• Latest News

    September 16, 2019

    காணாமல்போன முஸ்லிம்கள் (பேசப்படாத சங்கதி)

    ஏ.எல்.நிப்றாஸ் -
    ஒரு குடும்பத்தில் இருந்து ஒருவர் காணாமல்போதல் அல்லது வலிந்து காணாமலாக்கப்படுவதன் வலி மிகக் கொடியது. குhணாமல் போய்விட்ட தமது பிள்ளை, தந்தை, சகோதரன், உறவினர் உயிருடன்தான் இருக்கின்றாரா? அவருக்கு என்ன நடந்தது? மீண்டும் வருவாரா? என்ற ஏக்கம் கலந்த கேள்விகளுக்கு விடையின்றியே சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கின்றனர். 

    இலங்கையில் பெருமளவான தமிழ் மக்கள் காணாமல் போயிருக்கின்றார்கள் என்பதை மறுக்க முடியாது. ஆனால், இந்நாட்டில் காணமலாக்கப்பட்டது அல்லது காணாமல் போனது தமிழ் சகோதரர்கள் மட்டுமல்ல. கணிசமான முஸ்லிம்களும் வலிந்து காணாமலாக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதை அடிக்கோடிட்ட வார்த்தைகளால் இந்தக் கட்டுரை பேச முனைகின்றது. 
    காணாமல்போன முஸ்லிம்களில் - அரச அதிகாரிகள், முக்கியஸ்தர்கள், செல்வந்தர்கள், வறிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், விவசாயிகள் தொடக்கம் புனித பயணம் மேற்கொண்டு வீடு திரும்பியவர்களும் உள்ளடங்குகின்றார்கள். 

    இவர்களுள் சிலர் பணத்திற்காக கடத்தடப்பட்டு காணாமல் போனவர்கள். இன்னும் சிலர் அவர்களது பதவிக்காக, ஊரில் அவர்களுக்கு இருந்த செல்வாக்குக்காக, ஆயுதப் படைகளுடன் தொடர்பைப் பேணியமைக்காக, ஏனைய மக்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக, வஞ்சம் தீர்ப்பதற்காக கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டதாகச் சொல்ல முடியும்.
    யுத்த காலத்தில் கோலோச்சிய ஆயுதக் குழுக்களால் பெருமளவிலான முஸ்லிம்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டதாக முஸ்லிம்கள் தரப்பில் நம்பப்படுகின்றது. இது தவிர படைத்தரப்பு முதல் வெள்ளைவேன் கடத்தல் காரர்கள் வரை வேறு பல தரப்பினராலும் முஸ்லிம்கள் வலிந்து காணாமலாக்கப்பட்டிருக்கின்றார்கள் என்றும் கருதப்படுகின்றது. 

    காணமலாக்குதல் வேறு

    'இங்கு காணாமல் போதல்' என்பது வேறு காணமலாக்கப்படுதல் என்பது வேறு என்பதை முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும். காணாமல் போதல் என்பது தற்செயலாக, உள்நோக்கம் எதுவுமின்றி நிகழ்கின்ற ஒரு சம்பவமாகும். ஆனால் காணாமலாக்கப்படுதல் என்பது வலுக்கட்டாயமாக அல்லது வலிந்து ஒரு நபர் காணாமல்போகச் செய்யப்படுவதாகும். இதற்குப்; பின்னால் ஏதாவது நோக்கம் இருக்கும். 

    இலங்கையில் பெருமளவான சம்பவங்கள், இதில் இரண்டாம் வகையைச் சேர்ந்தவை என்பதாலேயே வலிந்து காணாமலாக்கப்படுவோர் என்ற சொற்றொருடர் பயன்படுத்தப்படுகின்றது என்பதையும் வலிந்து காணமலாக்கப்படுவோர் தொடர்பில் பல சர்வதேச சட்டங்களும் உள்ளன என்பதையும் நினைவிற் கொள்ள வேண்டும்.

    இதேவேளை, ஒரு நபர் காணாமல்போய் அல்லது காணமலாக்கபட்டு பின்னர் வீடு திரும்பவில்லை என்றால் அவர் தொடர்ச்சியாக தேடப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும். அந்த தேடலின் பெறுபேறுகளின் அடிப்படையில், ஒன்றில் அந்த நபர் மீட்கப்பட்டு ஒப்படைக்கப்பட வேண்டும். அல்லது, அவருக்கு மரணச் சான்றிதழ் வழங்க வேண்டும் அதுவும் இல்லை என்றால் அவர் என்னவானார் என்பதையாவது கண்டறிந்து சொல்ல வேண்டும் என்பதே பொது நியதியாக கொள்ளப்படுகின்றது. 

    இந்நிலையில், கடந்த சில வருடங்களுக்குள் கொழும்பில் அமைக்கப்பட்ட காணாமல்போனோர் அலுலகத்தின் தலைவரான சாலிந்த பீரிஸ், இலங்கையில் 20 ஆயிரத்திற்கும்  குறையாத நபர்கள் இதுவரை காணாமல் போயிருப்பதாக குறிப்பிட்டிருந்தார். அவரது கருத்துப்படி உலகளவில் பொதுமக்கள் அதிகளவில் காணாமல் போன நாடுகளில் ஒன்றாக இலங்கையும் இடம்பிடித்திருப்பதாக அறிய முடிகின்றது. 

    இலங்கையில் தமிழ் மக்கள் நடாத்திய தொடர் போராட்டங்களின் பின்னணியில் காணாமல்போனோர் விவகாரம் ஐ.நா. வரை கொண்டு செல்லப்பட்டதையடுத்து, உள்நாட்டில் மேற்படி காணாமல்போனோர் அலுவலகம் அமைக்கப்பட்டது. சட்ட ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன. முன்னதாக, காணாமல்போனோரை கண்டறியும் ஆணைக்குழுவும், நல்லிணக்க ஆணைக்குழுவும் இது தொடர்பான ஏகப்பட்ட விடயங்களைக் கண்டறிந்துள்ளது. 

    இலங்கையில் அப்பாவிப் பொது மக்கள் முதற்கொண்டு எக்னெலிய கொட போன்ற பிரபலங்கள் வரை பலர் காணாமலாக்கப்பட்டுள்ளார்கள். இதுபற்றிய முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மனித உரிமை ஆணைக்குழு மற்றும் மேற்குறிப்பிட்ட ஆணைக்குழுக்களில் உறவினர்கள் முறையிட்டுள்ளனர். ஆயினும், இவ்விடயம் இன்னும் பேசுபொருளாக இருக்கின்றதே தவிர பாரிய முன்னேற்றங்கள் ஏற்பட்டதாக தெரியவில்லை. 

    போராடாத முஸ்லிம்கள்

    இந்த இடத்தில்தான் இந்த நாட்டில் முஸ்லிம்களும் பெருமளவில் காணமலாக்கப்பட்டுள்ளார்கள் என்பதை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியுள்ளது. முதலில் முஸ்லிம்கள் இவ்விடயத்தை உணர வேண்டும். இது தொடர்பான முறைப்பாடுகளைச் செய்ய வேண்டும். பொது அமைப்புக்களும் சமய அமைப்புக்களும் இதனை ஆவணப்படுத்த வேண்டும். மிக முக்கியமாக, முஸ்லிம் கட்சித் தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் இதற்காகவும் போராட வேண்டும். ஆனால் அப்படியான முயற்சிகள் எதுவும் தமிழ் சமூகத்தில் நடப்பது போல, முஸ்லிம்கள் மத்தியில் நடக்கவில்லை என்பது மன வருத்தத்திற்குரியது. 

    உயிருடன், கண்முன்னே இருக்கின்ற மக்களை கவனிக்காத முஸ்லிம் அரசியல்வாதிகள் காணமல்போய்விட்ட முஸ்லிம்களுக்காக குரல்கொடுத்து நமக்கு என்ன பயன் என்று நினைக்கின்றார்களோ தெரியவில்லை. ஏனெனில், பெயர் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய ஓரிரு அரசியல்வாதிகள் தவிர வேறு யாரும் இது விடயத்தில் வாயைக் கூட திறப்பதை காண முடியவில்லை. 

    இதேவேளை, விருதுகளுக்காகவும் பாராட்டு விழாக்களுக்காகவும் பெரும் தொகையை செலவு செய்கின்ற அமைப்புக்கள், காணாமல் போனோர் தொடர்பில் தமது பங்களிப்பை வழங்கவில்லை. சமூக சேவகர்கள் என்றும் வேறு பல அடைமொழிகளிலும் பொன்னாடை போர்த்தப்படுகின்றவர்கள், பெரும் ஆளுமை போல பொய்த்தோற்றம் காட்டுகின்ற பேர்வழிகளில் அநேகர் இவ்வாறான சமூக ரீதியிலான போராட்டங்களுக்காக முன்னின்றதை காண்பது அரிது. 

    ஆனால், இவற்றையெல்லாம் தாண்டி அத்திபூத்தாற்போல முஸ்லிம் சமூக, அரசியல் பரப்பில் சில முன்முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதை குறிப்பிட்டாக வேண்டும். அம்பாறை மாவட்டத்தை மையமாகக் கொண்டியங்கும் மனித எழுச்சி நிறுவனத்தின் ஏற்பாட்டில், காணாமல் போனார் முஸ்லிம் குடும்பங்களின் ஒன்றியம் அண்மையில் ஒரு ஊடகமாநாட்டையும் கவனஈர்ப்பு பேரணியையும் நடாத்தியது. முஸ்லிம் சமூகத்திற்காக மேற்கொள்ளப்பட்ட இந்த முன்மாதிரி முயற்சி மிகவும் பாரட்டப்பட வேண்டியதும் நன்றிக்குரியதுமாகும். 

    முஸ்லிம்களின் தரவுகள்

    முஸ்லிம்கள் யுத்த காலத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அதிகளவில் காணமல் போயுள்ளனர். ஆயுதக் குழுக்களால் கணிசமானோரும் பாதுகாப்பு படை, இந்திய அமைதிப்படை மற்றும் ஒட்டுக்குழுக்களால் ஒரு சிலரும் காணமலாக்கப்பட்டிருக்கலாம் என்றே இதுவரையும் அவர்களது குடும்பத்தினர் நம்பிக் கொண்டிருக்கின்றனர். இதேபோன்று, தென்னிலங்கையிலும் ஆங்காங்கே முஸ்லிம் வர்த்தகர்கள் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளனர். 

    90களில் கிழக்கு மாகாணத்தில் பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றிய முஸ்லிம் பொலிஸார் மற்றும் ஊர்காவற்படை வீரர்கள் என கிட்டத்தட்ட 600 பேர் காணாமல் போயினர். இவர்களுள் சிலர் படுகொலை செய்யப்பட்டு விட்டதாகச் நம்பப்பட்டாலும் மக்களைப் பொறுத்தமட்டில் பலரது பெயர்கள் இன்னும் காணாமல் போனார் பட்டியலிலேயே இன்னும் இருக்கின்றன.
    போர் மேகம் சூழந்திருந்த காலத்தில் புனித ஹஜ் கடமையை முடித்தவிட்டு காத்தான்குடிக்கு திரும்பிக் கொண்டிருந்த முஸ்லிம்கள் சுமார் 150 பேர் கடத்தப்பட்டு காணமலாக்கப்பட்டனர். இது தொடர்பில் பாராளுமன்றத்திலும் பிரஸ்தாபிக்கப்பட்டதுடன் விசாரணை அறிக்கைகளும் வெளியாகின. அதேவேளை, அவர்களுள் 68 பேர் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளதாக அப்பிரதேச முஸ்லிம் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர். ஆனால் அது பற்றிய விசாரணைகள் முழுமையாக இடம்பெறவில்லை. 

    இதே காலப்பகுதியில் அம்பாறை, திருமலை மற்றும் மட்டக்கப்பளப்பு மாவட்டங்களில் வாகனங்களுக்காக, பணத்திற்காக பலர் கடத்திச் செல்லப்பட்டனர். காலையில் வயலுக்குப் போன விவசாயிகள், கடமைக்குச் சென்ற முஸ்லிம் அரச அதிகாரிகள், வீடுகளில் இருந்தவர்கள் எனப் பலதரப்பட்டோர் 'பேர்மியுடா முக்கோணத்திற்குள்' அகப்பட்டது போல மாயமாகினர். 

    இவர்களில் பலருக்கு உண்மையில் என்ன நடந்தது எனத் தெரியாது. சிலரை இந்தத் தரப்பு கொன்று விட்டது என்று அனுமானங்கள் இருக்கின்றதே தவிர உறுதியான தகவல்கள் இல்லை என்பதுடன், முழுமையான விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லை. 

    கடந்த ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதி, அதாவது சர்வதேச வலிந்து காணமலாக்கப்படுவதற்கு எதிரான தினத்தில் அம்பாறை மாவட்டத்தில் காணமல்போனாரின் கவனஈர்ப்பு போராட்டமொன்றை ஏற்பாடு செய்த மனித எழுச்சி நிறுவனத்திற்கு, இதுவரை (கூட்டமாக, குழுவாக காணாமல் போனவர்கள் தொடர்பான தகவல்கள் நீங்கலாக) காணாமல் போயுள்ள 85 இற்கு மேற்பட்ட முஸ்லிம் தனிநபர்கள் தொடர்பான தகவல்களை அவர்களது குடும்பத்தினர் வழங்கியுள்ளதாக அவ் ஸ்தாபனத்தின் பிரதம நிறைவேற்று உத்தியோகத்தர் கே. நிஹால் அகமட் கூறுகின்றார். 

    குடும்பங்களின் கோரிக்கை

    இதேவேளை, காணாமல் போனோரின் முஸ்லிம் குடும்ப ஒன்றியமானது ஒரு அறிக்கையும் வெளியிட்டு;ள்ளது. அதில், 'யுத்தத்தினால் குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கில் முஸ்லிம்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளோம். குறிப்பாக, யுத்தத்தினால் காணாமல் ஆக்கப்பட்ட முஸ்லிம்களின் உரிமை தொடர்பாக உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் குரல் கொடுக்கும் நிலை மிகக் குறைவாகவே காணப்படுகின்றது. அத்துடன், நீதி தீர்க்கும் பொறிமுறைகளில் முஸ்லிம் சமூகம் பாராபட்சமாக நடத்தப்பட்டு புறந்தள்ளப்பட்டு வருகின்றனர்' என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    'அரசாங்கம் ஜெனீவாவில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் என நம்புவதற்கு காணாமல் போனவர்களின் குடும்பங்கள் விரும்புகின்றனர். எனினும் வாக்குறுதிகளைத் தவிர, காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பிர்களின் இதயங்களை வென்றெடுக்கவோ அவர்களினால் உணரக்கூடிய மாற்றங்களைச் செய்யவோ அரசாங்கத்தின் பக்கத்திலிருந்து இதுவரையில் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, பொறுப்புள்ள அரசாங்கம் என்றவகையில், காணாமல் போன முஸ்லிம்கள் குறித்த உண்மையை வெளிப்படுத்தி, நீதியை நிலைநாட்டுங்கள் என்று; காணமல் போனவர்களின் குடும்பங்கள் தமது கோரிக்கையை இந்த கவனஈர்ப்பின் மூலம் முன்வைத்துள்ளன. 

    உண்மையில், யுத்தம் இடம்பெறுகின்ற நாடொன்றில் காணாமல்போதல் என்பது பொதுவியல்பு என்று வைத்துக் கொண்டாலும், நிலைமாறுகால நீதிப் பொறிமுறையூடாக இதுவிடயத்தில் நீதி நிலைநாட்டப்பட வேண்டியது அவசியமாகும். ஆனால், இதுவரை காலமும் காணமலாக்கப்பட்ட முஸ்லிம்கள் தொடர்பில் முஸ்லிம்கள் ஒரு சமூகமாக பரந்த அடிப்படையில் (தமிழர்களைப் போல்) போராடவும் இல்லை. மறுபுறத்தில் ஆட்சியாளர்களும் கண்டு கொள்ளவில்லை. 

    இவ்வாறு வடக்கு கிழக்கில் காணாமல் போன முஸ்லிம்கள் கண்டுபிடித்துக் கொடுக்கப்படவும் இல்லை அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை பொறுப்புவாய்ந்த பாதுகாப்பு தரப்பினர் கண்டறிந்து சொல்லவும் இல்லை. காணாமலாக்கப்பட்டவர்கள் உயிருடன் இருக்கின்றார்களா? இறந்து விட்டார்கள் என்றால் அவர்களை படுகொலை செய்த பாவிகள் யார் எனக் கண்டறிந்து  அவர்ககளுக்கு எதிராக விசாரணைகள் இடம்பெறவில்லை. 

    இதற்கிடையில், இவ்வாறு காணாமல் போனவர்கள் சிலரின் குடும்பங்களுக்கு மரணச் சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. மரணச் சான்றிதழ் இருந்தால் நஷ்டஈடு அல்லது விஷேட கொடுப்பனவு கிடைக்கும் என்ற எண்ணம் அவர்களது குடும்பத்திற்கு ஏற்படுத்தப்பட்டதாலும், அவர்கள் இத்தனை வருடம் கழித்து திரும்பி வரவா போகின்றார்கள் என்ற ஒரு விரக்தி மனோநிலையிலும், சில இடங்களில் போதிய வழிகாட்டல் வழங்காத அரச அதிகாரிகளின் நச்சரிப்பாலும் பலருக்கு இந்த மரண அத்தாட்சிப் பத்திரம் வழங்கபட்டுள்ளதாக அறிய முடிகின்றது. இன்னும் சுமார் 75 சதவீதமான காணாமல் போன முஸ்லிம்களுக்கு மரண அத்தாட்சிப் பத்திரமும் இல்லை அவர்களுக்கு என்ன நடந்தது என்ற தகவலும் இல்லாத நிலையே நீடிக்கின்றது. 

    செய்ய வேண்டியது

    ஆதலால், முஸ்லிம்கள் இங்கு பல முன்னெடுப்புக்களைச் செய்ய வேண்டியிருக்கின்றது. கிட்டத்தட்ட பூச்சியத்தில் இருந்தே முஸ்லிம்கள் காணாமல் போனாருக்கான நீதி விசாரணைக்காக போராட வேண்டிய கட்டத்திலேயே இருப்பதாகச் சொல்ல முடியும். தினமும் போராடிக் கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்கே இன்னும் விடையளிக்கப்படாத போது, முஸ்லிம்கள் எவ்விதம் கையாளப்படுவார்கள் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. ஆயினும் போராடுவது நமது தார்மீகக் கடமை.
    எனவே, முஸ்லிம்கள் இது ஒரு குடும்பத்தில் ஒருவர் காணாமல் போன விவகாரமாக நோக்காது, ஒரு சமூகத்தில் இருந்து பல நூற்றுக்கணக்கானோர் காணாமலாக்கப்பட்ட ஒரு சமூகப் பிரச்சினையாக நோக்க வேண்டும். முஸ்லிம்களை வைத்து அரசியல் பிழைப்பு நடாத்துகின்ற முஸ்லிம் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த விடயத்தையும் கொஞ்சம் திரும்பிப் பார்க்க வேண்டும். 'இந்த நாட்டில் கணிசமான முஸ்லிம்களும் காணமலாக்கப்பட்டுள்ளார்கள்' என்ற செய்தியை அரசாங்கத்திற்கும் சர்வதேசத்திற்கும் கொண்டு செல்ல வேண்டியுள்ளது.
    வடக்கு, கிழக்கிலும் மலையகத்திலும் தென்னிலங்கையிலும் பிரதேசம் வாரியாக தெளிவான அடிப்படையில் காணாமல் போன முஸ்லிம்கள் (தலைமறைவாகிய, வெளிநாட்டு அடைக்கலம் எடுத்த பேர்வழிகள் தவிர) தொடர்பான உண்மைத் தரவுகளை ஆவணப்படுத்துவதுடன், அவர்களுக்காக வெறுமனே மரணச் சான்றிதழும் நஷ்டஈடும் பெறுவதற்கு முன்னதாக, மேற்படி முஸ்லிம்களை காணலாக்கியவர்கள், கடத்தியர்கள், கொலைசெய்தவர்கள் யார் யார்? என்பதை கண்டறிய வேண்டும். அதற்காக பாரபட்சமற்ற நீதி விசாரணையொன்று மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.
    காணமலாக்கப்பட்டோர் தமிழராக, முஸ்லிமாக, சிங்களவராக யாராக இருந்தாலும் அதன் வலி ஒன்றுதான். எனவே நிiலாறுகால நீதியின் அடிப்படையில் இது விடயத்தில் முஸ்லி;ம்களுக்கும் நீதி நிலைநாட்டப்பட வேண்டும். இது 21 இலட்சம் மக்களையும், 15 இலட்சம் வாக்குகளையும் கொண்ட ஒரு சமூகத்தின் வேண்தல் என்பதை நினைவிற் கொண்டு செயற்ட வேண்டும். வெறொன்றுமில்லை!
    -    (வீரகேசரி 15.09.2019)

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: காணாமல்போன முஸ்லிம்கள் (பேசப்படாத சங்கதி) Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top