• Latest News

    September 16, 2019

    முஸ்லிம்களின் அரசியல் பலம் எடுப்பார் கைப்பிள்ளை நிலை!

    சஹாப்தீன் -
    முஸ்லிம்களுக்கு எதிராக போலியான பிரச்சாரங்களை மேற்கொண்டு முஸ்லிம்களை சிங்களவர்களின் எதிரிகள் என்று பௌத்த இனவாதிகளும், இனவாத தேரர்களும் காட்டிக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம்கள் மடலாக்கும் மாத்திரைகளை உணவில் கலப்பவர்கள், சர்வதேச பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்கள், பூர்வீகக் குடிகளல்லர், தேசப்பற்றல்லாதவர்கள் என்றெல்லாம் ஒரு பக்கத்தில் பிரச்சாரங்களை மேற்கொண்டிருக்கின்றார்கள். மறுபக்கத்தில் முஸ்லிம்களின் மதவிழுமியங்களின் மீதும், கலாசார நடை, உடைகளையும் தடை செய்ய வேண்டுமென்று போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். இவை போதாதென்று முஸ்லிம்களின் பொருளாதாரத்தையும், வாழ்விடங்களையும் குறிவைத்து தாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம்களுக்கு எதிராக இத்தனை வன்முறைகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் பாதுகாப்பு தரப்பினர் அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். மக்களின் பாதுகாப்பை அரசியல் யாப்பின் மூலமாக கடமையாக் ஏற்றுக் கொண்டிருக்கும் அரசாங்கம் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் பௌத்த இனவாதிகளையும், இனவாத தேரர்களையும் சட்டத்திற்கு முன் நிறுத்துவதற்கோ அல்லது கட்டுப்படுத்துவதற்கோ போதிய நடவடிக்கைளை எடுக்காது பௌத்த இனவாதிகளை பாதுகாத்துக் கொண்டிருக்கின்றது. ஆதலால், முஸ்லிம் சமூகம் பாதுகாப்பு, இருப்பு, தொழில் செய்வதற்கான வசதி போன்ற பல விடயங்களில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்நிலைமையை மாற்றி முஸ்லிம்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படாததொரு சூழலை உருவாக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் அரசாங்கத்திற்கும், முஸ்லிம் கட்சிகளுக்கும், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இருக்கின்றது.

    பாதுகாப்பு
    2009ஆம் ஆண்டிற்குப் பின்னர் முஸ்லிம்கள் பௌத்த இனவாதிகளினதும், இனவாத தேரர்களினதும் நடவடிக்கைகளினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். பௌத்த இனவாதிகள் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்னதாகவே அரங்கேற்றி விட்டார்கள். அநாகரிக்க தர்மபாலவின் காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட ஒடுக்கும் நடவடிக்கைகள் இன்று வரைக்கும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டு யுத்தத்தினால் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொண்ட இனவாத நடவடிக்கைகளை சற்று ஓரத்தில் வைத்துக் கொண்டார்கள் பௌத்த இனவாதிகள். விடுதலைப் புலிகளின் போராட்டத்தை தமிழர்களின் போராட்டமாகவே பார்த்தார்கள். இதனால், ஒரே நேரத்தில் தமிழர்களையும், முஸ்லிம்களையும் எதிர்ப்பது நல்லதல்ல. அவ்வாறு எதிர்த்தால் தமிழர்களும், முஸ்லிம்களும் ஒற்றுமைப்பட்டு விடுவார்கள் என்ற அச்சம் பௌத்த இனவாதிகளை ஆட்கொண்டது. ஆயினும், முஸ்லிம்களுக்கு எதிரான பல நடவடிக்கைகளை சத்தமில்லாது செய்து கொண்டிருந்தார்கள். உதாரணமாக முஸ்லிம்களின் பூர்வீகக் காணிகளை புனித பிரதேசம் என்றும், வன இலாகாவுக்குரியது என்றும் அரசாங்கம் பறித்துக் கொண்டது.
    2009ஆம் ஆண்டு புலிகளை தோற்கடித்தன் பின்னர் முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த இனவாதிகளும், இனவாத தேரர்களும் பகிரங்கமாக முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம்களின் உயிர், இருப்பிடம், பொருளாதாரம், தொழில்கள், கலாசாரம், அபாயா, ஹிஜாப், முஸ்லிம் தனியார் சட்டம், இஸ்லாமிய சரிஆ, குர்ஆன் ஆகியவற்றை  அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டிருக்கின்றார்கள். இதனால், தங்களின் மீது இனவாதிகள் எந்த வேளையில் தாக்குவார்களோ என்று முஸ்லிம்கள் அச்சப்பட்டுள்ளார்கள். குறிப்பாக இந்நிலையை வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே மிகத் தெளிவாக தெரிந்து கொள்ள முடியும்.

    ஆதலால், முஸ்லிம்களின் பாதுகாப்பை  உறுதி செய்து கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. தற்போது ஜனாதிபதித் தேர்தல் பற்றியே கட்சிகளினாலும், அமைப்புக்களினாலும், ஊடகங்களினாலும், பொது மக்களினாலும் பேசப்படுகின்றன. ஜனாதிபதித் தேர்தலை முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதற்குரிய ஒரு கருவியாக முஸ்லிம்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
    ஆனால், முஸ்லிம்களின் பிரதிநிதிகளாகவுள்ள கட்சிகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதித் தேர்தலுக்கான ஆதரவு என்ற விடயத்தை வைத்து முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பையும், ஏனைய விடயங்களையும் பாதுகாத்துக் கொள்வதற்குரிய பேரம் பேசுதலைச் செய்ய வேண்டும். முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பையும், கோரிக்கைளையும் நிறைவேற்றக் கூடிய ஒருவரையே ஆதரிக்க முடியும் என்று சொல்வதற்கு பதிலாக வெற்றி பெறக் கூடிய வேட்பாளiரை தேடிக் கொண்டிருக்கின்றார்கள். யார் வெற்றி பெற்றாலும், யார் ஆட்சியை அமைத்தாலும் முஸ்லிம்களின் நிலை இவ்வாரே இருந்து கொண்டிருக்கும். பொறுப்பற்ற தலைவர்கள் முஸ்லிம்களின் அரசியலை கையில் எடுத்துக் கொண்டிருப்பதே இதற்கு காரணமாகும். இன்று முஸ்லிம்களின் அரசியலை தமது கடமையாக அறிவித்து மக்களின் ஆணையைப் பெற்றுள்ள முஸ்லிம் கட்சிகள், முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் எந்தவொரு நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. அரசாங்கத்தை உண்மையாக கண்டிப்பதற்கு வக்கற்றவர்களாகவே முஸ்லிம் அரசியல் தலைவர்கள் இருந்து கொண்டிருக்கின்றார்கள். இந்நிலை தொடருமாயின் முஸ்லிம் சமூகம் அடிமைகளாகவும், முஸ்லிம் அரசியல் தலைவர்கள் பேரினவாதிகளின் எடுபிடிகளாகவும் செயற்பட வேண்டியேற்படும். இத்தகையதொரு நிலை சமூகத்திற்கு அவமதிப்பையே ஏற்படுத்தும். ஆதலால், முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு முஸ்லிம் அரசியல் தலைவர்கள் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    உறுதிமொழிகள்
    ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்த வரை முஸ்லிம் கட்சிகள் கடந்த காலங்களைப் போன்று எந்தவொரு உடன்படிக்கைகளையும் செய்து கொள்ளாது ஆதரவை வழங்க முடியாது. முஸ்லிம்களின் கோரிக்கைகள் குறித்தான உடன்படிக்கைகளை செய்து கொண்டால், அத்தகையதொரு உடன்படிக்கை சிங்கள மக்களின் வாக்குளைப் பெற்றுக் கொள்வதற்கு தடைகளை ஏற்படுத்திவிடுமென்று வெறும் உறுதிமொழிகளை மாத்திரம் நம்பிக் கொண்டு முஸ்லிம்களை வாக்களிக்குமாறு ஜனாதிபதி வேட்பாளரை அடையாளங் காட்ட முடியாது. அவ்வாறு முஸ்லிம் கட்சிகள் அடையாளங் காட்டினால் கூட அதனை ஏற்றுக் கொள்ளவும் முடியாது. கண்களில் தெளிவான பார்வை இருக்கின்ற நிலையில் கண்களை மூடிக் கொண்டு இருளில் சமூகத்தை தள்ளிவிடுவதற்கு அனுமதிக்க முடியாது.
    இன்றைய அரசாங்கமாக இருந்தாலும், முன்னைய அரசாங்கங்களாக இருந்தாலும் முஸ்லிம்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. முஸ்லிம் அரசியல் தலைவர்களும் உறுதி அளிக்கப்பட்ட சமூகத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வதற்குரிய போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. மாறாக முழு அமைச்சர், இராஜாங்க அமைச்சர், அரை அமைச்சர் பதவிகளைப் பெற்றுக் கொள்வதற்காக அழுத்தங்களை கொடுத்துக் கொண்டார்கள். முஸ்லிம் அரசியல் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் பதவிகளை முதன்மைப்படுத்தியே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அமைச்சர் பதவிகளை இராஜினாமாச் செய்வதில் கூட தமது சுய அரசியலுக்கு இலாபம் இருந்தால் மாத்திரமே அதற்கு துணிவார்கள்.

    ஆதலால், முஸ்லிம் அரசியல் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் கொழும்பில் திரைமறைவில் சுய தேவைகளையும், பதவிகளையும் முன் வைத்து உறுதிமொழிகளைப் பெற்றுக் கொண்டு வருவார்கள். அதனை அடைந்து கொள்வதற்காக சமூகத்தின் தேவைகளை முன் வைத்து உடன்படிக்கைகளை செய்து கொண்டுதான் முன் வந்துள்ளோம் என்று பொய்யுரைப்பார்கள். அதனை கட்சிகளின் ஆதரவாளர்கள் மெய்யுரை என்று நம்பி வாக்களிப்பார்கள். ஆனால், தேர்தலின் பின்னர் சமூகம் எந்த நன்மைகளையும் அடைந்து கொள்ளாது. தனி நபர்கள் பெற்றுக் கொள்ளும் அமைச்சர் பதவிகள் ஒரு போதும் சமூகத்தின் உரிமைகளாகக் கொள்ள முடியாது. அந்த அமைச்சர் பதவிகளினால் இது வரைக்கும் முஸ்லிம் சமூகம் தமது பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளவில்லை. முஸ்லிம் ஒருவர் நீதி அமைச்சராக இருக்கின்ற போதுதான் முஸ்லிம்களுக்கு பல அநீயாயங்களை பௌத்த இனவாதிகள் செய்தார்கள். அவர்கள் சட்டத்திற்கு முன் சுதந்திரமாக நடமாடினார்கள். ஆதலால், அமைச்சர் பதவிகளும், வெறும் உறுதிமொழிகளும் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு, உரிமைகளைப் பெற்றுக் கொடுக்கும் என்று நம்ப முடியாது.

    தற்போது ஜனாதிபதித் தேர்தலை முன் வைத்து வேட்பாளர்களும், அரசியல் கட்சிகளும் பல்வேறு உறுதிமொழிகளை வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள். அந்த உறுதிமொழிகள் எதுவும் முஸ்லிம்களின் பாதுகாப்பு, இருப்பு, சுதந்திரம், உரிமைகள் சார்ந்த விடயங்களை உள்ளடக்கியாக அமையவில்லை. ஆயினும், முஸ்லிம் கட்சிகளும், முஸ்லிம் அரசியல் தலைவர்களும் முஸ்லிம்களின் கோரிக்கைகளையும், அபிலாசைகளையும் வெளிப்படுத்தி அறிக்கைகளை வெளியிட்டாமலும் இருக்கின்றார்கள். வெற்றி பெறக் கூடியதொரு வேட்பாளரை மாத்திரமே தேடிக் கொண்டிருக்கின்றார்கள். சமூகம் சார்ந்த அரசியலுக்கு இத்தகையதொரு தேடல் பொருத்தமானதல்ல.

    முஸ்லிம்களுக்கு பாதகம்
    தற்போது நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டுமென்று எல்லா அரசியல் கட்சிகளும் தெரிவித்துக் கொண்டிருக்கின்றன. இது நிiவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டுமென்று கோரிக் கொண்டிருக்கும் தரப்பினரையே சந்தோசப்படுத்தும். ஆனால், முஸ்லிம்களைப் பொறுத்த வரை ஜனாதிபதி முறையை ஒழிப்பது பாதக நிலையையே ஏற்படுத்தும். ஜனாதிபதி தெரிவுக்கு மாத்திரமே சிறுபான்மையினரின் வாக்குகள் கட்டாயம் தேவைப்படுகின்றன. அதனால், ஜனாதிபதி தேர்தலின் போது முஸ்லிம்களின் தேவைகளை அடைந்து கொள்வதற்குரிய அதிகபட்ச நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பாராளுமன்ற தேர்தலைப் பொறுத்த வரை அல்லது அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் தேவை குறைவாகவே இருக்கின்றது. அமைச்சர் பதவிகளைப் பெற்றுக் கொள்வற்காக கட்சி மாறும் நோய் உள்ள வரை அரசாங்கத்தை அமைப்பதில் பாரிய சிரமங்கள் இருக்கப் போவதில்லை. அமைச்சர் பதவிகளின் மீது அதிக நாட்டம் கொண்டவர்களாக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களே உள்ளார்கள்.

    மேலும், புதிய அரசியல் யாப்பு பற்றி மீண்டும் பேசத் தொடங்கியுள்ளார்கள். இதனை அவர்கள் நிறைவேற்றுவார்களா என்பதில் சந்தேகங்கள் உள்ளன. ஆயினும், அரசியலில் எதுவும் நடக்காது என்று நம்புவது முட்டாள்களின் அரசியலாகவே இருக்கும். ஆதலால், புதிய அரசியல் யாப்பு விடயத்தில் முஸ்லிம்களின் நலன்கள் உள்ளடக்கப்பட வேண்டும். ஏற்கனவே, இன்றைய அரசாங்கத்தனால் முன வைக்கப்பட்ட அரசியல் அமைப்பு நகல் திட்டத்தில் முஸ்லிம்களின் அபிலாசைகள் உள்ளடக்கப்படவில்லை. முஸ்லிம்களுக்கு அரசியல் அமைப்பு ரீதியாக அதிகாரங்கள் இருக்கவில்லை. முஸ்லிம் அரசியல் தலைமைகளும், கட்சிகளும் அது குறித்து கவனம் செலுத்தவில்லை. முஸ்லிம்கள் மத்தியில் அதிகாரங்கள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்ட போது, இதுவொரு நகல் திட்டமாகும். திருத்தங்களுடன் முஸ்லிம்களின் அபிலாசைகளும் உள்ளடக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டன. ஆயினும், குறித்த அரசியல் யாப்புக்குரிய உத்தேச திட்டம் முஸ்லிம் அரசியல் தலைமைகளின் அங்கிகாரத்துடன்தான் முன் வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. புதிய அரசியல் யாப்பு கொண்டு வரப்படமாட்டாது. அதனால் அது குறித்து கவலை கொள்ளத் தேவையில்லை. நடக்காத ஒன்றுக்காக ஏன் குழம்பிக் கொண்டிருக்க வேண்டுமென்று முஸ்லிம் கட்சி ஒன்றின் தலைவர் தெரிவித்திருந்தார். இதுவொரு பொறுப்பற்ற கருத்தாகும். ஒரு குறித்த விடயம் நடக்கும் அல்லது நடக்காது  என்பதற்கு அப்பால் அந்த ஆவணத்தில் முஸ்லிம்களின் அபிலாசைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளது என்பது முக்கியமாகும். புதிய அரசியல் யாப்புக்குரிய குறித்த முன்னோட்ட வரைபானது நடக்காது போனாலும் அதுவொரு வரலாற்றுப் பதிவு என்பதனை முஸ்லிம் அரசியல் தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    இதே வேளை, தேர்தல் முறை மாற்றம் கூட முஸ்லிம்களுக்கு பாதகமாகவே அமைந்துள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள விகிதாசார தேர்தல் முறைக்கு பதிலாக புதிய கலப்பு தேர்தல் முறையை அமுல்படுத்துவதற்கு பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி உள்ளுராட்சி மன்றங்களின் தேர்தல் நடைபெற்றுள்ளது. அதனையடுத்து மாகாண சபைகளின் தேர்தலும் கலப்பு முறையில் நடைபெறவுள்ளது. ஏற்கனவே நடைபெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிவுகளின் படி முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் குறைவடைந்துள்ளது. தனி ஒரு கட்சி பெரும்பான்மையை பெறுவதில் மிகப் பெரிய சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. அதே போன்றுதான் மாகாண சபைத் தேர்தலிலும் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் குறைவடையும் என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. உள்ளுராட்சி சபைகளுக்குரிய தேர்தல் வட்டாரங்களை பிரிக்கும் போது முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிக்கும் வகையில் வட்டாரங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. இதனை முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் உள்ளுராட்சி மன்றங்களில் காணக் கூடியதாக இருக்கின்றது. அதே போன்றுதான் மாகாண சபைகளுக்குரிய தேர்தல் தொகுதிகளை எல்லை நிர்ணயம் செய்யும் போது முஸ்லிம்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படவுள்ளன. ஏற்கனவே செய்துள்ள மாகாண சபைத் தேர்தலுக்குரிய எல்லை நிர்ணயங்கள் முஸ்லிம்களுக்கு பாதக நிலையை தோற்றுவிக்கும் என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. ஆனால், அதற்கு என்ன நடந்துள்ளதென்று அறிந்து கொள்ள முடியாதுள்ளன.

    இவைகளுக்கு மத்தியில் இன்று முஸ்லிம்கள் எதிர்நோக்குகின்ற மிகப் பெரிய சவாலாக தங்களின் கலாசாரத்தை பேணி, மதவிழும்மியங்களின் அடிப்படையில் வாழ்வதற்குரிய சூழல் படிப்படியாக பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மிகவும் திட்டமிட்ட வகையில் முஸ்லிம்களின் கலாசாரத்தையும், மதவிழுமியங்களையும் அழிக்கும் நடவடிக்கைகள் அல்லது தடை செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கட்டுள்ளன.
    ஆகவே, முஸ்லிம்களை குறி வைத்தே அனைத்து நடவடிக்கைகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அரசாங்கத்தினால் முன் வைக்கப்பட்ட அனைத்து திட்டங்களும் முஸ்லிம்களுக்கு பாதகமாகவே அமைந்தள்ளன. ஜனாதிபதி முறையை ஒழித்தல், புதிய தேர்தல் முறை, தேர்தல் தொகுதிகளின் எல்லை நிர்ணயம், முஸ்லிம் தனியார் சட்டம், குர்ஆன் அவமதிப்பு, பெண்கள் அணியும் ஹிஜாப், ஹலால் உணவு முத்திரை என எல்லாம் முஸ்லிம்களுக்கு பாதகமாகவே இருந்து கொண்டிருக்கின்றன. ஆனால், முஸ்லிம் அரசியல் தலைவர்களும், கட்சிகளும் இவை பற்றி கவனம் செலுத்துவதில்லை. இவற்றிக்கு எதிராக அறிக்கைகளை மாத்திரம் விடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். நாம் அதற்கு எதிராக குரல் கொடுத்தோம் என்று சொல்லுவதனைத் தவிர, நாம் அதனை தடுத்து நிறுத்தினோம் என்று சொல்லுவதற்கு எதனையும் முஸ்லிம் அரசியல் தலைமைகள் சாதிக்கவில்லை.

    ஆகவே, முஸ்லிம் அரசியல் தலைவர்கள் சொல்லும் கிளிப்பிள்ளை கதையை இனியும் கேட்டுக் கொண்டிருக்க முடியாது. முஸ்லிம்களின் பாதுகாப்பு, இருப்பு, மதச் சுதந்திரம் போன்றன அரசியல் யாப்பு ரீதியாக உறுதி செய்யப்பட வேண்டும். தற்போதுள்ள யாப்பில் கூட முஸ்லிம்களின் உரிமைகள் குறித்து தெரிவிக்கப்பட்டிருந்தாலும், அதன்படி நடக்கும் சூழல் இல்லாமலுள்ளது. இன்று அரசாங்கத்தின் கொள்கை முதல் பொருளாதாரம் அனைத்தையும் பௌத்த இனவாதிகளும், இனவாதத் தேரர்களும்தான் தீர்மானிக்கின்றார்கள். இவர்களை மீறும் துணிவு எந்தவொரு பேரினவாத அரசியல் தலைவர்களுக்கும் கிடையாது. எங்களின் கட்டுப்பாட்டில் உள்ள வாக்குகளை பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் நாங்கள் சொல்லுவது போன்றுதான் அரசாங்கம் செயற்பட வேண்டுமென்று பௌத்த இனவாத அமைப்புக்களும், இனவாத தேரர்களும் பேரினவாதக் கட்சிகளை பயங்காட்டி வைத்துள்ளார்கள். இத்தகையதொரு பயம் முஸ்லிம் கட்சிகளுக்கும் அமைப்புக்களும் கிடையாது. முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் அவர்;களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். அப்போதுதான் வாக்குகளைப் பெற்லாம் என்ற பயம் பேரினவாத கட்சிகளிடம் ஊட்டப்பட  வேண்டும். இதற்கு முஸ்லிம் அரசியல் தலைவர்கள் சமூகத்திற்காக நேர்மையாகவும், உண்மையானகவும், நல்ல தலைவர்களாகவும் செயற்பட வேண்டும். முஸ்லிம் அரசியல் தலைமைகளிடம் நேர்மை, உண்மை போன்ற நல்ல குணங்கள் இல்லாமல் இருப்பதனால்தான் முஸ்லிம்கள் தங்களின் உரிமைகளை இழந்து அச்சுறுத்தல்களுக்கு உட்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். சிறந்த அரசியல் தலைமை இல்லாத சமூகம் சீரழிந்து கொண்டு செல்லும், அதன் அரசியல் பலம் எடுப்பார் கைபிள்ளையாகிவிடும் என்பதற்கு இலங்கை முஸ்லிம்களின் இன்றைய நிலை நல்ல எடுத்துக் காட்டாகும்.
    Virakesari 15.09.2019
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: முஸ்லிம்களின் அரசியல் பலம் எடுப்பார் கைப்பிள்ளை நிலை! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top