• Latest News

    September 16, 2013

    இந்த அரசாங்கம் எங்களை கருவறுத்துக் கொண்டிருக்கின்றது; ரவூப் ஹக்கிம் சீற்றம்!

    நிப்ராஸ் -
    எமது கட்சி உறுப்பினர்களை காவு கொள்ளும் மிகவும் கேவலமான இழி செயலை இந்த அரசாங்கம் செய்து கொண்டிருக்கின்றது.  எங்களது கட்சி உறுப்பினர்களையும் பறித்தெடுத்து பதவிகொடுக்கும் கழுத்தறுப்பு வேலைகளைச் செய்து அரசாங்கம் எங்களைக் கருவறுக்கின்றது
    இவ்வாறு மாத்தளை ஹரிசன்ஸ் ஜோன்ஸ் வீதியில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸின் மாகாண சபை தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். 
    அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
    வட மாகாண சபைக்கான தேர்தலை நடாத்துமாறு சர்வதேசத்தினால் அரசாங்கத்தின் மீது பிரயோகிக்கப்பட்ட அழுத்தம் காரணமாக வடக்கில் ஏற்படவுள்ள சரிவை சரி செய்துகொள்வதற்காக மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளை உரிய காலத்திற்கு முன்னரே கலைத்து விட்டு தேர்தல் நடாத்தப்படுகின்றது. சிறுபான்மைச் சமூகங்களுக்கு எதிரான இனவாத நடவடிக்கைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள மிகவும் இக்கட்டான கால கட்டத்தில் நடைபெறும் இந்த மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் சர்வதேசத்தின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளன. இந்தத் தேர்தல்களின் முடிவுகளைப் பொறுத்துத்தான் இலங்கையில் சிறுபான்மை இனங்களின் எதிர்காலம் தீர்மானிக்கப்படப்போகின்றது.
    சிறுபான்மைச் சமூகங்கள் மத்தியில் தலைவர்கள் இடையே ஒற்றுமை நிலவ வேண்டும். எதற்கும் அஞ்சாத ஓர் அரசு ஆட்சியில் இருக்கின்றது. ஆனவம், அகங்காரத்துடன் மிகப் பலமாக இருப்பதாக அரசாங்கம் இறுமாப்புடன் இருக்கின்றது. ஒரேயொரு விஷயத்திற்குப் பயப்பட்டது. அதுதான் வடமாகாணத் தேர்தல். இத் தேர்தலை நடாத்தாமலிருப்பதற்கு காரணம் தேடலாமா என இழுத்தடிக்கப்பட்டது. ஆனால் அதனை நடாத்தியே ஆக வேண்டுமென அழுத்தம் கொடுக்கப்பட்டது. அந்தத் தேர்தல் முடிவுகள் எவ்வாறு அமையப்போகின்றன என்பது பற்றி ஏற்கனவே எதிர்வு கூறப்பட்டுவிட்டது. எல்லோருக்கும் என்ன நடக்கப் போகின்றது எனத் தெரியும்.
    அவ்வாறிருக்க, இது ஆட்சி மாற்றமொன்றைக் கொண்டுவர வேண்டுமென்று அதிகபிரங்கித்தனமாக பேசுபவர்கள் ஏராளமாக மலிந்துள்ள காலம் உண்மை நிலைவரம் என்ன? நாட்டு நிலைவரம் என்ன என்பன மிகத் துலாம்பரமாகத் தெரிந்த விடயங்களாகும்.  இவ்வாறான குழப்ப நிலையில் தான் முஸ்லிம் மக்கள் அரசாங்கத்துடனான ஆத்திரத்தையும், ஆவேசத்தையும் காட்டமாக வெளிக்காட்டலாமென வடிகாண் தேடிக்கொண்டிருப்பர்வர்கள் மிகவும் நேர்மையாகச் சிந்திக்க வேண்டும்.
    ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவைப் பற்றி நான் தரக்குறைவாகவும், கேவலமாகவும் பேசுவது கிடையாது. ஐக்கிய தேசியக் கட்சிக்காக நான் அரசாங்கத்திலிருந்து வெளியேற, வெளியேற்றப்பட நேர்ந்தது ஒரு வருத்தம். அப்போதைய ஆட்சி கவிழந்தது ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் ஏற்பட உதவினோர் ஆனால் அந்த ஆட்சியை இரண்டரை வருடங்களாவது ரணில் விக்கிரமசிங்கவினால் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை.  போகப் போகப் பலவீனப்பட்டுக் கொண்டு செல்லும் ஐக்கிய தேசியக் கட்சியால் மாகாண ஆட்சியையோ, மத்திய ஆட்சியையோ இப்போதைக்கு கைப்பற்றவே முடியாது.
    இந்த மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றி பெற விடாது தடுப்பதற்கே நாங்கள் எத்தனிப்பதாக கூறுகின்றனர். அவர்களது வெற்றியை நாங்கள் தடுக்கத் தேவையில்லை. அவர்களே தடுத்துக்கொள்கின்றனர். அதற்காக நாங்கள் ஒன்றும் செய்துவிட முடியாது.  ஐக்கிய தேசியக் கட்சியை அப்பொழுது ஆட்சியில் அமர்த்துவதற்காக நான் தனிப்பட்ட முறையில் அனுபவித்த இன்னல்கள் ஏராளம். வீட்டில் நிம்மதியாக உறங்கக் கூட முடியவில்லை.
    அப்பொழுது ஐக்கிய தேசியக் கட்சிக்காக நான் மடவளையிலும், கம்பளையிலும், தெல்தோட்டையிலுமாக எனது பன்னிரண்டு முஸ்லிம் காங்கிரஸ் தீவிர ஆதரவாளர்களை பலி கொடுத்திருக்கின்றேன். ஐக்கிய தேசியக் கட்சியை பதவியில் அமர்த்துவதற்கு நான் கொடுத்த விலை பெறுமதியான பன்னிரண்டு மனித உயிர்கள்.  அரசாங்கத்திற்கு நாங்கள் கூஜாத் தூக்குபவர்களாகவும்,
    அரசாங்கத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்டிருப்பவர்களாவும் ஐக்கிய தேசியக் கட்சிக்காரர்கள் கூறித்திரிகின்றார்கள். நீங்கள் பலவீனமாக இருப்பதற்கு எங்களுக்கு குறை கூறிப் பயனில்லை.
    முஸ்லிம் காங்கிரஸ் இந்தச் சமூகத்தின் பாதுகாப்புக் கேடயம். இந்தக் கட்சியைப் பலவீனப்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கோ, எதிர்கட்சிக்கோ எமது மக்கள் இடமளிக்க மாட்டார்கள்.  நாங்கள் வீரவசனங்கள் பேசிவிட்டு, கிழக்கில் அரசாங்கத்தோடு ஆட்சியமைத்ததாக ஐக்கிய தேசியக் கட்சியினர் பல்லவிபாடுகின்றனர்.  அப்பொழுது கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்போடு நாங்கள் ஆட்சி அமைத்திருந்தால் இந்த அரசாங்கம் என்ன செய்திருக்கும் என்பதை நாங்கள் முன்கூட்டியே அறிந்திருந்தோம் அப்படி நடந்திருந்தால் கிழக்கு மாகாண ஆட்சி இரண்டு மாதங்களாவது நீடித்திருக்காது எமது உறுப்பினர்களில் சிலரை விலைக்கு வாங்கியிருப்பார்கள் அவர்கள் அரசாங்கத்தினால் காவு கொள்ளப்பட்டிருப்பவர்கள்.
    ஏனைய கட்சி உறுப்பினர்களை காவு கொள்ளும் மிகவும் கேவலமான இழி செயலை இந்த அரசாங்கம் செய்துகொண்டிருக்கின்றது.  எங்களது கட்சி உறுப்பினர்களையும் பறித்தெடுத்து, பதவிகொடுக்கும் கழுத்தறுப்பு வேலைச் செய்துகொண்டு அரசாங்கம் எங்களைக் கருவறுக்கின்றது. உள்ளே வைத்துக்கொண்டே அரசாங்கம் எமது கட்சியை பலவீனப்படுத்தப் பார்க்கின்றது.  நாங்கள் மிகவும் நிதானமாக இருந்து காய் நகர்த்துகின்றோம். மிகவும் சமயோசிதமாக நடந்துகொண்டு இந்த ஜனாதிபதிக்கு நாங்கள் உரிய மரியாதையைக் கொடுக்கின்றோம்.
    அரசாங்கத்தில் இருந்துகொண்டே நாம் அதனை நெருக்கடிக்குள் தள்ளுகின்றோம். கடிவாளத்தைக் கையில் வைத்துக் கொண்டு சமூகத்தின் ஒரு தார்மீகக் கடமையச் செய்துகொண்டிருக்கின்றோம்.  இதை முஸ்லிம்கள் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். சுக்கானம் எங்களிடம் இருக்கின்றது. கிழக்கு கை நழுவிப் போனது போன்று வடக்கும் பறிபோகப் போகின்றது என்ற அச்ச உணர்வு அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது.  அரசாங்கத்தில் நான் தங்கியிருப்பவன் அல்லன். அரசாங்கம் தான் எங்களில் தங்கியிருக்கின்றது. அதற்காக அரசாங்கம் எதனையும் செய்யலாம். எங்களைப் பழி வாங்கலாம்.
    அரசாங்கத்திற்குள் வேறு முஸ்லிம் அமைச்சர்களும் உள்ளனர். அவர்களது நிலை வேறுவிதமானது. ஆனால், அமைச்சர் பௌசி விதிவிலக்கானவர். அமைச்சர் பௌசி, ஆளுநர் அலவி மௌலான ஆகியோர் அரசாங்கத்திற்குள் இருந்துகொண்டு சமூகத்தின் விமோசனத்திற்காகப் பேசுகின்றார்கள். எனக்கும் பக்கபலமாக இருந்து ஒத்துழைக்கின்றார்கள்.  ஆனால், உள்ளேயிருந்து கொண்டு குரல் எழுப்பவும் அவர்கள் இருவராலும் வெளியில் வந்து என்னைப் போல பகிரங்கமாக எதையும் பேச முடியாது. ஆனால் நான் உள்ளும், புறமும் பேசுகின்றேன். நான் இறைவனைத் தவிர எவருக்கும் அஞ்சுபவன் அல்லன்.
    சிறி லங்கா சுதந்திரக் கட்சி ஆரம்பத்திலிருந்தே மாகாண சபை தேர்தலை பகிஷ்கரித்து வந்தது. ஆனால் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 1988 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக மாகாண சபை தேர்தல்களில் போட்டியிட்டு வருகின்றது.  அப்பொழுது ஆயுதக் குழுக்களின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நாம் போட்டியிட்டு வெற்றி பெற்றோம். அதில் உயிர்களைப் பறி கொடுத்திருக்கின்றோம்.
    அரசாங்கம் கொண்டுவர பதின்மூன்றாம் திருத்திச் சட்டத்தை நீக்கும் முயற்சியையும், காணி, பொலிஸ் அதிகாரங்களைப் பறிக்கும் முயற்சியையும் நாம் முறியடித்திருக்கிறோம். வடக்குத் தேர்தலுக்கு முன்னர் அதிகாரங்களை பறித்துவிட்டு முதல் அமைச்சரையும் ஏனைய மாகாண அமைச்சர்களையும் தொடர்ந்தும் கைபொம்மைகளாக வைத்திருக்கவே எத்தனித்தார்கள் என்றார்.


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இந்த அரசாங்கம் எங்களை கருவறுத்துக் கொண்டிருக்கின்றது; ரவூப் ஹக்கிம் சீற்றம்! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top