர்தனவிடம் சம்பந்தப்பட்டவர்களை அழைத்துச்சென்று இதற்கு தீர்வை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்திருக்கிறோம் என்றார்.


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அமீர் அலியின் படம் இந்த தேர்தலுடன் முடிவுக்கு வரும்: - வாழைச்சேனையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top