• Latest News

    March 31, 2020

    இலங்கை ஜனநாயகம் நெருக்கடியை எதிர்நோக்கி வருகிறது : தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல்

    நாடு பாரதூரமான அனர்த்தத்தை எதிர்நோக்கி வரும் சந்தர்ப்பத்தில் கலைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டி இடர் முகாமைத்துவ சேவைகளை முன்னெடுக்குமாறு எதிர்க்கட்சிகள் மாத்திரமல்லாது கல்விமான்கள், ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள் உட்பட பலர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கொரோனா வைரஸ் தொற்று நோயுடன் இலங்கை ஜனநாயகம் நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாக ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ள தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் தெரிவித்துள்ளார்.

    குறிப்பாக கொரோனா வைரஸ் தொற்று பரவப் போகின்றது என்ற நிலைமையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடாளுமன்றத்தை கலைத்தது தொடர்பில் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ள பேராசிரியர், தற்போது காணப்படும் நிலைமையில் சர்வாதிகாரம் ஏற்படாமல் தடுக்க நாடாளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானியை உடனடியாக இரத்துச் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    அதேவேளை டுவிட்டரில் பதிவு ஒன்றை இட்டுள்ள பேராசிரியர் மொஹான் சமரஜீவ, நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை கூட்டுமாறு தான் மட்டுமல்லாது முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவும் கோரிக்கை விடுத்திருந்தாக குறிப்பிட்டுள்ளார்.

    முன்னாள் சபாநாயகரின் கோரிக்கை அமைய பிரதமர் மகிந்த ராஜபக்ச அண்மையில் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை கூட்டியிருந்தார்.

    இதனிடையே சமூக வலைத்தளம் ஊடாக விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கொரோனா தொற்று நோய் சம்பந்தமான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் இணைப்புக்குழு தொடர்பாக திருப்தியடைய முடியாது எனக் கூறியுள்ளார்.

    குறிப்பாக பிரித்தானிய பிரதமர் தினமும் ஊடகங்களை சந்தித்து கொரோனா ஒழிப்பு திட்டத்திற்கு தலைமைத்துவத்தை வழங்கி வருகிறார்.

    அமெரிக்காவில் இதற்கு அந்நாட்டின் உப ஜனாதிபதி தலைமை தாங்கி வருகிறார். அத்துடன் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதிக்கு பின்னர் பொது பணத்தை பயன்படுத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

    பொது பணத்தை செலவிட நாடாளுமன்றத்தின் அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

    இவ்வாறான நிலைமையில், அரசியலமைப்புச் சட்டத்தின் 70-7 ஷரத்திற்கு அமைய கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை அவசரமாக சந்தர்ப்பங்களில் மீண்டும் கூட்ட ஜனாதிபதிக்கு அதிகாரம் இருப்பதாக சிரேஷ்ட ஊடகவியலாளர் சுனில் ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இலங்கை ஜனநாயகம் நெருக்கடியை எதிர்நோக்கி வருகிறது : தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top