எம்.எஸ்.தீன் - பாராளுமன்றத் தேர்தல் எதிர்வரும் நம்பர் 14ஆம் திகதி நிடைபெறவுள்ளது. இத்தேர்தலில் முஸ்லிம்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்படுமா என்ற கேள்வி எழுப்படுகின்றது. கடந்த பாராளுமன்றங்களில் 20 முதல் 22 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்துள்ளார்கள். ஆனால், இம்முறை அத்தொகை பாராளுமன்ற உறுப்பினர்களை முஸ்லிம்களினால் பெற்றுக் கொள்ள முடியுமா என்ற சந்தேகம் பலமாக இருக்கின்றது.
குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும், புத்தளம், கொழும்பு, கண்டி, குருநாகல், களுத்துறை, கேகாலை மாவட்டங்களில் முஸ்லிம்களினால் பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன.
என்ற போதிலும் இம்முறை நாட்டில் அநுர அலை வீசிக் கொண்டிருக்கின்றது. முஸ்லிம்களும் இந்த அலையில் சிக்குண்டுள்ளார்கள். முஸ்லிம் கட்சிகளின் நடவடிக்கைகள், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் சந்தர்ப்பவாத அரசியல், சமூகப்பற்றில்லாத அரசாங்க விசுவாசம், 20வது திருத்தச் சட்ட மூலத்திற்கு ஆதரவு வழங்கி கோத்தாவிற்கு உச்ச அதிகாரங்களை வழங்க துணை நின்றமை, கொவிட் தொற்றினால் மரணித்த முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டமை, முழுமையாக கொந்தராத்து அரசியலை செய்து சமூக அரசியலை புறக்கணித்தமை எனப் பல காரணங்களினால் முஸ்லிம்களில் பெரும் தொகையினர் முஸ்லிம் கட்சிகளின் மீதும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் மீதும் என்றுமில்லாதவாறு எதிர்ப்புணர்வைக் கொண்டுள்ளனர்.
இத்தகையவர்களுக்கு வாக்களிக்கப் போவதில்லை என்று சமூக ஊடகங்களில் பரவலாக கருத்துக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றனர்.
குரங்கு அப்பத்தை பங்குபோட்ட கதை
இதனிடையே இம்முறை தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பாதுகாத்துக் கொள்ள முடியுமா என்று முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. முஸ்லிம் கட்சிகளின் மீதும், பாராளுமன்ற உறுப்பினர்களின் மீதும் கொண்டுள்ள வெறுப்பு குரங்கு அப்பத்தை பங்குபோட்ட கதையாக மாறிவிடக் கூடாது. முஸ்லிம்கள் எந்தக் கட்சியிலாவது தமது பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் வாக்களிக்க வேண்டும்.
கிழக்கு முஸ்லிம்களின் அதிகபட்ச செல்வாக்கைப் பெற்றுள்ள கட்சியாகவுள்ள முஸ்லிம் காங்கிரஸிற்குள் வேட்பாளர் தெரிவில் பலத்த குழப்பங்கள் ஏற்பட்ட நிலையில்தான் வேட்பாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளனர். ஆயினும் வேட்பாளர் தெரிவில் ஏற்பட்ட புகைச்சல் தேர்தல் மேடைகளிலும் புகையும் என்றே தெரிகின்றது.
முஸ்லிம் காங்கிரஸ் இம்முறை அம்பாரை மாவட்டத்தில் தனித்துப் போட்டியிடும் நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்திலும் அக்கட்சி தனித்துப் போட்டியிடுகின்றது. திருகோணமலையில் முஸ்லிம் காங்கிரஸும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து டெலிபோன் சின்னத்தில் போட்டியிடுகின்றன. முஸ்லிம் காங்கிரஸ் ஏனைய மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிடுகின்றது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாரை மாவட்டத்திலும், புத்தளம் மாவட்டத்திலும் தனித்துப் போட்டியிடுகின்றது. ஏனைய இடங்களில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிடுகின்றன.
அம்பாரை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுகின்ற அதே வேளையில் புதிய ஜனநாயக முன்னணியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினாகளான ஏ.எல்.எம்.அதாவுல்லா, எஸ்.எம்.எம்.முஸரப் உள்ளிட்டவர்கள் போட்டியிடுகின்றனர். அத்தோடு ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளும் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.
முஸ்லிம்களின் வாக்குகள் சிதறிக்கப்படும்
இவ்வாறு பல கட்சிகளும் முஸ்லிம் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளமையால் அம்பாரை மாவட்ட முஸ்லிம்களின் வாக்குகள் சிதறிக்கப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர் பிரதிநிதித்துவம் குறைவதற்கு வாய்ப்புள்ளது. சில வேளைகளில் இல்லாமல் போனாலும் போகாலம். இதே நிலைமைதான் மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களிலும் உள்ளன.
கடந்த காலங்களில் முஸ்லிம் கட்சிகளில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு பெரும்பான்மையான முஸ்லிம்கள் வாக்களித்த வரலாறு இம்முறை இல்லாமல் போவதற்கு பல காரணங்கள் உள்ளன. ஆனால், முஸ்லிம் வாக்காளர்கள் எந்த கட்சிக்கு வாக்களித்தாலும் தமது பிரதிநிதித்துவத்தை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் வாக்களிக்க வேண்டும்.
இம்முறை முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் தெரிவில் அம்பாரை மாவட்டத்தில் பலத்த சவாலை எதிர்கொண்டது. அக்கட்சி முதலில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிடுவதற்கு தீர்மானம் எடுத்தது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஹரீஸ், பைசால் காசிம், மன்சூர், பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் பாஷித் ஆகியோர்களை வேட்பாளர்களாக நிறுத்துவதற்கு தீர்மானத்து இருந்தது. இதற்கு அக்கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். 20 வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு வழங்கியவர்களை வேட்பாளர்களாக நிறுத்தக் கூடாது. அவ்வாறு நிறுத்தினால் நாங்கள் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டோம் என்று எதிர்ப்புத் தெரிவித்தனர்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸுடன் இணைந்து போட்டியிடுவதற்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டன. அக்கட்சியின் தலைவர் றிசாட் பதியூதீன் 20வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு வழங்கியவர்களை வேட்பாளர்களாக நிறுத்தாது விட்டால் இணைந்து போட்டியிடலாமென்று தெரிவித்தார். அதனால் அதுவும் சாத்தியமற்றது.
இந்நிலையில் தனித்துப் போட்டியிடுவதற்கு தீர்மானித்தது. அப்போதும் பைசால் காசிம், ஹரீஸ் ஆகியோர்களை வேட்பாளர்களாக நிறுத்தக் முடியாதென்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டன. நீண்ட பேச்சுவார்த்தைகளின் பின்னர் பைசால் காசிமை வேட்பாளராக நிறுத்தினாலும் ஹரீஸை வேட்பாளராக நிறுத்த முடியாதென்று தெரிவிக்கப்பட்டதுடன், அவரை வேட்பாளராக நிறுத்தினால் நாங்கள் போட்டியிடமாட்டோம் என்று அக்கட்சியில் வேட்பாளர்களாக உள்ள எம்.எஸ்.உதுமாலெப்பை, ஏ.எல்.தவம், சிராஸ் மீராசாஹிவு, ரஹ்மத் மன்சூர் ஆகியோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகின்றன. இதனால் பெரும் குழப்பத்தை எதிர்கொண்டார் அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம். இறுதியில் ஹரீஸை வேட்பாளராக நிறுத்துவதில்லை என்று முடிவு செய்யப்பட்டது. என்ற போதிலும், இறுதி வேளையில் ஒப்பமிடுவதற்கு வாய்ப்புள்ளது என்று கொழும்பில் உள்ள ஹரீஸை மட்டக்களப்பிலுள்ள தனியார் பல்கலைக்கழகமொன்றுக்கு ரவூப் ஹக்கீம் அழைத்தாகவும், அங்கு ஹரீஸ் வந்தவுடன் ஏனைய வேட்பாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றார்கள் என்னால் எதுவும் செய்ய முடியாதென்று கழுத்தறுத்து விட்டதாகவும் ஹரீஸ் தரப்பினர் குற்றம்சாட்டுகின்றனர்.
சில கேள்விகள் எழுகின்றன
இங்கு சில கேள்விகள் எழுகின்றன. 20வது திருத்தச் சட்ட மூலத்திற்கு ஆதரவு வழங்கியவர்களை வேட்பாளர்களாக நிறுத்தக் கூடாதென்ற குறிப்பாக தற்போது அக்கட்சியில் வேட்பாளர்ளாக உள்ளவர்கள் ஹரீஸை மாத்திரம் மையப்படுத்தியே செயற்பட்டுள்ளார்கள் என்று தெரிகின்றது.
20வது திருத்தச் சட்ட மூலத்திற்கு ஆதரவு வழங்கிய பைசால் காசிம், ஹரீஸ் ஆகியோர்களை வேட்பாளர்களாக நிறுத்தக் கூடாதென்று சொன்னவர்கள், 20வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு வழங்கிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக்கை வேட்பாளராக நிறுத்தக் கூடாதென்று எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இவர்கள் இவ்வாறு எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருந்த போது தௌபீக் ஐக்கிய மக்கள் சக்தியில் திருகோணமலை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிடுவதற்கு ஒப்பமிட்டார்.
மேலும், பைசால் காசிமுக்கும், ஹரிஸிற்கும் எதிர்ப்பு காட்டியவர்கள் இறுதியில் பைசால் காசிமை வேட்பாளராக நிறுத்துவதற்கு சம்மதம் தெரிவித்து விட்டு ஹரீஸை வேட்பாராளராக நிறுத்தக் கூடாதென்று அடம்பிடித்துக் கொண்டமை மூலமாக திட்டமிட்ட வகையில் ஹரிஸை மாத்திரம் குறிவைத்து ஒதுக்கியுள்ளதாகவே இருக்கின்றது. இத்திட்டத்தில் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமும் உள்ளதாக ஹரீஸின் நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றார்கள். எத்தனையோ சவால்களை எதிர்கொண்ட ரவூப் ஹக்கீமுக்கு ஹரீஸை வேட்பாளராக நிறுத்துவது என்பது பெரும் சவாலான விடயமென்று சொல்ல முடியாது.
றிசாட் பதியூதீன் நிபந்தனை
இதே வேளை, 20வது திருத்தச் சட்;டத்திற்கு ஆதரவு வழங்கியவர்களை வேட்பாளர்களாக நிறுத்தாவிட்டால் இரு கட்சிகளும் இணைந்து போட்டியிடலாமென்று றிசாட் பதியூதீன் முஸ்லிம் காங்கிரஸிற்கு விதித்த நிபந்தனையிலும் முரண்பாடு உள்ளது. அதாவது இச்சட்டத்திற்கு ஆதரவு வழங்கிய திருகோணமலை தௌபீக் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடுகின்ற நிலையில்தான் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வேட்பாளர் ஹில்மி ஐக்கிய மக்கள் சக்தியில் நிறுத்தப்பட்டுள்ளார். அம்பாரையில் தனித்துப் போட்டியிட்டால்தான் ஒரு ஆசனத்தைப் பெற்றுக் கொள்ளலாமென்ற மறைமுக திட்டத்தை வைத்துக் கொண்டே றிசாட் பதியூதீன் நிபந்தனை விதித்துள்ளார்.
இம்முறை முஸ்லிம் பிரதேசங்களில் தேர்தல் பிரச்சாரங்களின் போது 20வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு வழங்கியமை, கொவிட் தொற்றால் மரணித்த ஜனாஸாக்களை எரித்தமை ஆகியவை முக்கிய பிரச்சார கருக்களாக அமையும்.
இதே வேளை, முஸ்லிம்களின் வாக்குகள் பல கட்சிகளுக்கும் சிதறடிக்கப்படுகின்றமையால் முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கிழக்கு மாகாணாத்தில் குறைவதற்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளன. ஆதலால், முஸ்லிம் வாக்காளர்கள் தங்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் வாக்களிப்பது கடமையாகும்.

0 comments:
Post a Comment