• Latest News

    March 18, 2025

    பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை அரசாங்கத்திற்கு அக்கினிப் பரீட்சையாகும் - சம்பிக ரணவக்க


    ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு ஒரு போதும் முன்னிலையாக மாட்டார். பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை விவகாரம் அரசாங்கத்தின் தற்போதைய நிலைமையை அறிந்து கொள்வதற்கான அக்கினிப் பரீட்சையாகும் என முன்னாள் அமைச்சர் சம்பிக ரணவக்க தெரிவித்தார்.

    கண்டியில்  திங்கட்கிழமை (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

    ஜனாதிபதித் தேர்தலிலும், அதனை விட அதிகமாக பொதுத் தேர்தலிலும் அரசாங்கத்துக்கு பாரிய மக்கள் ஆணை கிடைக்கப் பெற்றது.  அந்த மக்கள் ஆணை தற்போது எந்தளவுக்கு காணப்படுகின்றது என்பதற்கான விஷப்பரீட்சையே இந்த உள்ளுராட்சிமன்றத் தேர்தலாகும்.

    6 மாதங்களில் அரசாங்கத்தின் செயற்பாடு தொடர்பில் மக்கள் எவ்வாறான மனநிலையில் உள்ளனர் என்பது இந்த தேர்தலில் வெளிப்படுத்தப்படும்.

    நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளுக்காக அரசாங்கத்துக்கு பதிலளிப்பதற்கும், மக்களுக்கு தெரிந்த அவர்களுக்கு சேவையாற்றக் கூடியவர்களை தெரிவு செய்வதற்குமானதாக இந்த தேர்தல் அமையும்.

    பொதுத் தேர்தலில் பெற்றுக் கொண்ட வாக்குகளை இந்த தேர்தலில் பெற்றுக் கொள்ள முடியாமல் போகும் பட்சத்தில் அரசாங்கம் மாகாணசபைத் தேர்தலை நடத்தாது.

    அரசாங்கத்திடம் நிர்வாகத்திறன் இல்லை என்பதை அறிந்து கொண்டதால் தான் பாதாள உலகக் குழுக்கள் குற்றச் செயல்களை அதிகரித்துள்ளன. நீதிமன்றத்துக்கும் துப்பாச்சூட்சை நடத்தக் கூடியவாறான சூழல் இந்த பின்னணியிலேயே அமைந்துள்ளது.

    அத்தோடு பொலிஸ் திணைக்களம் முழுமையாக அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதன் விளைவாகவே இவ்வாறான நிலைமைகள் ஏற்பட்டுள்ளன.

    நீதிமன்ற உத்தரவுக்குட்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பில், அரசாங்கத்துக்கு சார்பான ஊடகவியலாளர் ஒருவர் 'பொலிஸ்மா அதிபர் சரணடையப் போவதுமில்லை, அவரை கைது செய்யப் போவதுமில்லை, உயர் நீதிமன்றத்தின் ஊடாக பிணையைப் பெற்றுக் கொள்ள அவருக்கு வாய்ப்பளிக்கப்படும், அதுவரை அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காது.' எனக் குறிப்பிட்டுள்ளார்.

    அதனை உண்மையாக்கும் வகையிலேயே தற்போது அரசாங்கம் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. ஜனாதிபதி இவ்வாறு ஒப்பந்த அடிப்படையில் செயற்படுவது சட்டத்தின் பக்கத்தில் மிகப் பாரதூரமான நிலைமையாகும்.

    பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை விவகாரம் அரசாங்கத்தின் நிலைமை தொடர்பில் அறிந்து கொள்வதற்கான ஒரு அக்கினிப்பரீட்சையாகும். குறிப்பாக ஜனாதிபதிக்கு இதில் முக்கிய பங்கிருக்கிறது.

    கடந்த காலங்களில் பல பிரதேசங்களில் வதை முகாம்கள் காணப்பட்டன. ஜே.வி.பி.யும் வதை முகாம்களில் மக்களை கொலை செய்திருக்கிறது. 1987இ 1988களில் கொலைகளில் போட்டி நிலவியது.

    எனவே ஒரு பக்கத்தில் மாத்திரமன்றி சகல பக்கங்களிலும் கொலை குற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதே சட்டத்தின் ஆட்சியாகும். பட்டலந்த முகாமில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டிருந்தால், இந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.

    காரணம் அது விசேட ஜனாதிபதி ஆணைக்குழு அல்ல. எனவே இது பற்றி வெறுமனே பேசிக் கொண்டிருக்காமல், குற்றமிழைத்தவர்கள் உயிருடன் இருந்தால் அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். ஆனால் அது மிகவும் கடினமானதாகும்.

    எவ்வாறிருப்பினும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு ஒருபோதும் முன்னிலையாக மாட்டார் என்றார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை அரசாங்கத்திற்கு அக்கினிப் பரீட்சையாகும் - சம்பிக ரணவக்க Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top