பரிசோதனைகளில் ஏற்பட்டுள்ள தாமதத்தால் துறைமுகத்தில் 2724 கொள்கலன்கள் தேங்கியிருக்கின்றன. அவற்றை துரிதமாக விடுவிப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கொழும்பு துறைமுகத்துக்கு வருகை தந்த 24 கப்பல்கள் திரும்பிச் சென்றுள்ளதாக சுங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் சீவலி அருங்கொட தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள சுங்கத்திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,வெள்ளிக்கிழமை காலை 10 மணிவரை 2,724 கொள்கலன்கள் பரிசோதனைக்காக (Clearance) துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ளன. கொள்கலன்களை விடுவிப்பதிதல் நெறிசல் காணப்படுகின்றமை இந்த எண்ணிக்கையிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. எவ்வாறிருப்பினும் இவற்றை துரிதமாக விடுவிப்பதற்கான சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய உத்தியோகத்தர்கள் மேலதிக நேர கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஏனைய நிறுவனங்களுடனும் இணைந்து வெகுவிரைவில் இவற்றை விடுவிப்பதற்கு முயற்சிக்கின்றோம். அதேவேளை குறுகிய கால திட்டமாக கடந்த வாரம் அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட இரு இடங்களைப் பெற்றுக் கொண்டு அவற்றை அபிவிருத்தி செய்து, கொள்கலன்களை அங்கு வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும் கொள்கலன்களுடன் துறைமுகத்தை வந்தடையும் கப்பல்கள் தொடர்பில் சுங்கத்திணைக்களத்தால் எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுவதில்லை. கப்பல்கள் துறைமுகத்தை வந்தடைந்த பின்னர் அவற்றிலிருந்து கொள்கலன்களை தரையிறக்குவதற்கான அனுமதியை வழங்கும் நடவடிக்கை சுங்கப்பிரிவால் முன்னெடுக்கப்படும்.
எனவே கொள்கலன் நெறிசலால் கப்பல்கள் திருப்பியனுப்பப்பட்டதாகக் குறிப்பிடுவது குறித்து எமக்கு எதுவும் தெரியாது. எவ்வாறிருப்பினும் கப்பல் முகவர்களின் சங்கம், விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதமொன்றின் பிரதி சுங்கத்திணைக்களத்துக்கும் கிடைக்கப் பெற்றுள்ளது. அந்த கடிதத்தில் 24 கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திலிருந்து திரும்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் தொடர்பில் எவ்வித தகவலும் விபரங்களும் எம்மிடம் இல்லை என்றார்.
virakesari -

0 comments:
Post a Comment