• Latest News

    March 26, 2020

    அரசியல் கில்லாடிகளுக்கு பிரதேச செயலகங்கள் பலிக்கிடாவாக்கப்படக் கூடாது!

    நிந்தவூர் பிரதேச செயலாளரின் கவனத்திற்கு!
    அரசியல் கில்லாடிகளுக்கு பிரதேச செயலகங்கள் பலிக்கிடாவாக்கப்படக் கூடாது!

    -சுதந்திர ஊடக கண்காணிப்பு மையத்தின் கிழக்கு மாகாண ஊடகச் செயலாளர் றபீக் கோரிக்கை-

    நேற்று (25.03.2020) காலை 10.30 மணியிலிருந்து நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் வைத்திய அதிகாரி சிங்கப்பெண் திருமதி.தஸ்லீமா பஸீர் தலைமையில் 'கொரோனா தடுப்பு முன்னேற்பாடுகள்' தொடர்பான கலந்துரையாடலில் செய்தி சேகரித்துக் கொண்டிருந்தேன்.

    சரியாக காலை 11.51 மணிக்கு எனது கையடக்கத் தொலை பேசி அலறியது. இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன செய்திப் பிரிவிலிருந்து சகோதரர்களான மென்டீஸ், சியாம் ஆகியோரின் குரல்கள். 'றபீக்...எங்கிருக்கிறீர்கள்? அம்பாரை அரசாங்க அதிபர் இப்போது நிந்தவூரில் இருக்கிறாராம். உடனடியாக அவரது செய்தியை, குரல் பதிவை எடுத்து அனுப்பி வையுங்கள்' என்றனர். இந்த நேரத்தில் நிந்தவூர் பிரதேச செயலாளர் அஸ்சேஷ்.ரி.எம்.எம்.அன்சார் உரையாற்றிக் கொண்டிருந்தார். அவர் உரையாற்றி முடிந்தவுடன் அவரை நேருங்கி 'சேர் இன்றைக்கு நமதூரிற்கு அரசாங்க அதிபர் வருகிறாரா? ' எனக் கேட்டேன்.

    'ஆம். அவர் அவசரமாக வந்து, தெஹியத்தகண்டிக்குப் போய் விட்டார்'. 'அவர் ஏன் நிந்தவூருக்கு வந்தார்? அவரது குரல்பதிவையும், செய்தியையும் உடன் எடுத்து அனுப்புமாறு ரூபவாஹினியில் இருந்து கேட்கிறார்கள்' என்றேன். 'நிந்தவூர் நலன்புரிச் சபையினரின் நிவாரணப் பொதிகளை வழங்க வந்திருந்தார். பெரிதாய் ஒன்றும் பேசவில்லை. அவசரமாகப் போய் விட்டார்' என்று பிரதேச செயலாளர் பதிலளித்தார்.

    'அப்படியென்றால் ஏன் அரசாங்க ஊடகங்களில் பணியாற்றும் என்னைப் போன்றவர்களுக்கு அழைப்புத் தரவில்லை?!' எனக் கேட்டேன். பிரதேச செயலாளருக்குப் பதில்தருவதில் சங்கடமிருப்பதை உணர்ந்தேன். 'நிந்தவூர் நலன்புரிச் சபை' ஒரு தனியான அமைப்பு. அதன் செயற்பாடுகளுக்கு அவர்களே அழைத்திருக்க வேண்டும். ஆனால் அண்மைக் காலங்களாக அவர்களின் செயற்பாடுகள் கூட ஒரு அரசியல்வாதியின் கரத்தைப் பலப்படுத்த உருவாக்கப்பட்டது போல் தெரிகிறது.

    எதிர்காலங்களில் அவைகளைப் பற்றி அலசலாம் என நினைக்கிறேன்.
    மண்ணின் மைந்தன் சகோதரர் பைசால் காசீம் பிரதி அமைச்சராகவும், இராஜாங்க அமைச்சராகவும் இருந்தபோது நிந்தவூர் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற எத்தனையோ அரசாங்க நிகழ்வுகளுக்குக் கூட நிந்தவூர்ப் பிரதேசத்திலுள்ள செய்தியாளர்கள் யாரும் அழைக்கப்படுவதில்லை. இவ்விடயம் ஏலவே தினகரன் பத்திரிகையிலும், முகநூல்களிலும் வெளிவந்துள்ளன). அவரது செய்திகளைச் சேகரிப்பதற்கென்று ஆரம்பகாலத்தில் அக்கரைப்பற்று றமீஸ், பிற்காலத்தில் சம்மாந்துறை றியாஸ், இடைநடுவில் அட்டாளைச்சேனை அறூஸ், றியாஸ், இறக்காமம் நிசார், ஏறாவூர் கபீர், இறுதியில் சொறிக்கல்முனை ஜபீர், இல்லையேல் கொழும்பிலுள்ள சில சிங்கிளவர்கள்! இது நாங்கள் வோட்டுப் போட்டு, ஊருக்குக் கிடைத்த எம்பியின்; சாதனை!

    எங்கள் எம்பி தங்கக் கம்பியின் சாதனைகளை ஒரு அரசாங்க உயரதிகாரியான நீங்கள் ஏன் பின்பற்ற வேண்டும்? நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்த ஓர் நேர்மையான அதிகாரி. அரசியல் சாக்கடைகளுக்கும், அவர் வால்பிடிப்போருக்கும் நீங்கள் சார்ந்து செல்லவேண்டியதில்லை! நிந்தவூர் பிரதேச செயலகத்தில் காணப்படும் இக்குறைபாடுகள் இனிவருங் காலங்களில் தவிர்க்கப்பட வேண்டும். இது போன்ற திட்டமிட்ட செயற்பாடுகளில் ஈடுபடுவோர்கண்டறியப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும் என நிந்தவூர் பிரதேச ஊடகவியலாளர்கள் சார்பாக உங்களை அன்பாக வேண்டுகிறேன்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அரசியல் கில்லாடிகளுக்கு பிரதேச செயலகங்கள் பலிக்கிடாவாக்கப்படக் கூடாது! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top