இலங்கை அரசாங்கம் தனது கொடூரமான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தொடர்ந்து பயன்படுத்துவது தொடர்பில், சர்வதேச மன்னிப்புச்சபை தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்து செய்வதாக பலமுறை இலங்கை உறுதியளித்த போதிலும் அதனை நிறைவேற்றவில்லை என்பதையும் மன்னிப்புசபை குறைகூறியுள்ளது.உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் மொஹமட் அஸ்ஃபர் மொஹமட் அனஸ், மொஹமட் ஜுசைர் அப்துல் ஹமீட் ஜாபிர், மொஹமட் அஸீஸ் அபுபக்கர் சித்திக் மற்றும் ராவுத்தர் நைனா அஸ்னார் மரிக்கார் ஆகிய 4 பேர் 2023 மே 18 அன்று குற்றவியல் சட்டம் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இலங்கை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளமையை சுட்டிக்காட்டியே மன்னிப்பு சபை இந்த அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
அத்துடன் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பில் மேலும் நான்கு பேர் கைது செய்யப்படுவார்கள் என்று பொலிஸார் கொழும்பு நீதிவானிடம் தெரிவித்துள்ளதாகவும் மன்னிப்பு சபை சுட்டிக்காட்டியுள்ளது.
அந்த வகையில் தன்னிச்சையான கைதுகளையும், விசாரணையின்றி நீண்ட காலமாக காவலில் வைக்க உதவும் வகையில் பயங்கரவாத தடைச் சட்டம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அத்துடன் சிறுபான்மையினரை குறிவைக்க இந்த சட்டம் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படுகிறது என்றும் மன்னிப்புசபை குறிப்பிட்டுள்ளது.

0 comments:
Post a Comment