மக்களின் நலன்களுக்கெதிராக அரசியல் தலைவர்கள் ஈடுபடுகின்ற போது அதற்கு எதிராக மக்கள் கொதித்தெழுவதும், பின்பு மக்களின் கவனத்தினை தலைவர்கள் திசைதிருப்புவதற்காக வேறு புதிய நடவடிக்கைகளில் ஈடுபடுவதும், அதனால் பழைய விடயங்களை மக்கள் மறந்துவிடுவதும் வழமையாகும்.
இந்த விவகாரம் தொடர்ந்து தலைப்புச் செய்தியாகவே பார்க்கப்படுகின்றது. இந்த விமர்சனமானது கடந்த காலங்களைப் போன்று மக்களை இலகுவில் ஏமாற்ற முடியாது. அதாவது மக்கள் விழிப்பாக இருக்கின்றார்கள் என்பதனை காட்டுகின்றது.
இருபதுக்கு ஆதரவாக வாக்களித்த பாராளுமன்ற உறுப்பினர்களை கண்டித்து கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், அவர்களின் இந்த நடவடிக்கைக்கு பின்னணியில் தலைவரும் உடந்தையாக இருந்திருக்கின்றார் என்ற குற்றச்சாட்டுக்கள் பரவலாக முன்வைக்கப்பட்டு வருகின்றது.
அதாவது கடந்த பொது தேர்தலுக்கு பின்பு தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்கள் மிலிந்த மொறகொடவின் இல்லத்தில் பசில் ராஜபக்சவை சந்தித்ததாகவும், பின்பு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவை சந்தித்ததாகவும், இருபதாவது திருத்தத்துக்கான வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு சில தினங்களுக்கு முன்பு மீண்டும் பசில் ராஜபக்சவை தலைவர் சந்தித்ததாகவும் அதில் எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் இருபதுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்பதனை உறுதிப்படுத்தியதாகவும் கூறப்படுகின்றது.
இந்த சந்திப்புக்கள் அனைத்தும் மிகவும் இரகசியமாக நடைபெற்றதாகவே அறியக்கிடைக்கின்றது.
முஸ்லிம் காங்கிரசின் உச்சபீடத்தில் உள்ள சில நண்பர்களும் மேலே கூறப்பட்ட அதே குற்றச்சாட்டுக்களை என்னிடம் தொலைபேசி மூலமாக ஆணையிட்டு கூறினார்கள்.
இங்கே விடயம் என்னவென்றால், கட்சியின் அதியுயர்பீடம் மூலமாக தீர்மானம் மேற்கொண்டு இவ்வாறு வாக்களிப்பதனை முன்கூட்டியே தடுப்பதற்கு நடவடிக்கையினை தலைவர் ஏன் எடுக்கவில்லை என்ற கேள்விதான் தலைவர் மீதான சந்தேகம் வலுவடைவதற்கு காரணமாகும். .
இவ்வாறு தலைவர் ரவுப் ஹக்கீம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிலிருந்து அவர் விடுபட வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பமாகும்.
அதற்காக ஊடக மாநாடொன்றினை நடாத்தி அதில் “அல்லாஹ்மீது ஆணையிட்டு” இருபதாவது திருத்தத்திற்கு ஆதரவாக முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் வாக்களித்ததற்கும் எனக்கும் எந்தவித பின்னணி தொடர்பும் இல்லையென்று உறுதியாகவும், அழுத்தம் திருத்தமாகவும் ஆணையிட்டால் தலைவர் மீது எழுந்துள்ள அனைத்து சந்தேகத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
அதன்பின்பு நாங்கள் தலைவருக்கு எதிராக மேற்கொண்ட விமர்சனங்கள் அனைத்திற்கும் தலைவரிடம் மன்னிப்பு கோருவதுடன், இனிமேல் இந்த விடயத்தில் தலைவருக்கு எதிராக எந்தவித விமர்சனமும் செய்யாது ஒதுங்கிக்கொள்ளவும் தயாராக உள்ளோம்.
எனவே தலைவர் அல்லாஹ்வின்மீது ஆணையிட்டு கூறுவாரா ?
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
0 comments:
Post a Comment