ஸ்ரீலங்கா அரசாங்கம், நாட்டு மக்களின் கொரோனா பரிசோதனையை செய்து கொள்வதற்கான உரிமையை பறித்துவிட்டதாக அரச ஆய்வுகூட அதிகாரிகளின் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
கொரோனா தொற்றினால் தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்படுகின்ற நிலையில், அரச மருத்துவமனைகளில் பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்படும் இயந்திரங்கள் இன்று வெறுமனே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
ஸ்ரீலங்காவின் அரச ஆய்வுகூட அதிகாரிகள் சங்கத்தின் தலைவரான ரவி குமுதேஷ் கலந்துகொண்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் இன்று நடைபெற்றது. இதன்போது உரையாற்றிய அவர், கொரோனா தொற்று இடையே மக்களின் பைகளில் எஞ்சியுள்ள பணத்தையும் காவிக்கொள்வதற்கு அரசாங்கம் முயற்சித்துள்ளதாக சாடினார்.
ஸ்ரீலங்காவில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதன் பின்னர் துரித அன்டிஜன் அல்லது பி.சி.ஆர் பரிசோதனைகளை நடத்துவது பற்றிய குழப்ப நிலையும் அதனுடன் ஏற்படுகின்றது. நாளொன்றுக்கு 200 அல்லது 500 பரிசோதனைகள் மட்டுமே ஆய்வுகூடங்களில் செய்யப்படுகின்றன.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 100 பரிசோதனைகளும் செய்யப்படுவதில்லை. தியத்தலாவ வைத்தியசாலை, அம்பாந்தோட்டை, தம்புள்ளை, வத்துப்பிட்டிவல உள்ளிட்ட வைத்தியசாலைகளுக்கு பி.சி.ஆர் இயந்திரங்கள் வழங்கப்பட்டாலும் அங்கு குறைந்தது 100 பரிசோதனைகள்கூட நடத்தப்படவில்லை.
மாறாக தனியார் மருத்துவப் பிரிவுகளுக்கே ஸ்ரீலங்கா அரசாங்கம் வாய்ப்பளிக்கின்றது. அதனூடாகவும் மக்களின் பைகளிலேயே அரசாங்கம் கைவைக்கின்றது. தனியார் பிரிவுகளில் சென்று முதலாவது பி.சி.ஆர் பரிசோதனையை செய்ய அனுமதிக்கப்படுவதில்லை.
முதலில் துரித அன்டிஜன் பரிசோதனையை செய்து இரண்டாவதாக பி.சி.ஆர் பரிசோதனையும் நடத்தப்படுகின்றது. இது அநீதியாகும். வருமானம் குறைந்த மற்றும் நடுத்தர மக்கள் பி.சி.ஆர் பரிசோதனையை செய்வதற்கான உரிமையை ஸ்ரீலங்கா அரசாங்கம் பறித்து வருகின்றது.
0 comments:
Post a Comment