• Latest News

    April 22, 2019

    பயங்கரவாத தாக்குதல்களை கண்டிப்பது தார்மீகப் பொறுப்பாகும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம் கண்டியில் தெரிவிப்பு

    கிறிஸ்தவர்களின் உயிர்த்த ஞாயிறு தினத்தில் கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பு தேவாலயங்கள் மீதும் ஏனைய சில இடங்களிலும் நடந்த குண்டுத் தாக்குதல் மிக மோசமான பயங்கரவாத தாக்குதல்களாகும். இந்த தாக்குதல்களை கண்டிக்கவேண்டியது அனைவரினதும் தார்மீகப் பொறுப்பாகும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

    கண்டி மாவட்டத்திலுள்ள கதீப், முஅத்தின்களுக்கான தகாபுல் நிதியுதவி வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (21) கண்டி, மீராமக்காம் ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்றது. இந்நிதியத்துக்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் 5 இலட்சம் ரூபாவை வழங்கியிருந்தார். கதீப், முஅத்தின் நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் ரவூப் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்தார்.

    அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது;

    இங்கு நான் உரையாற்றிக்கொண்டிருக்கும்போது நாட்டின் மூன்று மாவட்டங்களில் பாரிய குண்டுத்தாக்குதல்கள் நடைபெற்றதை கேள்வியுற்று அதிர்ச்சியடைந்தேன். இயேசுநாதரை நாங்கள் ஈஸா நபி என ஏற்றுக்கொண்டிருக்கிறோம். அவர் மீண்டும் உலகில் தோன்றுவார் என்றும் நம்புகின்றோம்.

    இத்தாக்குதல்கள் குறித்து சில ஊகங்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. இவை வதந்திகளாக இருக்கலாம் அல்லது எவ்வித அடிப்படையற்ற செய்திகளாகவும் இருக்கலாம். இவை நாட்டில் மிகப்பெரிய அமைதியின்மையை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளாகவே பார்க்கப்படுகின்றன. 

    வெளிச் சக்திகளின் ஊடுருவல் நாட்டுக்குள் வந்துவிட்டதாகத்தான் எண்ணத் தோன்றுகிறது. அம்பாறை, தினக சம்பவங்களின் பின்னர், ஓரளவுக்கு அச்சம் நீங்கி மக்கள் இயல்புநிலைக்கு வந்துகொண்டிருக்கும் நிலையில் மீண்டும் கொடூரத் தாக்குதல்கள் அரங்கேற்றப்பட்டுள்ளன.

    இஸ்லாம் சமயத்தில்தான் சகிப்புத்தன்மை அதிகமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இஸ்லாமிய வரலாற்றில் உமர் கத்தாப் (ரலி) அவர்களது காலப்பகுதியில் ஜெரூசலம் வெற்றிகொள்ளப்பட்டது. அப்போது தேவாலயம் ஒன்றுக்கு சென்றிருந்தவேளை, தொழுகைக்கான நேரம் வந்துவிட்டது.

    குறித்த தேவாலயத்துக்குள் தொழுவதற்கான ஏற்பாடுகளை செய்துதருவதாக பாதிரியார் கூறினார். ஆனால், அதை ஏற்க மறுத்த உமர் கத்தாப் (ரலி), தான் இங்கு தொழுதால் அதை காரணமாக வைத்து எதிர்காலத்தில் இதனை பள்ளிவாசலாக மாற்றிவிடக்கூடும் என்பதை காரணம் காட்டி, அவர் வெளியில் சென்று தொழுகையை நிறைவேற்றினார்.

    இப்படியான சமய சகிப்புத்தன்மை கொண்ட சமூகம், தற்போதைய சம்பவங்கள் மூலம் பயங்கரவாதத்தில் ஈடுபடுவதான தோற்றப்பாட்டை உருவாக்குவதற்கான சதிகள் திட்டமிட்டு நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. ஒருசிலரை வேண்டுமென்றே ஏவிவிட்டு கூலியாட்களாக செய்யவைக்கின்ற நிலவரம்தான் மிகவும் ஆபத்தானது. 

    அரசியலாக இருந்தாலும் ஆன்மீகமாக இருந்தாலும் இவை தங்களது சொந்த தேவைகளுக்காக மேற்கொள்ளப்படுகின்ற பயங்கரவாத சம்பவங்களாகும். இவ்வாறான செயற்பாடுகளை யாராலும் அங்கீகரிக்கமுடியாது. இவை மிகவும் கண்டனத்துக்குரிய விடயங்களாகும். இந்த பயங்கரவாத தாக்குதலை கண்டிக்கவேண்டியது நமது தார்மீகப் பொறுப்பாகும்.

    அமைதி மற்றும் சமாதானத்தை விரும்புகின்ற, பயங்கரவாதத்தை அங்கீகரிக்காத ஆன்மீகப் பரம்பரையில் வளர்ந்தவர்கள் என்ற வகையில், இந்த சோதனையான காலகட்டத்தில் எல்லாம் வல்ல இறைவனிடம் பாதுகாப்பு தேடுவோம்.

    இந்த நெருக்கடியான சூழ்நிலையில் அனைவரும் மன அமைதியுடனும், தூரநோக்கோடும் நடந்துகொள்ளவேண்டும். இப்படியான சதித்திட்டங்களிலிருந்து சமூகத்தையும், நாட்டையும் எல்லாம் வல்ல இறைவன் பாதுகாக்க வேண்டும் என்றார்.

    இந்நிகழ்வில் கதீப், முஅத்தின் நலன்புரி அமைப்பின் தலைவர் மெளலவி காரி எம்.ஐ. அப்துல் ஜப்பார், இணைச் செயலாளர்களான ஆலிம் நாகூர் ரஹீம், யூ.எல். முஹம்மது இஸ்ஹாக், ஆலோசகர் சியாத் ஹமீத் ஆகியோர் உட்பட பலர் கலந்துகொண்டனர். 

    ஊடகப்பிரிவு 
    ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்



    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பயங்கரவாத தாக்குதல்களை கண்டிப்பது தார்மீகப் பொறுப்பாகும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம் கண்டியில் தெரிவிப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top