• Latest News

    September 28, 2013

    நாட்டை பிரிக்கும் நோக்கம் கிடையாது- விக்னேஸ்வரன்

    ஒரே நாட்டினுள் ஒரு பகுதியை தனித்துவமான முறையில் இயங்க வைத்தால் தனிநாடு கோருவது என்று இவர்கள் ஓர் அர்த்தம் கற்பித்திருக்கின்றார்கள். அது பிழையான கூற்­று. இருக்கும் நாட்டில் இருந்து பிரிந்து செல்வதுதான் தனி­நாடு என்­ப­தற்கு அர்த்­தம் என்­பதை அவர்கள் புரிந்­து­கொள்ள வேண்­டும்.
    கேள்வி: வடமாகாணசபைத் தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளுடன் முதலமைச்சராக நீங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளீர்கள். நீங்கள் எப்போது பதவியேற்கவுள்ளீர்கள்?
    என்னை வடமாகாண முதலமைச்சராக நிய­மிப்­ப­தற்கான அங்­கீ­கா­ரத்தை எமது உறுப்­பி­னர்கள் வழங்­கி­யுள்­ள­னர். அது ஆளுனருக்கு தெரியப்படுத்தப்பட்டு பின்னர் அத­னை வர்த்தமானி அறிவித்தல் செய்ய வேண்டியிருக்கும்.அதன் பின்னர் ஜனாதிபதிக்குத் தெரியப்படுத்தப்பட்­ட­தை­ய­டுத்து அதற்குரிய நடவடிக்கைகளை ஜனாதிபதி எடுத்­ததன் பின்னர், என்னுடைய கடமைகளை செய்யலாம் என்று அவர் கூறியதைய­டுத்­து­ நான் சத்தியப்பிரமாணம் எடுக்க வேண்டியிருக்கும். அத்தருணத்தில் யார் முன்னிலையில் பத­விப்­பி­ர­மாணம் எடுக்க வேண்டும் என்பதை அப்போது தான் தீர்மானிப்பேன்.
    கேள்வி: மாகாண முதலமைச்சரான உங்கள் மீது வடபகுதி மக்கள் பெரும் எதிர் பார்ப்பை வைத்திருக்கின்றார்கள். அந்த எதிர்பார்ப்பு மற்றும் அவர்க ளுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்களா?
    நிறைவேற்ற வேண்டியது எமது கடமை. நாம் எம் மக்­க­ளிடம் 36 ஆசனங்களில் 30 ஆசனங்களை வழங்குங்கள் என்று கேட்டிருந்தோம் அவர்கள் தம­து கட­மையைச் செய்­துவிட்­டார்கள். நான் இனி என்னுடைய கடமைப்பாடுகளை செய்ய வேண்டியுள்­ளது. ஆகவே எனது அணியைச் சேர்ந்த 27 பேரையும் உற்சாகப்படுத்தி எங்களால் முடியுமானவரையில் எல்லோருடைய அனுசரணையுடன் எங்களது மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகளை செய்வதற்கு எதிர்பார்த்திருக்கின்றோம்.
    வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு முன்பு நாங்கள் எல்லோரும் இது சம்பந்தமாக பேச இருக்கின்றோம். 25 வருடங்களாக தேர்­­தல் நடைபெறாதிருந்­த­மையால் வடமாகாணசபை முறையாக அமைக்கப்படாதி­ருக்­கின்­ற­து. அதனை அமைப்பதற்கு எப்படியும் இரண்டு மாதங்களாவது தேவை. அவற்றை செய்த பின்னர் நாம் பேசி சில சில முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது.
    போருக்குப் பின்னரான மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நாங்கள் முனைந்துள்ளோம். இப்பொழுதே வெளிநாடுகளில் பல இடங்களில் இருந்து நிதி உதவி தருவதாக கூறுகின்றார்கள். இது சம்பந்தமாக நாம் அரசாங்கத்துடன் பேசி அவர்களுடைய அனு­ச­ர­னை­­யு­டனேயே செய்ய வேண்டியிருக்கும். ஆகவே அந்த நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்துச்செல்ல வேண்டும். எவ்வாறான செயல் திட்டங்களை மனதில் வைத்திருக்கின்றோம் என்பதை இப்பொழுது என்னால் முறையாகக் கூற முடியாதுள்ளது.
    ஏனெனில் நிபுணத்துவம் உடையவர்களே இந்த செயற்றிட்டம் எவ்வாறு அமைய வேண்டும் என்பது சம்பந்தமாக எங்களுக்கு போதிய அறிவைத் தருவார்கள். ஆகவே இந்த செயற்திட்ட அறிக்கையை வழங்கியதன் பின்னர் அது மக்களுக்கு நன்மை பயப்பதாக இருந்தால் நிதியுதவிகளைப் பெற்று இவற்றை செய்து கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்போம்.
    கேள்வி: வெளிநாட்டவர்களா? அல்லது புலம்பெயர்ந்துள்ளவர்களா? நிதியுதவி தருவதாகக் கூறியுள்ளனர்?
    புலம் பெயர்ந்துள்ளவர்களும் இணங்கியுள்ளனர். வெளிநாடுகளும் நிதியுதவி வழங்குவதாகக் தெரி­வித்­துள்ளன. இதில் அரசாங்கத்தின் பங்கு எவ்வாறாக இருக்கும் என்பது பற்றி எமக்குத் தெரியாது. இவ்விடயத்திற்கு அரசாங்கம் சரி என்று கூறி பலவிதங்களிலும் எமக்கு அனுசரணையாக இருந்தால் நன்மைகள் கிடைக்க வாய்ப்பு இருக்கின்றது.
    அவ்வாறு இல்லாது பல சட்ட திட்ட ங்களை விதித்து காலம் தாழ்த்தினால் நாம் செய்ய வேண்டிய வேலைகளையும் செய்ய முடியாத நிலைமையே ஏற்படும். அரசாங்கம் இதற்கு ஒத்துழைப்பு வழங்கும் என்று நாம் எதிர்ப்பார்க்கின்றோம். ஜனநாயக முறைப்படி தெரிவு செய்யப்பட்ட எங்களது சபை நல்ல விடயத்தை எடுத்துச் சென்றால் அது அரசாங்கத்திற்கு நன்மை பயக்கும். அந்த விதத்தில் இவ்விடயத்தை பிரச்சினை இல்லாமல் முன்னெடுத்துச் செல்ல முடியும் என்ற நம்பிக்கை இருக்கின்றது.
    கேள்வி: வடமாகாணசபை நிர்­வா­கத்­துடன் இணைந்து செயற்­பட தயார் என்று தேர்தல் முடிந்தவுடன் அமைச்சர் பஷில் கூறியிருந்தார். இவ்வாறு நடக்கும் என்று உங்களுக்கு நம்பிக்கை இருக்கின்றதா?
    நிச்சயமாக இருக்கின்றது. ஆனால் விமல் வீரவன்ச போன்றவர்கள் வெவ்வேறு பேச்சுக்களை பேசுகின்றார்கள். சில நேரங்களில் அவர்களின் கருத்­துக்­க­ளுக்கு ஜனாதிபதி செவி சாய்ப்பதால் ஏதாவதொன்றை கூறிவிட்டு மாறாக வேறு எதனையும் செய்யக்கூடும் என்றதொரு பயம் இருக்கின்றது. இதைத்­த­விர கட்டாயமாக அவர் சொன்னதை செய்வார் என்ற நம்பிக்கையும் இருக்கின்றது.
    அத்­துடன் சிங்கள மக்­களை குழப்­பு­வ­தற்கு இனத்துவேஷத்துடன் செயல்படுவதற்கு சிலர் இருக்கின்றார்கள். அதன் காரணத்தினால் அவர் ஏதாவது பிரச்சினைக்கு உட்பட்டு தனது நிலைப்­பாட்டை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்படுமோ என்று தெரியாது. நாங்கள் இவற்றை அனு­ப­வத்தில் நன்­றாக படித்துள்ளோம்.
    உதாரணமாக எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்க செல்வநாயகத்துடன் ஓர் உடன்படிக்கை வைத்த போது எமது பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கின்றது என்று நாம் எதிர்பார்த்திருந்தோம் ஆனால் 200 பௌத்த பிக்குகள் அவரது வீட்டிற்குச் சென்று பல எதிர்ப்பு வார்த்தைகளை கூறிய பின்னர் அந்த ஒப்பந்தத்தை கிழித்தெறிந்து விட்டார்.
    டட்லி சேனாநாயக்கவுடனும் அவ்வாறு தான் இடம்பெற்றது. இப்படி ஒவ்வொரு சந்­தர்ப்­பத்­திலும் தலைவர்கள் சில நல்ல காரியங்கள் செய்யும் போது அதை முறி­ய­டிப்­ப­தற்­கான நடவடிக்கைகளே இடம்பெற்றன.
    கேள்வி: வடமாகாணசபையில் 2/3 பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றுள்ளீர்கள். இன்றைய சூழ்நிலையில் வடமாகாணசபை நிர்வாகத்தை கொண்டு நடத்துவதற்கு மத்திய அரசாங்கம் உங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் என்று நீங்கள் எதிர்பார்க்கின்றீர்களா?
    வழங்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம். வழங்குவார்கள் என்ற நம்பிக்கையோடும் இருக்கின்றோம். அவ்­வாறு ஒத்­து­ழைப்பு வழங்காவிட்டால் ஜனநாயகத்திற்கு பங்கம் ஏற்படும் என்று நாங்கள் கூறிக்கொள்ள விரும்புகின்றோம். அரசாங்கத்தின் எண்ணம் என்வென்று அறிந்துகொள்ள வேண்­­டிய தேவையும் எம க்­கு உள்­ளது.
    கேள்வி: வடமாகாண ஆளுநர் விடயத்தில் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை தேர்தல் காலத்தில் நீங்கள் எடுத்துக் கூறியிருந்தீர்கள். இராணுவ அதிகாரியொருவர் ஆளுநராக இருக்க கூடாது. அவரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தீர்கள். தற்போது இந்த கோரிக்கையில் உறுதியாக இருக்கின்றீர்களா?
    இராணுவ அதிகாரியொருவர் ஆளுநராக இருக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பேன். இதில் எவ்வித மாற்றமும் இல்லை. உண்மையை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. மற்றவர்களுக்கு ஆணை இடும் ஓர் இராணுவ அதிகாரி ஆளுநர் கடமைக்கு ஏற்றவர் அல்ல. அதாவது மக்களது பிரச்சினைகளை உணர்ந்து அதற்கான நடவடிக்கை எடுக்கும் போது, அதற்கு ஆதரவாக நடவடிக்கை எடுக்கக்கூடிய சிவில் நிர்வாகத்தைச் சேர்ந்த ஒருவரையே நாங்கள் ஆளுநராக எதிர்பார்க்கின்றோம்.
    போரின் போது எத்தனையோ மக்களை கொலை செய்வதற்கு காரணமாக இருந்த ஒருவர் ஆளுனராக இருப்பது சரியல்ல. இதனை நாம் தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகின்றோம். அதே மனநிலையில் தான் இபபோதும் இருக்கின்றோம்.
    கேள்வி: உங்களது இந்நிலைப்பாட்டுக்கு அரசாங்கம் செவிசாய்க்கும் என நினைக்கின்றீர்களா?
    இவ்விடயத்தில் அரசாங்கத்தை தலையிடுமாறு நாம் கேட்டிருக்கின்றோம். ஆனால் அவர்கள், தமிழ் மக்கள் எதிர்க்கப்பட வேண்டியவர்கள் என்று தான் இதுவரை காலமும் பார்த்துக்கொண்டு வருகின்றார்கள். இதற்­கேற்­ற­வாறே எதிர்ப்பு நடவடிக்கைகளில் நல்ல பெயர் பெற்ற ஒருவரை ஆளுனராக வைத்துள்ளார்கள்.
    நாட்டை பிளவுபடுத்தும் அடிப்படையில் அல்லாது ஜனநாயக முறைப்படி மனிதாபிமான ரீதியில் எங்களுடைய செயற்பாடுகளை கொண்டு நடத்த இருக்கின்றோம். இந்நிலையில் அவர்கள் மக்களினுடைய நலன் கருதி நல்லதொரு தீர்மானத்தை எடுக்க வேண்டிய அவசியம் இருக்கின்றது. அதை எடுப்பார்கள் என்றும் நாம் நம்புகின்றோம்.
    கேள்வி: கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இணைந்த வடக்கு, கிழக்கில் சுயாட்சியுடன் கூடிய சமஷ்டி தீர்வை கோரியிருந்தீர்கள். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜனாதிபதி உட்பட அரசாங்க அமைச்சர்கள் மற்றும் எதிர்த்தரப்பினர் நாட்டை பிளவுபடுத்தும் ஒரு செயற்பாடு என்று குற்றஞ்சாட்டி பிரசாரங்களை முன்னெடுத்திருக்கின்றனர். இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன?
    அரசியல்வாதிகள் தங்களது குறுகிய கால நலன்களுக்காகவே சில நடவடிக்கைகளை எடுப்பதாக செயற்பட்டு சட்டப்படி பொய்மை எனக் கருதக்கூடிய கூற்றுக்களை கூறிக்கொண்டு இருக்கின்றார்கள்.
    பிரிவினைக்கு எதிர்ப்பானதுதான் சமஷ்டி. சமஷ்டியை பிரிவினை என்று கூறுபவர்கள் சட்டம் படிக்காதவர்கள், எதனையும் அறிந்துக்கொள்ளாதவர்கள் என்றே நாம் அவர்களை கூற வேண்டியுள்ளது.
    ஒரே நாட்டினுள் இரண்டு விதமான மக்கள் கூட்டம் இருக்கும் போது மொழிமுறையாகவோ மதமுறையாகவோ ஏதோ ஒரு காரணத்தினால் அவர்கள் இரண்டு விதமாக பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தை கொண்டவர்களாக இருந்தால் அவர்கள் தங்களை தாங்களே ஆண்டு கொண்டு நாட்டின் அதே ஒழுங்கு அமைப்பினுள் தொடர்ந்து இருப்பதற்கு வழி செய்வதுதான் சமஷ்டி.
    அதற்கு பிரிவினை எனும் நாமம் சூட்டி பிரிவினையை இவர்கள் கேட்கின்றார்கள் என்று கூறுவது விசித்திரமாக இருக்கின்றது. ‘நீங்கள் ஏன் இப்படியொரு அபாண்டமான பொய் கூறுகின்றீர்கள் என்று” சிங்கள மக்கள் இது சம்பந்தமாக கேள்விகளைக் கேட்க வேண்டும் என்று தான் நான் கூறி வருகின்றேன்.
    கேள்வி: கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு எதிராக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் உட்பட ஐந்து அமைப்புக்கள் செய்த மனுத்தாக்கல் மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டுள்ள சில விடயங்கள் வாபஸ் பெற வேண்டும் என்று ஹெல உறுமய கூறியுள்ளது. அவ்வாறு செய்யலாமா? இதன் சட்ட நுணுக்கங்கள் பற்றி கூறமுடியுமா?
    நானும் அந்தப்பிரிவைப் பார்த்தேன். அதாவது 6ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் இலங்கையினுடைய எல்லைகளுக்குள்ளே ஒரு தனிநாட்டை கோருவது அல்லது அது சம்பந்தமாக நடவடிக்கை எடுப்பது சட்டத்தின்படி தவிர்க்கப்பட்டிருக்கின்றது என்று கூறப்பட்டுள்ளது.
    ‘ஒரே நாட்டினுள் ஒரு பகுதியை தனித்துவமான முறையில் இயங்க வைத்தால் தனிநாடு கோருவது” என்று இவர்கள் ஓர் அர்த்தம் கற்பித்திருக்கின்றார்கள். அது பிழையான கூற்­று. இருக்கும் நாட்டில் இருந்து பிரிந்து செல்வதுதான் தனி­நாடு என்­ப­தற்கு அர்த்­தம் என்­பதை அவர்கள் புரிந்­துகொள்ள வேண்­டும். ஒரே நாட்டினுள் ஒரு பகுதியை நாங்கள் சில காரணங்களுக்காக தனித்துவம் மிக்கதாக தங்களுடைய நடவடிக்கைகளை எடுக்க விடுவது ஒருபோதும் பிரிவினையாகாது.
    இப்போது மலைநாட்டு தமிழர்கள் தங்களுடைய சில காரணங்களுக்காக அந்த இடத்திலேயே சில நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு போக முடியும் என்றால் அது பிரிவினையாகாது. 18 ஆவது திருத்தச் சட்டத்தின் பின் நீதியரசர்கள் என்ன செய்வார்களோ என்று எங்களுக்கு கூறமுடியாத ஒரு நிலையே காணப்படுகின்றது. ஆனால், நீதியரசர்கள் நோட்டிஸ் கொடுக்க வேண்டும் என்று கூறியதிலிருந்து என்ன நடக்குமோ என்று எமக்குத் தெரியாது.
    (எமது மீனவர்களுக்கு தமிழக மீனவர்களுக்கும் வெவ்வேறுபட்ட பிரச்சினைகளே காணப்படுகின்றன. இந்தப் பிரச்சினைகளை நாம் நிரந்தரமாக தீர்க்க வேண்டும் என்றால் அவர்கள் சம்பந்தமாக கரிசனை எடுக்கும் தமிழக முதலமைச்சருடன் பேசுவது நல்லது. இராணுவத்தின் பிர­சன்னம்தான் தற்போது எங்களுடைய தலையாய பிரச்சினையாக இருக்கின்றது. போர் முடிந்து நான்கு வருடங்கள் ஆகின்றன. இப்போது இவர்கள் அங்கிருக்க வேண்டிய தேவையோ அவசியமோ இல்லை.
    எல்லாவிதமான சட்ட ஒழுங்குகளை பொலிஸார் பார்த்துக்கொள்வார்கள். ஆனால் இராணுவம் அங்கிருந்து வெளியேற வேண்டும். இதில் எவ்விதமான இரண்டாவது பேச்சுக்கும் இடமில்லை. இரா­ணுவத்தை எதற்­காக அங்­கி­ருந்து வெளியே­ற்­றக்­கோ­ரு­கின்றோம் என்று நாம் அர­சா­ங்­கத்­திற்கு தெளிவு­ப­டுத்­து­வது எமது கட­மை­யாகும்.
    பிரச்சினைகள் இருக்கின்றன என்று தெரிந்து கொண்டே நான் வந்தேன். பிரச்சினையைக் கண்டு ஓட வேண்டிய அவசியம் எமக்கு இல்லை. ஆனால் எங்களுடைய மதம் சம்பந்தமான ஒரு பின்னணி இருப்பதாலோ என்னவோ இந்த பிரச்சினைகளைக் கண்டு நான் துவண்டு விடுவதில்லை.)
    கேள்வி: தெளிவான விளக்கம் இருந்தும் அவர்கள் ஏன் நீதிமன்றத்திற்குச் சென்றார்கள்?
    தமிழர்கள் தங்களை தாங்களே பார்த்துக்கொண்டால் வெளிநாடுகளிலிருந்து பல்வேறு உதவிகள் கிடைக்கும் தமி­ழர்கள் கெட்டிக்காரர்கள். எம்மை விட விஞ்சியவர்கள். இப்படியானவர்களை மேலெழவிட்டால் ஒரு காலத்தில் எங்கே எங்களுடைய சிங்கள நாட்டையும் எடுத்து ஆள்வதற்கு தலைப்படுவார்களோ என்றதொரு அச்சமே அவர்கள் இவ்­வாறு சொல்­வதற்கு கார­ணம் என நினைக்­கின்­றேன்.
    இந்த அச்சத்தின் நிமித்தமே அவர்கள் அன்று தொடக்கம் இன்று வரை தமி­­­­ழர்­க­ளுக்கு எதி­ராக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். நாங்கள் ஒரே நாட்டில் இருப்பதற்கு எங்களை அர்ப்பணித்து விட்டோம். என்று நாங்கள் கூறிக்­கொள்­கின்றோம்.
    நாட்டை பிரிப்பதென்றால் கூட்டைமப்பினர் என்னிடம் வந்திருக்க மாட்டார்கள். அதற்கு நான் ஒத்துக்கொண்டிருக்கவும் மாட்டேன். ஒரே நாட்டினுள் நாம் சமஷ்டி முறைக்காக போராட வேண்டும் என்று கூறிய பின்னரே இதற்கு நான் பணியாற்ற வந்தேன். பயம் பீதி போன்ற காரணங்களாலேயே பெரும்பான்மையின அரசியல் வாதிகள் இவ்வாறான கூற்றுக்களை கூறுகின்றார்கள்.
    கேள்வி: மத்திய அரசாங்கத்தில் உள்ள சில பிரிவினைவாத கட்சிகள் மற்றும் பலரது அழுத்தங்களுக்கு மத்தியில் உங்களது வேலைத்திட்டங்களை நீங்கள் எவ்வாறு முன்னெடுப்பீர்கள்?
    பிரச்சினைகள் இருக்கின்றன என்று தெரிந்து கொண்டே நான் வந்தேன். பிரச்சினையைக் கண்டு ஓட வேண்டிய அவசியம் எமக்கு இல்லை. ஆனால் எங்களுடைய மதம் சம்பந்தமான ஒரு பின்னணி இருப்பதாலோ என்னவோ இந்த பிரச்சினைகளைக் கண்டு நான் துவண்டு விடுவதில்லை. அத்துடன் இறைவன் மீது இருக்கின்ற நம்பிக்கை காரணமாக இதனை ஒரு பொருட்டாக கருதாது எனது கடமைகளை செய்வதில் நான் முழுமையாக ஈடுபட இருக்கின்றேன்.
    கேள்வி: கூட்டமைப்பின் மூலம் ஆட்சியை கைப்பற்றியுள்ளதுடன் 28 உறுப்பினர்களின் ஆதரவுடன் ஏகமனதாக முதலைமச்சர் பதவியை ஏற்றுக்கொண்டுள்ளீர்கள். மாகாணசபையின் அமைச்சரவையில் யார் யாரை நீங்கள் அமைச்சராக நியமிக்கவுள்ளீர்கள். அதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுவிட்டதா?
    அமைச்சுப்பதவிகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது சட்டத்தில் இருக்கின்றது. உதாரணமாக கல்வி, சுகாதாரம், உள்ளூராட்சி போன்று வெவ்வேறு தலைப்புக்களில் அமைச்சுக்கள் இருக்­கின்­ற­ன. ஆனால், நான் இது பற்றி சற்று வித்தியாசமாக கூறியிருக்கின்றேன். அதாவது ஐந்து அமைச்சர்கள் வந்தாலும் ஒவ்வொரு அமைச்சர்களுக்கும் ஐந்து பேர் வீதம் மிகுதி 25 பேரும் இந்த ஆட்சி முறையில் பங்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற ரீதியில் அமைக்கவுள்ளேன்.
    அமைச்சர் என்று ஒருவர் இருக்கும் போது, தெரிவு செய்யப்பட்ட மற்றவர்கள் ஒவ்வொரு அமைச்சுக்களுக்கு 5 பேர் வீதம் வெவ்வேறு உபபிரிவுகளுக்கு அவர்களுக்கான விடயங்களை பார்த்துக்கொள்ள வேண்டும். அந்த விதத்தில் இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பணி இருக்கும் நிலைமையை ஏற்படுத்த இருக்கின்றோம். அவ்வாறு செய்யலாம் என்பதை­யும் நான் கூறியுள்ளேன்.
    கேள்வி: தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தொடர்பில் நீங்கள் இந்து பத்திரிகைக்கு வழங்கியிருந்த நேர்காணலில் கருத்துக்கள் பெரும் சரிச்சையை ஏற்படுத்தியிருந்தது. பின்னர் நீங்கள் அந்த கருத்தை மறுத்து இருந்தீர்கள். அவ்வாறாயின் தமிழக தலைவர்கள் தொடர்பில் உங்களது நிலைப்பாடு என்ன?
    தமிழக அரசாங்கங்கள் மற்றும் அமைச்சர்களோடு எமக்கு என்றென்றும் தொடர்பு மற்றும் உறவு முறைகள் இருக்க வேண்டும். அதனை நாம் மறுக்­க­வில்லை. ஆனால், அவர்கள் எமது மக்­களின் பிரச்­­சினைகளை கையாளும் முறைமை தொடர்­பி­­லேயே நான் கருத்து கூறி­­யி­ருந்­­தேன். இலங்கைத் தமிழ் மக்களுடைய தீர்வு எவ்வாறு இருக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் சொல்லக்கூடாது. எங்களுடைய பிரச்சினையை அவர்­க­ளுக்­குள்ளேயே பந்தாடக்கூடாது.
    அவர்கள் அனை­வரும் ஒருமித்து ஒரு விடயத்தை கூறினால் அது வரவேற்கத்தக்க விடயம் என்­ப­துடன் அது எங்களுக்கு ஒரு பலமாகவும் இருக்கும். ஆனால், அவர்­க­ளுக்­குள்ளேயே முரண்­பட்­டுக்­கொண்­டு தமிழ் மக்­களின் பிரச்­சி­னையை ஒரு பந்­தாக பாவித்தால் அது எமக்கு பல­மாக அமை­யாது. அதுமட்டுமல்ல பிரிவினைதான் சரியான தீர்வு வேறு எதுவும் தீர்வு அல்ல என்று நீங்கள் கூறினால், இங்கு நாங்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படும் என்­பதை நான் கூறி­யி­ருந்தேன்.
    ஏனென்றால் எங்களுடைய தேர்தல் அறிக்கையின் படி பிளவுபடாத இலங்கையினுள் தீர்வு காண்பதற்கு விளைகின்றோம் என்று கூறியிருந்தோம். அப்படியெல்லாம் அல்ல நாட்டை பிரிப்பதுதான் ஒரே தீர்வு என்று அரசியல் வாதிகள் கூறுவது எமக்கு சரியாக படவில்லை. ஆகவேதான் நான் அதைக் கண்டித்தேன்.
    கேள்வி: தமிழக முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதாவை நீங்கள் சந்திக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இது உண்மையா?
    பாரதூரமாக உருவெடுத்துள்ள மீனவர்களின் பிரச்சினையை உடனடியாகத் தீர்க்க வேண்டியுள்ளது. சிலர் சிறையில் வாடுகின்றார்கள். சிலர் சுட்டுத்தள்ளப்படுகின்றார்கள். பல பிரச்சினைகளை மீனவர்கள் எதிர்நோக்கியிருக்கின்றார்கள்.
    எமது மீனவர்களுக்கு தமிழக மீனவர்களுக்கும் வெவ்வேறுபட்ட பிரச்சினையே காணப்படுகின்றது. இந்தப் பிரச்சினைகளை நாம் நிரந்தரமாக தீர்க்க வேண்டும் என்றால் அவர்கள் சம்பந்தமாக கரிசனை எடுக்கும் தமிழக முதலமைச்சருடன் பேசுவது நல்லது. இது எனக்கு விருப்பமாக இருக்கின்றது என்று நான் எனது கருத்தை கூறியிருந்தேன். அதற்கே தற்போது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.
    கேள்வி: அவ்வாறு சந்திப்பதற்கு வாய்ப்பு கிடைத்தால் அரசாங்கம் அதற்கு அனுமதியளிக்கும் என நினைக்கின்றீர்களா?
    எனக்கு இது பற்றி கூறமுடியாதுள்ளது. விமல் வீரவன்ச போன்றவர்கள் வெவ்வேறுபட்ட கருத்துக்களை கூறும் போது அவர்களுக்கு செவிசாய்க்கும் அரசாங்கமாக இந்த அரசாங்கம் முன்னர் இருந்தபடியால் அரசாங்கத்தின் எண்ணம் என்னவென்று எம்மால் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கின்றது.
    கேள்வி: முதலமைச்சராக நீங்கள் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் இந்திய தரப்பில் உங்களுடன் யாராவது பேசி­னார்­க­ளா?
    ஆம். அரசியல் ரீதியாக அல்ல. எனக்கு பலர் நல்வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.

    கேள்வி: வடக்கு மாகாணசபையின் முதலமைச்சரான நீங்கள் ஜனாதிபதியை சந்தித்துப் பேசத் தயார் என்று கூறியிருந்தீர்கள். அவ்வாறு ஒரு சந்திப்பு நடைபெற்றால் எந்த விடயத்தை முன்னிலைப்படுத்தி நீங்கள் அவருடன் பேசுவீர்கள்?
    எங்களுடைய மாகாணசபையை ஒரு ஒழுங்கமைப்பினுள் கொண்டு வந்து அதனை ஆரம்­பிப்­ப­தற்குரிய ஆதார நடவடிக்கைகளை எடுப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்பதை நாம் முதலில் கேட்டுக்கொள்ள வேண்டும். அரசியல் பிரச்சினைகளை பேசுவதற்கு முன்பு எங்களுடைய சபையை நாங்கள் உருவாக்க வேண்டும்.
    கேள்வி: வடமாகாணசபை நிர்வாகத்தையும் உரிய வகையில் கொண்டு நடத்த வேண்டுமானால் மத்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்பு அவசியமாகும். இதனால் வடமாகாணசபையுடன் இணைந்து செயற்படுமாறு அமெரிக்காவும் அரசாங்கத்திற்கு கூறியிருக்கின்றது. இவ்வாறு அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு நீங்கள் தயாராக இருக்கின்றீர்களா?
    ‘இணைந்து’ என்ற சொல்லுக்கு அண்மைக்காலமாக புதுவித அர்த்தத்தை கற்பித்திருக்கின்றார்கள். அதாவது, ஈ.பி.டி.பியும் இணைந்து என்று கூறியிருக்கின்றார்கள். அவர்கள் அங்கு இணையவில்லை. அடிவருடிகளாக இருக்கின்றார்கள். எங்களைப் பொறுத்தவரையில் அரசாங்கத்துடன் சேர்ந்து செயற்­ப­டு­வ­தில் எங்களுக்கு எவ்விதமான பிரச்சினையும் இல்லை. எங்களுடைய மக்கள் ஒரு தனித்துவமான மக்கள். தனித்துவமான மக்களின் தலைவர் என்ற ரீதியில் அவர்களது சார்பிலேயே அவர்களுடன் பேசுவதற்கு நாங்கள் எங்களுடைய சம்மதத்தை தெரிவிக்கின்றோம்.

    கேள்வி: வடமாகாணசபைக்கான கட்டிடம் ஒன்று இல்லாத நிலை இருக்கின்றது. அதற்கு உடனடியாக நீங்கள் எவ்வாறு தீர்வு காணவுள்ளீர்கள்?
    இது எமக்கு ஒரு பாரிய பிரச்சினை. இது சம்பந்தமாக நாம் ஜனாதிபதியை சந்திக்கும் போது பேச இருக்கின்றோம். கைதடியில் கட்டிடம் ஒன்று உருவாக்கப்படுவதாக எங்களுக்கு கூறப்பட்டுள்ளது. இராணு வத்தினர் மாங்குளத்தில் ஒன்றை அமைக்க இருப்பதாக கூறப்படுகின்றது.
    இராணுவத்தினரோ அல்­லது யாராக இருந்தாலும் மாங்குளத்தில் அதனை கட்டுவதற்கு முதலில் எங்களிடம் கேட்டிருக்க வேண்டும். இராணுவத்தினருக்கு இதனை தீர்மானிக்க முடியாது. தாங்கள் நினைத்த இடத்தில் இதனை அமைக்க வேண்டும் என்பது தான்தோன்றித்தனமாக செயற்­பா­டாகும். இனியும் இவ்வாறு நடக்கக் கூடாது. இராணுவத்துக்கும் இதற்கும் என்ன தொடர்பு என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், தற்காலிகமாக வாடகைக்கு ஒர் இடத்தை எடுத்துத்தான் எமது வேலை­களை ஆரம்­பிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று நான் நம்புகின்றேன்.
    கேள்வி: சிங்கள பெண்களை உங்களது மகன்மார்கள் திருமணம் முடித்திருந்ததாகவும் உங்களை தென்பகுதியைச் சேர்ந்த ஒருவர் என்று கூறி தேர்தல் பிரசாரத்தின் போது, பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள். இவ்வாறான நடவடிக்கைகள் நடக்கும் போது நான் தவறு இழைத்துவிட்டேன் என்று நீங்கள் நினைத்ததுண்டா?
    அர­சி­ய­லுக்கு வந்ததன் பின்னர் யோசிக்க முடியாதல்லவா? நான் கிட்டத்தட்ட மூன்று மாத காலமாக முடியாது என்று கூறி சகலரும் ஒன்றிணைந்து கேட்டால் இத பற்றி தீர்மானிப்பேன் என்று கூறியிருந்தேன். அதன்படி ஐந்து கட்சிகளும் ஒன்றினணந்து கேட்டதன் பின்னரே இதற்கு நான் ஒப்புக்கொண்டேன். இதன் பின்னர் வரும் பிரச்சினைகளைப்பற்றி பொருட்படுத்த முடியாது. ஏற்றுக்கொண்டு விட்டேன். இனி செய்ய வேண்டிய கடமைகளை செய்தே தீர்வேன். இது இறைவனுடைய தீர்மானம்.
    கேள்வி: உங்களது சம்பந்தியான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கூட தேர்தல் விஞ்ஞாபனத்தையடுத்து நீங்கள் பிரிவினைவாதி என்றும் பிரிவினைவாதியான நீங்கள் ஜனாதிபதியை சர்வாதிகாரி என்று கூற முடி­யா­து என்று பகிரங்கமான கருத்துக்களை கூறியிருந்தார். உங்களது அரசியல் பிரவேசம் உங்களது குடும்பத்திற்குள் பிரிவினையை ஏற்படுத் தியுள்ளதா?
    அப்படி ஒன்றும் ஏற்படவில்லை. அவ்வாறு ஏற்படாது என்றும் நான் நம்புகின்றேன். அமைச்சர் வாசுதேவ எனது நீண்டகால நண்பர். இந்த அரசியல் பிரச்சினைகளால் சிநேகித தன்மை விடுபட்டு போகாது. எங்களுடைய பார்வைகள் வித்தியாசமாக இருந்­தா­லும் எமது குடும்ப உறவில் பாதிப்பை ஏற்படுத்தாது.
    அரசியல் விடயத்தில் பிரச்சினைகள் இருப்பது சகஜம். அது எமது தனிப்பட்ட வாழ்க்கைக்கோ உறவுகளுக்கோ பாதகமாக அமைய விடக்கூடாது. அமையாது என்று நான் நம்புகின்றேன்;.
    கேள்வி: தமிழ் மக்களின் அரசியல் தீர்வு பிரச்சினைக்கு எவ்வாறு நீங்கள் ஒர் உந்து சக்தியாக இருக்கப்போகின்றீர்கள்,? அதற்கான திட்டங்கள் என்ன.?
    நாம் இரண்டுவிதமான பிரச்சினைகளை எதிர்நேக்குகின்றோம். அரசியல் பிரச்சினைகள் , எமது தனித்துவம், எமது பாரம்பரியம் மற்றும் எங்களுடைய சுயநிர்ணய உரிமை ஆகியவற்றை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நாம் எதிர்ப்­பார்க்கின்றோம். அதேநேரத்தில் போரின் பின்னர் எமது மக்கள் பெரிதும் கஷ்டப்பட்டிருக்கின்றார்கள். அவர்களது அடிப்படைத் தேவைகளை தற்போது பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது. பலவிதமான இக்கட்டுக்களில் அவர்கள் அகப்பட்டிருக்கின்றார்கள்.
    வேலையில்லாத் தன்மை தங்களது இடங்களை பறிகொடுத்துள்ள பிரச்சினை, விதவைகள் பிரச்சினை கல்வி, குடியிருப்பு சுகாதாரம், வாழ்வாதாரம் என பலதரப்பட்ட பிரச்சினைகளை அவர்கள் எதிர்நோக்குகின்றார்கள். முதலவதாக இந்தப்பிரச்சினைகளை நாங்கள் எடுத்து எப்படியான தீர்வைப் பெற்றுக்கொடுக்கலாம் என்று உரியவாறு சிந்தித்து செயலாற்ற வேணடியிருக்கின்றது. அதனையே முதலாவதாக செய்ய இருக்கின்றோம்.
    கேள்வி: வடக்கில் இராணுவத்தின் பிர­சன்­னம் தற்போது எப்படி இருக்கின்றது.?
    இராணுவத்தின் பிர­சன்னம்தான் தற்போது எங்களுடைய தலையாய பிரச்சினையாக இருக்கின்றது. போர் முடிந்து நான்கு வருடங்கள் ஆகின்றன. இப்போது இவர்கள் அங்கிருக்க வேண்டிய தேவையோ அவசியமோ இல்லை. எல்லாவி தமான சட்ட ஒழுங்குகளையும் பொலிஸார் பார்த்துக்கொள்வார்கள். ஆனால் இராணுவம் அங்கிருந்து வெளியேற வேண்டும்.
    இதில் எவ்விதமான இரண்டாவது பேச்சுக்கும் இடமில்லை. இரா­ணுவத்தை எதற்­காக அங்­கி­ருந்து வௌியே­ற்­றக்­கோ­ரு­கின்றோம் என்று நாம் அர­சா­ங்­கத்­திற்கு தௌிவு­ப­டுத்­து­வது எமது கட­மை­யாகும். இரா­ணு­வத்­தினர் அங்­கி­ரு­ந்துச் செல்­லாது இருப்­பதை வைத்து நாங்கள் அவர்­க­ளுடன் சண்டை போட முடியா­தல்­ல­வா? இதில் நாங்கள் பிரச்சினைபடுவது தேவையில்லாத ஒரு விடயம்.
    இரா­ணுவம் அங்­கி­ருப்­பதால் நாங்கள் படும் பாடுகளை நாம் எடுத்துக் கூறுவோம். இது தொடர்­பில் பதில் கிடைக்காவிட்டால் நாங்கள் உலக நாடுகளுக்கு சொல்ல வேண்டிய நிலைமை ஏற்படும்.
    கேள்வி: உங்களது வேலைத்திட்டங்களை முன்னெடுக்க காணி, பொலிஸ் அதிகாரங்க ளை பயன்படுத்த வேண்டும். இது சாத்தியமாகுமா?
    சட்டப்படி இப்போது காணி, பொலிஸ் அதிகாரங்கள் எம்மிடமே இருக்கின்றது. நாம் எமது வேலைகளை செய்து கொண்டு போகலாம். சட்டத்தில் இருந்து அவற்றை நீக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி கூறிவிட்டு நடவடிக்கை எடுக்கவில்லை. இந்தியாவின் நெருக்குதல் இதற்கான காரணமாக இருந்திருக்கக் கூடும் என நினைக்­கின்றேன். பலவித நெருக்குதல்களுக்கு மத்தியில் அவர் கூறியதை செய்ய முடியுமோ முடியாதோ என்று எமக்கு கூறமுடியாது.
    காணி, பொலிஸ் அதிகாரம் எமக்கு தேவையானது. அது எம்மிடம் இருக்க வேண்டியது. அதனை அரசாங்கம் பறிக்க முடியாது. ஜனநாயக முறைப்படி இதனை எடுத்துக்கூற முடியும் என்று நம்புகின்றேன்.
    கேள்வி: வடமாகாண சபை சம்பந்தமாக வேறு ஏதாவது கூற நினைக்கின்றீர்களா?
    வடமாகாணசபைத் தேர்தல் முடிவுகள் கிழக்கு மாகாணத்தையும் மலையகத்தையும் ஒருவிதத்தில் பாதிக்கின்றது. தற்போது வடமாகாண மக்களிடையே ஒரு எழுச்சி ஏற்பட்டுள்ளது. அதேபோன்று கிழக்கு மற்றும் மலையகத் தமிழ் மக்களிடையே இந்த எழுச்சியை நான் எதிர்ப்பார்க்கின்றேன். நாங்கள் சகலரும் ஏதாவதொரு நிலையில் ஒருமித்து செயற்பட வேண்டிய ஒரு நிலைமை உருவாக வேண்டும்.
    பிரிவினைகள் தான் மற்றவர்கள் எங்களுடைய மக்களை எங்களுக்கு எதிராக பாவிக்கக் கூடிய ஒரு நிலையை இவ்வளவு காலமும் ஏற்படுத்தி வந்தது. ஆகவே இதனை இல்லாது செய்து அவர்களை ஒருமித்து ஓர் அலகினுள் கொண்டு வந்து ஜனநாயக முறைப்படி நாங்கள் வட இலங்கையில் செயலாற்றிவிட்டோம்.
    அதேபோல் கிழக்கு இலங்கையிலும் மலையகத்திலும் மக்களை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறான ஒரு மாற்ற வரவழைக்கப்பட்டால் எங்களால் பலவற்றையும் சாதிக்கக் கூடியதாக இருக்கும் என்பதை நான் எல்லா தமிழ் மக்களுக்கும் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்.
    வீரகேசரி நாளிதல் -நேர்காணல் -ஜீவா சதாசிவம்-
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நாட்டை பிரிக்கும் நோக்கம் கிடையாது- விக்னேஸ்வரன் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top