• Latest News

    October 09, 2013

    வரப்பிரசாதங்களுக்கும், சொகுசு வாழ்க்கைக்கும் சோரம் போகாதிருக்கும் முஸ்லிம் கட்சியை காட்ட முடியுமா ?

    எஸ்.அஷ்ரப்கான்

    அமைச்சுக்களிலிருக்கும் வரப்பிரசாதங்களுக்கும், சொகுசு வாழ்க்கைக்கும், சுகபோகங்களுக்கும் சோரம் போகாதிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு பெரும் எடுத்துக்காட்டாகும் என ஐக்கிய தேசிய கட்சியின் அம்பாரை மாவட்ட பிரச்சாரச் செயலாளர் எஸ். அப்துஸ் ஸலாம் தெரிவித்தார்.
    குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் தஸ்லிமின் கருத்தான வடக்கு மாகாண தமிழர்களிடம் முஸ்லிம்கள் பாடம் கற்ற வேண்டும் என்ற கூற்று தொடர்பாக கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
    தொடர்ந்தும் இது விடயமாக அவர் கருத்து வெளியிடும்போது,
    குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் தஸ்லிமின் கருத்தான வடக்கு மாகாண தமிழர்களிடம் முஸ்லிம்கள் பாடம் கற்க வேண்டும் என்ற கூற்றின் மூலம் தாங்கள் மாபெரும் தவறைச் செய்து கொண்டு முஸ்லிம் மக்கள் தவறு செய்தவர்கள் என்று பழி சுமத்த முற்படுவது பெரும் கவலைக்குரிய விடயமாகும்.
    முஸ்லிம் மக்களல்ல பாடம் கற்றுக்கொள்ளவேண்டியது, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் உட்பட அதன் உறுப்பினர்கள் அனைவருமே என்பதை சகோதரர் தஸ்லி்ம் விளங்கிக்கொள்ள வேண்டும். முஸ்லிம் தலைவர்கள் அரசியலில் இன்னும் பின்னோக்கி இரண்டாம் வகுப்பில் இருப்பதனால் பட்டம் முடித்த, அரசியலில் முதிர்ந்த தமிழ் அரசியல் தலைவர்களிடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டியதை மறைத்து மக்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று இவர் கூறி பாடம் சொல்லிக்கொடுக்க முற்படுவது நகைப்பிற்கிடமானது.
    அமைச்சுக்களிலிருக்கும் வரப்பிரசாதங்களுக்கும், சொகுசு வாழ்க்கைக்கும், சுகபோகங்களுக்கும் சோரம் போகாதிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்று ஒரு முஸ்லிம் கட்சியை  முஸ்லிம் காங்கிரசைச்சேர்ந்த தஸ்லிம் போன்றவர்களால் குறிப்பிட்டுக்காட்ட முடியுமா ? என வினவுகின்றேன்.
    குருநாகல் மாவட்டத்தில் கடந்த மாகாண சபையில் 4 முஸ்லிம் உறுப்பினர்கள் இருந்தும் இம்முறை தேர்தலில் ஒரு பிரதிநிதி மாத்திரமே தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதற்காகவே இந்த இதயக் குமுறலை தஸ்லீம் அவர்கள் வெளியிட்டிருப்பது வெளிப்படையானது என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும்.
    குருநாகல் மாவட்டத்தின் பிரதிநிதித்துவம் குறைந்ததற்கு முழுப்பொறுப்பையும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியே ஏற்க வேண்டும். கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியுடன் சேர்ந்து போட்டியிட்டதன் காரணமாக பலர் தெரிவு செய்யப்பட்டார்கள். ஆனால் தனித்து கேட்கின்றபோது அவர்களாலும் பெரும் வெற்றியைப்பெற முடியாது மட்டுமல்லாது வேறு எந்தக் கட்சியிலும் ஒரு முஸ்லிம் பிரதிநிதித்துவம் வருவதையும் வாக்குகளை சிதறடிப்பதன் காரணமாக இல்லாமல் செய்கின்ற கைங்கரியத்தை முஸ்லிம் காங்கிரஸ் சிறப்பாக செய்கிறது என்பதை இம்முறை வடக்கு தேர்தலில் நாம் கண்டோம்.
    எனவே, முஸ்லிம்காங்கிரஸ் கட்சியும் அதன் தலைமைத்துவமும் சிறப்பாக மக்களை ஏமாற்றும் ஒன்று என்பதை இப்போது மக்களாகவே உணர்ந்து வருகின்றமையால் எதிர்காலத்தில் முஸ்லிம் அரசியலில் எமக்கு எல்லாமே முஸ்லிம் காங்கிரஸ்தான் என்ற மாயை உறைத்தெறியப்படும் நிலை உருவாகி வருகிறது என்றும் குறிப்பிட்டார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: வரப்பிரசாதங்களுக்கும், சொகுசு வாழ்க்கைக்கும் சோரம் போகாதிருக்கும் முஸ்லிம் கட்சியை காட்ட முடியுமா ? Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top