• Latest News

    April 22, 2019

    சூத்திரதாரிகள் யாராக இருந்தாலும் அதியுச்ச தணடனை வழங்கப்பட வேண்டும்; கல்முனை முதல்வர் றகீப் கண்டனம்

    (அஸ்லம் எஸ்.மௌலானா)
    எமது நாட்டின் முக்கிய தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்கள் மீது மிலேச்சத்தனமான தாக்குதல்களை மேற்கொண்டு, நூற்றுக்கணக்கான மனித உயிர்களை காவு கொண்ட சம்பவங்களின் சூத்திரதாரிகள் கண்டறியப்பட்டு, அவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு அதியுச்ச தணடனை வழங்கப்பட வேண்டும் என்று கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இது குறித்து அவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

    "கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பு தேவாலயங்களில் ஈஸ்டர் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த பக்தர்கள் மீதும் ஹோட்டல்களில் தங்கியிருந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட பொது மக்கள் மீதும் நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதல் சம்பவங்கள் கொடூரமானதும் இரக்கமற்றதுமான மிக மோசமான வெறியாட்டமாகும்.

    இச்சம்பவங்களை நாம் வன்மையாகக் கண்டிப்பதுடன் இதனால் உயிர்நீத்த சகோதர நெஞ்சங்களின் குடும்பத்தினர் மற்றும் உறவுகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அத்துடன் இந்நாடு எதிர்கொண்டுள்ள துயரத்தில் கல்முனை மாநகர மக்களாகிய நாமும் பங்கெடுத்து, துக்கம் அனுஷ்டிப்போம்.

    ஆகையினால் இக்கொடூர சம்பவங்களை கண்டிக்கும் வகையிலும் உயிர்நீத்தவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையிலும் எமது கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட அரச, தனியார் நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள், கடைகள் மற்றும் தெருக்களில் கறுப்பு, வெள்ளைக் கொடிகளை பறக்க விடுமாறும் அன்பாக வேண்டுகோள் விடுக்கின்றேன்.

    அதேவேளை நாட்டில் சட்ட, ஒழுங்கை நிலை நாட்டுவதற்கு அரசாங்கம் எடுக்கின்ற அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கி, தற்போதைய பதற்றம் நிலை நீங்கி, அச்சமற்ற சூழல் உருவாக்குவதற்கும் அமைதி, சமாதானம், தேசிய நல்லிணக்கம் நீடித்து நிலைப்பதற்கும் பங்களிப்பு செய்வோம்" என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சூத்திரதாரிகள் யாராக இருந்தாலும் அதியுச்ச தணடனை வழங்கப்பட வேண்டும்; கல்முனை முதல்வர் றகீப் கண்டனம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top