• Latest News

    July 12, 2021

    இலங்கையில் விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை அதிருப்தி


    ஒன்று கூடுவதற்கான உரிமை என்பது அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமையையும் உள்ளடக்கியிருப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி, கொரோனா வைரஸ் பரவலைக் கருத்திற்கொண்டு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள், உண்மையில் சுகாதாரப்பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்டுச் செல்லாமலிருப்பது அவசியமாகும் என்றும் வலியுறுத்தியிருக்கின்றார்.

    கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்கள் அதிகளவில் ஒன்றுகூடும் ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள், பேரணிகள் தடைசெய்யப்பட வேண்டும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்திற்கு அமைவாக, மேற்படி செயற்பாடுகள் மறு அறிவித்தல்வரை தடைசெய்யப்படுவதாகக் கடந்த செவ்வாய்கிழமை பொலிஸ் தலைமையகத்தினால் அறிவிக்கப்பட்டது.

    அதனைத்தொடர்ந்து கடந்த புதன்கிழமையிலிருந்து பலதரப்பட்ட கோரிக்கைகள் மற்றும் உரிமைகளுக்காகப் போராடுவோரைக் கைதுசெய்யும் நடவடிக்கைகள் பொலிஸாரால் தீவிரப்படுத்தப்பட்டன.

    குறிப்பாக ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டமூலத்திற்கு எதிராகக் கடந்த வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தலைவர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட பலரை பொலிஸார் தூக்கிச்சென்று பொலிஸ் வண்டிகளில் ஏற்றும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டதுடன் இச்சம்பவம் பல்வேறு சர்ச்சைகளையும் தோற்றுவித்திருந்தது. ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுதல் தடைசெய்யப்பட்டுள்ளமையானது.

    பொதுமக்களின் கருத்துச்சுதந்திரத்தையும் அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளை விமர்சிக்கும் சுதந்திரத்தையும் பறிப்பதாக அமையும் என்று பல்வேறு தரப்பினராலும் கண்டனம் வெளியிடப்பட்டுவந்த நிலையில், இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

    ஒன்றுகூடுவதற்கான உரிமை என்பது அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமையையும் உள்ளடக்கியதாகும். அது ஏனைய உரிமைகளான கருத்துச்சுதந்திரம் மற்றும் பொதுநிர்வாகக் கொள்கைகளின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கான சுதந்திரம் ஆகியவற்றை உரியவற்றுக்கு பிரயோகிப்பதற்கு உதவுகின்றது என்று ஹனா சிங்கர் அவரது டுவிட்டர் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இலங்கையில் விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை அதிருப்தி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top