• Latest News

    November 28, 2013

    நெடுந்தீவு பிரதேசசபைத் தலைவர் றெக்சியனை சுட்டுக்கொன்றது யார்? – ஒரு கொலை எழுப்பும் பல கேள்விகள்

    நெடுந்தீவுப் பிரதேசசபைத் தலைவர் டானியல் றெக்சியன் தலையில் பின்புறமாக சுட்டுக்கொல்லப்பட்டுள்ளது பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  இதையடுத்து, அவர் எவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டார், யார் அவரைச் சுட்டுக் கொன்றது என்ற கேள்வி எழுந்துள்ளது.

    புங்குடுதீவில் உள்ள தனது வீட்டில், றெக்சியன் நேற்றுமுன்தினம் மாலை சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

    முன்னதாக அவர் தற்கொலை செய்து கொண்டதாகவே கூறப்பட்ட போதிலும், யாழ்.போதனா மருத்துவமனையில் நேற்று நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில், அவர் தலையின் பின்புறம் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
    இவரது கொலைக்கு 9 மி.மீ கைத்துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளது. மூளையில் இருந்து 9.மி.மீ ரவை மீட்கப்பட்டுள்ளதாக, சட்டமருத்துவ அதிகாரி சின்னையா சிவரூபன் தெரிவித்துள்ளார்.

    சடலம் கிடந்த இடத்தில், கைத்துப்பாக்கி எதுவும் மீட்கப்படவில்லை.  அத்துடன், ஒருவர் தலையின் பின்புறமாக சுட்டுத் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பில்லை என்று சிறிலங்கா காவல்துறையினர் கூறியுள்ளனர்.

    ஈபிடிபியினர் கூறுவது போல, இது தற்கொலையே என்று வைத்துக் கொண்டாலும் கூட, தம்மிடம் ஆயுதங்கள் ஏதும் இல்லை என்று ஈபிடிபி கூறிவரும் நிலையில், றெக்சியனிடம் தற்கொலை செய்வதற்கான துப்பாக்கி எவ்வாறு கிடைத்தது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

    வடக்கு மாகாணசபைத் தேர்தலில், ஈபிடிபியின் வெற்றிக்காக றெக்சியன் கடுமையாக உழைத்திருந்தார். ஆயினும், ஈபிடிபியின் கோட்டையாக கருதப்பட்டு வந்த ஊர்காவற்றுறைத் தொகுதியிலும் அந்தக் கட்சி படுதோல்வி கண்டிருந்தது.

    இதன் பின்னர், நெடுந்தீவு பிரதேசசபைக் கூட்டங்களில் றெக்சியன் கடந்த இரண்டு மாதங்களாக சமூகமளிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

    நேற்று யாழ்ப்பாணத்தில் உள்ள ஈபிடிபி தலைமையகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட றெக்சியனின் உடல் நேற்றுமாலை புங்குடுதீவுக்கு கொண்டு செல்லப்பட்டது.

    இன்று மாலை இறுதி நிகழ்வுகள் நடைபெறவுள்ளது குறிப்படத்தக்கது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நெடுந்தீவு பிரதேசசபைத் தலைவர் றெக்சியனை சுட்டுக்கொன்றது யார்? – ஒரு கொலை எழுப்பும் பல கேள்விகள் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top