• Latest News

    January 09, 2021

    யாழ். பல்கலைக்கழக உபவேந்தரின் தீர்மானத்துக்கு அமையவே நினைவுத்தூபி அகற்றப்பட்டது - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க

    பல்கலைக்கழக உபவேந்தரின் தீர்மானத்துக்கு அமையவே யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபி அகற்றப்பட்டதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

    நினைவுத்தூபி அகற்றப்பட்டமை தொடர்பில் கொழும்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

    பல்கலைக்கழக ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவிக்கையில்,

    2018 ஆம் ஆண்டுகாலப் பகுதிகளில் நினைவுத் தூபி அமைப்பதற்கு பல்வேறு தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்தத் தூபியில் காலத்துக்குக் காலம் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வந்ததாக அறிகிறோம்.

    உண்மையில் சொல்வதானால், இந்தத் தூபியானது வடக்கு - தெற்கு நல்லிணக்கத்துக்கு தடையாக இருக்கக் கூடும்.

    யாழ்ப்பாண பல்கலைக்கழக உபவேந்தர் ஸ்ரீ சற்குணராஜா, இலங்கையில் உள்ள மிகச் சிறந்த நிபுணத்துவமிக்கவர்களில் ஒருவராவார், அதேபோல் மிகத் திறமைவாய்ந்த நிர்வாகி என்பதுடன் அண்மைக்காலத்தில் நான் பார்த்தவர்களில் மிகச் நிறந்த உபவேந்தராகவும் திகழ்கிறார்.

    அந்த நினைவுத்தூபி நிகழ்காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் பொருத்தமற்றது என்பதால் அதனை அகற்றுவதற்கு அவர் தீர்மானித்தார்.

    இன்று யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் பிள்ளைகள், யுத்தம் நிறைவடையும் காலப்பகுயில் தரம் 9,10,11 இல் பாடசாலைகளில் கல்வி பயின்றவர்களாவர். சிங்களம், தமிழ், முஸ்லிம் என எந்த இனத்தைச் சேர்ந்தவர்களாயினும் அவர்கள் எமது நாட்டின் பிள்ளைகள். இப்போது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்கள் ஆயிரத்து 500 பேர் கல்வி நடவடிக்கைகளை தொடருகின்றனர் என்பதை மகிழ்ச்சியுடன் பதிவு செய்ய விரும்புகிறேன்.

    அதேபோல் தெற்கு பல்கலைக்கழகங்களில் சுமார் 500-600 பேர் வரையில், விசேடமாக வடக்கு-கிழக்கு பகுதியைச் சேர்ந்த தமிழ் மாணவர்கள் கல்வி பயில்கின்றார்கள்.

    இந்த மாணவர்களுக்கு கடந்த காலத்தில்நடந்தது போன்ற கசப்பான அனுபவங்கள் கிடைக்கக் கூடாது என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

    இதுவரை காலமும் அவர்கள் பேதங்கள் எதுவுமின்றி கல்வி பயின்று வருகிறார்கள், ஆதலால், இவ்வாறான காரணங்களைக் கருத்திற்கொண்டு யாழ். பல்கலைக்கழக உபவேந்தரின் தீர்மானத்துக்கு அமைவாக பல்கலைக்கழகத்தின் நினைவுத்தூபி நேற்றிரவு அகற்றப்பட்டது.

    நமக்கு யுத்த மார்க்கம் இப்போது அவசியப்படாது, சமாதான மார்க்கமே அவசியப்படுகிறது. ஆதலால் அதற்கேற்ற வகையில் செயற்பட வேண்டியது அவசியமாகும் எனத் தெரிவித்துள்ளார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: யாழ். பல்கலைக்கழக உபவேந்தரின் தீர்மானத்துக்கு அமையவே நினைவுத்தூபி அகற்றப்பட்டது - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top