• Latest News

    September 09, 2019

    பங்காளிகளின் பரிதாபங்கள்

    சஹாப்தீன் -
    காலத்திற்கு காலம் ஆட்சி அமைந்த அரசாங்கங்களில் முஸ்லிம் கட்சிகள் பங்காளிகளாகவே இருந்து வந்துள்ளன. தற்போதைய ஆட்சியிலும் முஸ்லிம் கட்சிகள் அரசாங்கத்தின் பங்காளிகளாக இருந்து கொண்டிருக்கின்றன. அமைச்சர் பதவிகளில் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் இருந்து கொண்டிருக்கின்றார்கள். அதே வேளை, தேசிய கட்சிகளின் மூலமாக பாராளுமன்றம் சென்றுள்ள முஸ்லிம் உறுப்பினர்களும் உள்ளார்கள். இவர்களிலும் சிலர் அமைச்சர் பதவிகளைப் பெற்றுள்ளார்கள். இவ்வாறு அரசாங்கத்தில் அமைச்சர் பதவிகளைப் பெற்றும், அரசாங்கத்திற்கு ஆதரவும் வழங்கிக் கொண்டிருக்கும் இவர்கள் தங்களை அரசாங்கத்தின் பங்காளிகள் என்றழைத்துக் கொண்டிருக்கின்றார்கள். 

    முஸ்லிம் கட்சிகளும், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்தின் பங்காளிகள் என்று இருந்து கொண்டிருந்தாலும் இவர்களினால் முஸ்லிம் சமூகம் அடைந்து கொண்ட பலன்கள் மிகவும் குறைவாகும். குறிப்பாக ஒரு கட்டிட மற்றும் பாதை அபிவிருத்திகளை மாத்திரம் குறிப்பிட முடியும். அதே வேளை, இவர்கள் அரசாங்கத்தின் பங்காளிகள் என்று இருந்த காலங்களில் முஸ்லிம் சமூகம் தொடர்ச்சியாக தமது உரிமைகளை இழந்து கொண்டு வருகின்றது. முஸ்லிம் சமூகம் இழந்து கொண்டிருக்கின்ற உரிமைகளை பாதுகாத்துக் கொள்வதற்கு முடியாத பலவீனமான நிலையிலேயே முஸ்லிம் கட்சிகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்தின் பங்காளிகள் என்று பரிதாப நிலையில் இருந்து கொண்டிருக்கின்றார்கள். 

    முஸ்லிம் சமூகம் தமகக்கே உரித்தாக மதம் மற்றும் கலாசார ரீதியான பல அடையாளங்களை இழந்து கொண்டு வருகின்றார்கள். முஸ்லிம்கள் தங்களின் பூர்வீகக் காணிகளை இழந்துள்ளார்கள். அதனை மீட்டுக் கொடுப்பதற்கு முடியாத அமைச்சர்களாகவும், பாராளுமன்ற உறுப்பினர்களுமாகவே முஸ்லிம் தரப்பினர் இருந்து கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம்களின் ஹலால் உணவு (சுத்தமான உணவு) விடயத்தில் பௌத்த இனவாதிகளும், இனவாத தேரர்களும் வெற்றி பெற்றுள்ளார்கள். ஆனால், அவர்கள் முஸ்லிம் சமூகத்தின் உரிமையின் மீது கைவைக்கின்றார்கள் என்பதனை அரசாங்கம் உணர்ந்து கொண்ட நிலையிலும் பௌத்த இனவாதிகளின் நோக்கத்திற்கு அரசாங்கம் துணையாக செயற்பட்டது. இதே வேளை, தமது இந்த தனித்துவமான அடையாளத்தை விட்டுக் கொடுத்தால் அதன் பின்னர் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை ஒவ்வொன்றாக இல்லாமல் செய்வார்கள் என்ற முன் யோசனையில்லாது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும், கட்சிகளும், முஸ்லிம் அமைப்புக்கள் பலவும் பேசா மடந்தை போன்று நடப்பது நடக்கெட்டும் என்று இருந்தார்கள். 

    பள்ளிவாசல்களின் மீதும், முஸ்லிம் பிரதேசங்களின் மீதும், முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களின் மீதும் தாக்குதல்களை மேற்கொண்ட பௌத்த இனவாதிகள் அரசாங்கத்தின் பாதகாப்பு போர்வைக்குள் மறைந்து இருக்கின்றார்கள். இத்தகையவர்களை பாதுகாக்கும் பொறுப்பை காலத்திற்கு காலம் ஆட்சியில் இருக்கும் அரசாங்கங்களே மேற்கொண்டு வருகின்றன. இனவாதிகளுக்கு பாதுகாப்பு கொடுக்கும் அரசாங்கத்தில் பங்காளிகள் என்று இருந்து கொண்டிருப்பது வெட்கமான ஒன்றாகும். முஸ்லிம் சமூகத்திற்கு பாதுகாப்புக்கு உத்தரவாதமில்லாத அரசாங்கத்தில் பங்காளிகள் என்று இருக்கும் பரிதாப நிலை முஸ்லிம்களின் அடுத்த சமூகத்திற்கு நீடிப்பதனை அனுமதிக்க முடியாது. 

    முஸ்லிம் பெண்கள் அணியும் நிகாப் மற்றும் பர்தாவை பௌத்த இனவாதிகள் நீண்ட காலமாக தடை செய்ய வேண்டுமென்று குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு ஆட்சியாளர்களினால் முடியாது இருந்தன. ஆயினும், எப்போது சந்தர்ப்பம் வருமென்று எதிர் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அத்தகையதொரு வாய்ப்பை முஸ்லிம் பேர் தாங்கிய ஒரு சிலர் ஏற்படுத்திக் கொடுத்தார்கள். 

    கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதல்களில் சுமார் 250 இற்கும் மேற்பட்ட அப்பாவிகள் உயிர் இழந்தார்கள். இத்தாக்குதல்களின் பின்னர் முஸ்லிம் சமூகத்தின் மீது தமது கோரப்பற்களை பதித்துக் கொள்வதற்கு தருணம் பார்த்துக் கொண்டிருந்த இனவாதிகள் முஸ்லிம் சமூகத்தின் மீது அப்பலியை போட்டு முழு முஸ்லிம் சமூகத்தையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தினார்கள். இதனால், முஸ்லிம் சமூகம் பல சவால்களையும், தாக்குதல்களையும் எதிர் கொள்ள வேண்டி ஏற்பட்டது. பாதுகாப்பு தரப்பினரின் நடவடிக்கைகளினால் குற்றமற்ற முஸ்லிம்கள் பலரும் கைது செய்யப்பட்டார்கள். முஸ்லிம்களின் வீடுகள் யாவும் பயங்கரவாதிகளின் வீடுகளைப் போன்று சோதனையிடப்பட்டன. சிறிய கத்திகளும் பெரிய ஆபத்தை விளைவிக்கக் கூடிய ஆயுதங்களாக கருதப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.

    இத்தற்கொலை தாக்குதல்களின் பின்னர் நாட்டில் அவசரகாலச் சட்டம் அமுலுக்கு கொண்டு வரப்பட்டது. இதன் பின்னர் முஸ்லிம் பெண்கள் அணியும் நிகாப மற்றும் பர்தா எனும் முகத்திரை ஆடைக்கு அரசாங்கம் தடை விதித்தது. இதற்கான வர்த்தமானியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒப்பிட்டார். அவசரகாலச் சட்டத்தின் கீழ் தேசிய பாதுகாப்பை கருத்திற் கொண்டு முஸ்லிம் பெண்கள் முகத்தை முழுமையாக மறைக்கும் ஆடைக்கு தடை விதித்தமை குறிப்பிடத்தக்கது. 

    நாட்டில் ஏற்பட்ட நெருக்கடி சூழலைக் கருத்திற்; கொண்டும், தற்கொலை தாக்குதல்களின் காரணமாக முழு முஸ்லிம் சமூகத்தையும் குற்றவாளிகளாக இனவாதிகள் சித்தரித்துக் கொண்டிருந்த சூழலையும் கருத்திற் கொண்டு முகத்திரை தடையை முஸ்லிம்களும் ஏற்றுக் கொண்;டார்கள். இத்தடை ஒரு தற்காலிக நடவடிக்கை என்றும் தெரிவிக்கப்பட்டன. 

    இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 23ஆம் திகதி முதல் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டுள்ளது. அதே வேளை, நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பொது மக்கள் பாதுகாப்பு சட்டத்தின் 12வது சரத்தின் பிரகாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்குரிய அதிகாரத்தை பயன்படுத்தி இராணுவத்தை பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்கு அங்கிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

    நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதற்காக அவசரகாலச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அந்த சட்டத்தை பய்னபடுத்தியே முஸ்லிம் பெண்கள் அணியும் முகத்திரைக்கும் தடை விதிக்கப்பட்டது. ஆனால், தற்போது நாட்டில் அவசர காலச் சட்டம் நீக்கப்பட்டுள்ளது. என்ற போதிலும் முஸ்லிம் பெண்கள் அணியும் முகத்திரை ஆடைக்கு இன்னும் தடை இருக்கின்றதா அல்லது நீக்கப்பட்டுள்ளதா என்பதில் முஸ்லிம் சமூகம் தெளிவற்ற நிலையிலேயே இருந்து கொண்டிருக்கின்றன. முஸ்லிம்களிடையே காணப்படும் இந்த குழப்பத்தை நீக்குவதற்கு முஸ்லிம் கட்சிகளும், அமைச்சர்களும், தலைவர்களும் நடவடிக்கைகளை எடுக்கவில்லை. அது பற்றிய தெளிவை சமூகத்திற்கு கொடுக்கவில்லை. மேலும், அரசாங்கமோ அல்லது பாதுகாப்பு தரப்பினரோ அது பற்றி பேசவில்லை. 

    அவசர காலச் சட்டத்தின் கீழ் தடை விதிக்கப்பட்ட முகத்திiரைக்கான தடை அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டவுடன் இல்லாமல் போய்விட்டது. அதன்படி முஸ்லிம் பெண்கள் முகத்திரை ஆடையை அணிந்து கொள்ளலாம். ஆனால், முகத்திரைக்குரிய தடை நீக்கப்பட்டுள்ளதென்று வெளிப்படையாக அரசாங்கம் அறிவிக்காது இருப்பது. அதற்காக வர்த்தமானி அறிவிப்பை மேற்கொள்ள முடியாதிருப்பது முஸ்லிம்களிடையே பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளன. அதாவது முகத்திரைக்கான தடையை அரசாங்கம் நிரந்தரமாக்கிக் கொள்ளப் போகின்றதா என்று எண்ண வேண்டியுள்ளது. ஏனெனில், முஸ்லிம்களின் காலசாரம் மற்றும் உரிமைகள் விடயங்களில் அரசாங்கமும், முஸ்லிம் கட்சிகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும் கவனத்திற் கொள்ளாததொரு நிலைப்பாட்டையே பேணி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா சபையானது முஸ்லிம் பெண்கள் அணியும் நிகாப் மற்றும் பர்தா எனும் முகத்திரைக்கு விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவு தொடர்பில் முஸ்லிம் சமூகத்திடம் காணப்படும் சந்தேகங்களை நீக்குவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீமை கேட்டுக் கொண்டது. இதன் பின்னர் அமைச்சர் ஹலீம் பொலிஸ்மா அதிபரிடம் இது பற்றிய தெளிவை கேட்டிருந்தார். அதன் பின்னர் அமைச்சர் ஹலீம் ஊடகங்களுக்கு பின்வருமாறு தெரிவித்திருந்தார். அதாவது, கடந்த 23 ஆம் திகதி முதல் நாட்டில் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டுள்ளது. அத்தோடு நாட்டினதும் மக்களினதும் பாதுகாப்புக்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் அதிகாரம் பாதுகாப்பு தரப்பினருக்கு வழங்கப்பட்டுள்ளது. அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதுடன் அச்சட்டத்தின் கீழ் அமுலிருந்த முஸ்லிம் பெண்கள் அணியும் முகத்திரை ஆடைக்கான தடையும் நீங்கியுள்ளது. 

    எனினும், நமது சூழலில் உள்ள பெரும்பான்மை சகோதரர்களின் மனோபாவமும், அச்சமும் இன்னும் நீங்கவில்லை. இந்நிலையில் முஸ்லிம் பெண்கள்; முகத்திரையை அணிந்து வெளியில் செல்லும் போது அசௌகரியங்களை எதிர் கொள்ள இடமுண்;டு. ஆதலால், முகத்திரையை அணிந்து கொண்டு பொது இடங்களுக்கு செல்வதனை தவிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம். பாதுகாப்பு தரப்பினருக்கும் பூரண ஒத்துழைப்பை வழங்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம். உலமாக்களின் வழி காட்டல்களின் படி பாதுகாப்பு தரப்பினருக்கு ஒத்தழைப்பு வழங்கி எமது உரிமைகைள எதிர் காலத்தில் உறுதி செய்ய முன்வருமாறும் வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    அமைச்சர் ஹலீமின் கருத்துக்களை முஸ்pலம் கவனத்திற் கொள்ள வேண்டும் என்பது நல்லதுதான். ஆனால், விசேட வர்த்தமானி மூலமாக தடை செய்யப்பட்டதனை மற்றும் ஒரு விசேட வர்த்தமானி மூலமாக தடை செய்யாதிருப்பது ஏன் என்ற கேள்வி முக்கியம் பெறுகின்றது. தடை நீக்கப்பட்டதன் பின்னர் முஸ்லிம் பெண்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பங்கம் ஏற்படாத வகையில் நடந்து கொள்ள வேண்டுமென்பது முக்கியமாகும். அதற்காக தமது தனித்துவத்தை பயத்தினால் விட்டுக் கொடுக்க முடியுமா என்பது பற்றியும் சிந்திக்க வேண்டியுள்ளது. ஆதலால், முஸ்லிம் பெண்கள் முகத்திரையை அணிந்து கொண்டு போனால் அவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம். பெரும்பான்மையினரில் சிலர் வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாமென்று தெரிவித்துக் கொண்டிருப்பதான் மூலமாக முஸ்லிம் பெண்களின் கலாசார உரிமை மறுக்கப்படுகின்றது. அத்தோடு. பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்பது அரசாங்கத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் குறைபாட்டைக் காட்டுகின்றது. அதற்காக இவற்றை எல்லாம் கவனத்திற் கொள்ள வேண்டியதில்லை. முகத்திரையை முஸ்லிம் பெண்கள் அணிய வேண்டுமென்று சொல்லவில்லை. ஆனால், தடை நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட வேண்டும். அதன் பின்னர் முஸ்லிம் பெண்கள் நாட்டில் பெரும்பான்மை மக்களில் சிலருக்கு இருக்கின்ற சந்தேகங்கள் நீங்கியதன் பின்னர் முகத்திரையை அணிவது என்பது வேறு. ஆனால், விதிக்கப்பட்ட தடையை நீக்காது போனால் அது நிரந்தரமாகிவிடும் என்பது முக்கியமானதாகும். 

    சில விட்டுக் கொடுப்புக்கள் எதிர் காலத்தில் ஆபத்தை ஏற்படுத்திவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.  ஆதலால், முஸ்லிம் பெண்கள் அணியும் முகத்திரைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவதற்குரிய நடவடிக்கையை முறையாக எடுக்க வேண்டும். அதே வேளை, முஸ்லிம் பெண்கள் நாட்டின் நிலைமையை கருத்திற் கொண்டு செயற்பட வேண்;டும். இதே வேளை, முஸ்லிம் பெண்களில் மிகக் குறைந்தவர்களே முகத்தை மறைக்கும் ஆடையை அணிந்து கொள்கின்றார்கள் என்பது குறிப்பிடதக்கது. முஸ்லிம் பெண்களில் ஒரு சிறு தொகையினரே முகத்தை மறைக்கும் நிகாப் போன்ற ஆடைகளை அணிவதனால் அவர்கள் நாட்டின் நிலைமை முழுமையாக சீர்யடையும் வரைக்கும் முடிந்தவரை முகத்தை மறைக்காது ஆடை அணிந்து கொள்வது நல்லது. ஆயினும், இதனைக் கூட நீண்ட காலத்திற்கு அனுமதிக்க  முடியாது. முஸ்லிம் பெண்கள் தங்களின் கலாசாரத்தை முழுமையாக பேணி ஆடை அணியவும், நடந்து கொள்ளக் கூடியதுமான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுப்பது அரசாங்கத்தின் கடமையாகும். அதே வேளை, முஸ்லிம் கட்சிகளும், தலைவர்களும், அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும், முஸ்லிம் அமைப்புக்களும் இது விடயத்தில் அக்கறையுடன் செயற்பட வேண்டும்.
    வீரகேசாி 08.9.2019

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பங்காளிகளின் பரிதாபங்கள் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top