இந்தியாவில், ஊரடங்கு காரணமாக வேறு மாநிலத்தில் சிக்கிக்கொண்ட மகனை, 1400
கிலோமீற்றர் தூரம் ஸ்கூட்டரில் பயணம் செய்து அழைத்து வந்த தாய்க்கு
பாராட்டு குவிந்து வருகிறது.
இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தின் போதா நகரைச்
சேர்ந்தவர் ரஸியா பேகம் (48). அரசுப் பள்ளி தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து
வருகிறார். 15 ஆண்டுகளுக்கு முன்னர் கணவரை இழந்த ரஸியா, தனது இரு
மகன்களுடன் வசித்து வருகிறார்.
இவரது மூத்த மகன் இன்ஜினீயரிங் பட்டதாரி, இரண்டாவது மகன் நிஜாமுதீன்
(19), மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வுக்குத் தயாராகி வருகிறார்.
இந்நிலையில், நிஜாமுதீன் கடந்த மாதம் 12 ஆம் திகதி அண்டை மாநிலமான
ஆந்திராவின் நெல்லூர் அருகே உள்ள ரஹ்மதாபாத் என்னும் ஊரில் உள்ள நண்பன்
வீட்டிற்குச் சென்றார்.
இதனிடையே, கடந்த 24ஆம் திகதி நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு
அமல்படுத்தப்பட்டதால் நிஜாமுதீன் நெல்லூரில் சிக்கிக்கொண்டார். இடையிடையே
அவர் சொந்த ஊர் திரும்ப எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன.
இதனால் ரஸியா பேகம், மூத்த மகனை அனுப்பி நிஜாமுதீனை அழைத்து வரலாம் என
முடிவு செய்தார். எனினும், ஊரடங்கை மீறுபவர்கள் மீது காவல்துறை எடுக்கும்
நடவடிக்கைக்கு பயந்து, தானே சென்று வர முடிவெடுத்தார்.
இதையடுத்து ரஸியா பேகம், காவல்துறை துணை ஆணையரிடம் சென்று தனது மகனின்
நிலையை எடுத்துச்சொல்லி அனுமதி கடிதம் பெற்று, கடந்த 6 ஆம் திகதி காலை தனது
ஸ்கூட்டியில் பயணத்தை தொடங்கினார்.
அன்று பகலும் இரவும் தொடர்ச்சியாக பயணம் செய்த அவர், மறுநாள் (7 ஆம்
திகதி) மகன் இருக்கும் நெல்லூரை அடைந்தார். அங்கு சிறிதும் ஓய்வெடுக்காமல்
உடனடியாக மகனை அழைத்துக் கொண்டு புறப்பட்ட அவர், 8 ஆம் திகதி மாலை வீடு
வந்து சேர்ந்தார்.
ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில், தனது மகனுக்காக மூன்று நாளில்
கிட்டத்தட்ட 1,400 கிலோ மீற்றர் தூரம் ஸ்கூட்டியில் பயணம் செய்த ரஸியா
பேகத்தின் மன தைரியத்தை, மாநிலம் முழுவதும் உள்ள மக்கள் பாராட்டி
வருகின்றனர்.
0 comments:
Post a Comment