• Latest News

    September 28, 2013

    பாக்., புதிய தீவில் எரிவாயு கசிவு

    இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், அரபிக் கடலில் உருவாகியுள்ள புதிய தீவிலிருந்து, தீப்பற்றக் கூடிய வாயு வெளியேறத் துவங்கியுள்ளது. பாகிஸ்தானில், கடந்த, 24ம் தேதி, சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில், 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால், 350க்கும் மேற்பட்டோர் பலியாயினர். இந்நிலையில், சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் தாக்கம், அரபிக் கடல் பகுதியில் உணரப்பட்டது. பாக்., எல்லைக்குட்பட்ட அரபிக் கடலில், 2 கி.மீ., தூரத்துக்கு, 18 மீட்டர் உயரத்தில், புதிய தீவு ஒன்று உருவாகியுள்ளது. இதைக் காண, ஏராளமான மக்கள் அங்கு திரண்ட வண்ணம் உள்ளனர்.
    "கடலில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் சாதாரணமானதே' என, புவியியல் வல்லுனர் தெரிவித்து உள்ளனர். எனினும், திடீர் தீவில், தீப்பற்றி எரியக் கூடிய வாயு வெளியேறத் துவங்கியுள்ளதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    தீவை காண சென்ற பொதுமக்கள் சிலர், அங்கு வாயுக் கசிவு ஏற்படுவதாக கூறியதை அடுத்து, நிருபர்களும், பாக்., கடற்படை அதிகாரிகளும், அங்கு சென்று பார்வையிட்டனர். அப்போது, தீவில் வாயுக் கசிவு ஏற்படுவதை அவர்கள் உறுதி செய்தனர். இதுகுறித்து ஒருவர் குறிப்பிடுகையில், "தீவை காணச் சென்றபோது, ஏதோ வாயுக் கசிவு ஏற்படுவதை உணர்ந்தேன். தீக்குச்சியை உரசியபோது, குப்பென தீப்பற்றி எரிந்தது. நான் பயந்து போய் தீக்குச்சியை கடல் நீரில் வீசினேன். நீரில் விழுந்தும் தீக்குச்சி தொடர்ந்து எரிந்தது' என்றார்.
    தீவில், விசேஷ வாயுக் கசிவு ஏற்படுவதை உறுதி செய்துள்ள பாக்., கடற்படை அதிகாரிகள், தீவை சுற்றிய கடல் பகுதியில், அதிக அளவிலான மீன்கள் இறந்து கிடப்பதாக கூறியுள்ளனர். இதனால், "அந்த தீவுக்கு யாரும் செல்ல வேண்டாம்' என, பொதுமக்களுக்கு, பாக்., அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பாக்., புதிய தீவில் எரிவாயு கசிவு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top