
அரசியலமைப்பின் பிரகாரம் 14 நாட்களுக்கு பதில் பொலிஸ்மா அதிபரை ஜனாதிபதியால் நியமிக்க முடியும். அத்துடன் தேர்தல் காலத்தில் பொலிஸாருக்கு தேர்தல்கள் ஆணைக் குழுவால் கட்டளை விடுக்க முடியும் என சுதந்திர மக்கள் சபையில் பிரதிநிதியும், பாராளுமன்ற உறுப்பினரான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
அரசியலமைப்பு பேரவையின் செயற்பாடுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பாராளுமன்றத்தில் செயற்படும் ஏனைய குழுக்களைப் போன்று பாராளுமன்ற பேரவை செயற்படுவதில்லை. ஆகவே அரசியலமைப்பு பேரவையின் செயற்பாடுகளில் நீதிமன்றம் தலையிட முடியும்.
அரசியலமைப்பு பேரவை நிறைவேற்றுத்துறையின் ஒரு பகுதி என்று ஜனாதிபதி குறிப்பிடுகிறார். மறுபுறம் பேரவை சட்டவாக்கத்தின் ஒரு பகுதி என்று பிரதமர் குறிப்பிடுகிறார்.ஆகவே அரசியலமைப்பு பேரவை குறித்து அரசாங்கம் இரட்டை நிலைப்பாட்டை கொண்டுள்ளது.
பொலிஸ்மா அதிபர் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை ஜனாதிபதி மற்றும் பிரதமர் விமர்சிப்பது தவறானதொரு எடுத்துக்காட்டாகும். நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய ஜனாதிபதியால் செயற்பட முடியும்.
தான் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதால் பதில் பொலிஸ்மா அதிபரை நியமிக்க முடியாது என்று ஜனாதிபதி குறிப்பிடுகிறார். அவ்வாறாயின் அவர் ஜனாதிபதி பதவிக்கான எந்த பணிகளையும் முன்னெடுக்க முடியாது. அரசியலமைப்புக்கு அமைய 14 நாட்களை வரையறுத்து பதில் பொலிஸ்மா அதிபரை ஜனாதிபதியால் நியமிக்க முடியும்.
தேர்தல் கடமைகளுக்கு பொலிஸாருக்கு கட்டளை பிறப்பிக்க பொலிஸ்மா அதிபர் அவசியம் என்று ஜனாதிபதி குறிப்பிடுகிறார். அரசியலமைப்பின் 104 மற்றும் 109 பிரிவுகளின் ஏற்பாடுகளுக்கு அமைய தேர்தல் பணிகளுக்கு கட்டளை பிறப்பிக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உண்டு.ஆகவே பொலிஸ்மா அதிபருக்கு உயர்நீதிமன்றம் விதித்துள்ள இடைக்காலத் தடை தேர்தல் பணிகளுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றார்.
0 comments:
Post a Comment