(அஸ்லம் எஸ்.மௌலானா)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது, தனக்கு கிடைத்த தேசியப்பட்டியல்
எம்.பி. நியமனங்களில் அதிகமானவற்றை வடக்கு- கிழக்கு மாகாணங்களுக்கு
வெளியேதான் வழங்கியிருக்கிறது என்று தெரிவித்துள்ள அக்கட்சியின் தவிசாளரும்
முன்னாள் வடக்கு- கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எல்.அப்துல் மஜீத்,
சிலர் மு.கா.வின் வரலாறுகளை திட்டமிட்டு திரிபுபடுத்தி, கட்சியை
மலினப்படுத்தி வருகின்றனர் என்றும் கவலை வெளியிட்டார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம்
எம்.எச்.எம்.அஷ்ரஃப்பின் 19வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கட்சியின்
பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ்
ஒழுங்கு செய்திருந்த நினைவேந்தல் நிகழ்வு நேற்று கட்சியின் கல்முனைக்
காரியாலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தலைமை வகித்து நினைவுப் பேருரை
நிகழ்த்துகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அங்கு தவிசாளர் அப்துல் மஜீத் மேலும் தெரிவிக்கையில்;
"தலைவர் மரணித்த செப்டம்பர்-16 ஆம் திகதி வந்து விட்டால் நினைவுக்
கூட்டங்கள் நடப்பது போன்றே பத்திரிகைகளில் நினைவுக் கட்டுரைகளும்
பிரசுரமாகின்றன. ஆனால் சிலரது கட்டுரைகளில் வரலாறுகள்
திரிபுபடுத்தப்பட்டும் உண்மைக்குப் புறம்பான தகவல்களும்
உள்ளடங்கியிருப்பதைக் காண முடிகிறது. இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.
ஒரு பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ள கட்டுரையில், முஸ்லிம் காங்கிரஸ்
வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே போட்டியிட்டு, அப்பகுதி மக்களின்
வாக்குகளை பெற்றுள்ளபோதிலும் அவர்களுக்கு அஷ்ரப் எந்த நன்மையும்
செய்யவில்லை என்று கட்டுரையாளர் குற்றஞ்சாட்டியுள்ளார். இது அபத்தமாகும்.
ஏனெனில் 1989ஆம் ஆண்டு முஸ்லிம் காங்கிரஸ் முதன்முறையாக தனித்துப்
போட்டியிட்டு, பெற்றுக் கொண்ட ஒரேயொரு தேசியப்பட்டியலை வடக்கு- கிழக்குக்கு
வெளியே புஹார்தீன் ஹாஜியாருக்கு வழங்கியிருந்தது. அவ்வாறே 1994ஆம் ஆண்டு
எம்.எம்.சுஹைர், அசித்த பெரேரா போன்றோரும் அதன் பின்னர் டொக்டர் ஹப்ரத்,
அஸ்லம் ஹாஜியார், கே.ஏ.பாயிஸ், சட்டத்தரணி சல்மான், டொக்டர் ஹாபிஸ்
போன்றோருக்கும் ஒவ்வொரு பாராளுமன்ற பொதுத் தேர்தலிலும் தேசியப்பட்டியல்
எம்.பி. நியமனங்களை வழங்கி, வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே உள்ளே
பகுதிகளுக்கு சேவையாற்றுவதற்கான வாய்ப்புகளை வழங்கியிருந்ததை ஆணித்தரமாக
சொல்லிவைக்க விரும்புகின்றேன்.
ஸ்தாபகத் தலைவரது காலத்திலும் சரி, தற்போதைய காலத்திலும் சரி, எமது
கட்சிக்குக் கிடைத்த தேசியப்பட்டியல் நியமனங்களில் அதிகமானவற்றை வடக்கு,
கிழக்குக்கு வெளியேதான் அவர்கள் வழங்கியிருக்கின்றனர் என்கிற வரலாற்றை சில
பத்தி எழுத்தாளர்கள் இருட்டடிப்பு செய்து வருகின்றனர்.
அவ்வாறே கட்சியின் தோற்றம், வரலாறு, அதன் சமூகப் பணிகள் போன்றவை
தொடர்பிலும் பிழையான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. இலங்கை- இந்திய
ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட பின்னரே முஸ்லிம் காங்கிரஸ் தோற்றம் பெற்றதாக
சிலர் தெரிவிக்கின்றனர். அது பிழையான கருத்தாகும். ஏனெனில் அந்த ஒப்பந்தம்
1987 ஜூலை 27ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் 1981 ஏப்ரல் 21ஆம் திகதி
சமூக சேவை அமைப்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்டு,
முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் அபிலாஷைகளை
வென்றெடுப்பதனை இலக்காகக் கொண்டு 1986 நவம்பர் 29 ஆம் திகதி அரசியல்
கட்சியாக பிரகடனம் செய்யப்பட்டதென்பதும் புத்தளத்தில் முஸ்லிம்கள் படுகொலை
செய்யப்பட சம்பவம் தொட்டே முஸ்லிம் காங்கிரஸின் தோற்றுவாய்
ஆரம்பமானதென்பதும் வரலாறாகும்.
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல்கலைக்கழக மாணவர்கள் பலர் ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சியை தமது ஆய்வுக்காக எடுத்துக் கொள்கின்றனர்.
அவர்களுக்கு உண்மையான தகவல்கள் சொல்லப்படா விட்டால் கட்சியின் வரலாறு
எவ்வாறு சரியானதாக பதிவாகும் என்கின்ற கவலை எழுகின்றது. அடுத்த
சந்ததியினருக்கு உண்மையான வரலாறுகள் சென்றடைய வேண்டும் என்றால் தகவல்கள்
திரிபுபடுத்தப்படாமல் உரியவர்களிடம் உறுதிப்படுத்தி, உள்ளவாறு சொல்லப்பட
வேண்டும். அதற்காக கட்சி மட்டத்தில் உண்மையான தகவல்களைத் திரட்டி,
நூலுருவ்வாக்கம் செய்வதற்கு பொறுப்புள்ளவர்கள் முன்வர வேண்டும் என
வேண்டுகோள் விடுக்கின்றேன்.
இந்நிகழ்வில் கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப்,
மாநகர சபை உறுப்பினர்கள், உலமாக்கள் மற்றும் கட்சிப் பிரமுகர்கள் பலரும்
பங்கேற்றிருந்தனர்.
0 comments:
Post a Comment