• Latest News

    November 28, 2013

    தம்மீதான தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பான வழக்கில் முன்னாள் இராணுவத் தளபதி சாட்சியம்

    முன்னாள்  இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீது கொழும்பிலுள்ள இராணுவ தலைமையகத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
    மேல் நீதிமன்ற நீதிபதி குமுதுனி விக்ரமசிங்க முன்னிலையில் இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சாட்சியமளித்தார்.
    2006 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி இராணுவத் தளமையகத்தில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டதுடன் மேலும் 27 பேர் காயமடைந்தனர்.
    செல்வராஜா கிருபாகரன், ஷன்முகலிங்கம் சூரியகுமார் மற்றும் தம்பையா பிரகாஷ் ஆகிய மூவரும் இந்த வழக்கின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
    மொஹமட் அன்சார் சித்திக் மற்றும் துர்கா ஆகியோருடன் இணைந்து 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து ஏப்ரல் 25 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இராணுவத் தளபதியை கொலை செய்வதற்கு திட்டம் தீட்டியதாக இவர்கள் மூவருக்கும் எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
    மேல் நீதிமன்றத்தில் இன்று சாட்சியமளித்த சரத் பொன்சேகா, சம்பவ தினத்தன்று இராணுவத் தலைமையகத்தில் இருந்து பகல் உணவுக்காக இராணுவத் தளபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்கு காரில் சென்றுகொண்டிருந்தபோது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறியுள்ளார்.
    இராணுவ வைத்தியசாலை அருகில் மக்கள் கூடியிருந்ததாகவும் அவர்களிடையே நீலம் மற்றும் மஞ்சள் சல்வார் அணிந்த பெண் ஒருவர் இருந்தாகவும் அவர் சாட்சியமளித்துள்ளார்.
    குறித்தப் பெண்ணின் வயிற்றுப் பகுதியும் மார்புப் பகுதியும் பருமட்டான நிலையில் காணப்பட்டதாகவும் முன்னாள் இராணுவத் தளபதி நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
    தமது கார் அந்த பெண்ணை கடந்துசென்றபோது, அவரது மார்புப் பகுதியிலிருந்து தீப்பிளம்பு ஏற்பட்டதுடன், காரில் ஏதோவொன்று மோதியதால் அதிலிருந்த கண்ணாடிகள் வெடித்துச் சிதறியதாகவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
    அந்த சந்தர்ப்பத்தில் குண்டொன்று வெடித்ததை தாம் உணர்ந்ததாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மேல் நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார்.
    பின்னர் காரினுள் இருந்த தம்மை சிலர் அம்பியூலன்ஸ் மூலம் தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாக குறிப்பிட்ட சரத் பொன்சேகா, தமது வயிற்றிருந்து இரத்தம் வழிந்தோடியதையும், உடற்பாகங்கள் வெளியில் தென்பட்டதையும் தாம் அவதானித்ததாக கூறியுள்ளார்.
    உடற்பாகங்களை கைகளால் பிடித்துக்கொண்டு வைத்தியசாலைக்குள் பிரவேசித்ததுடன், தமது சீருடைகளை அகற்றுவதற்காக வைத்திய அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
    நான்கு நாட்களின் பின்னர் நினைவு திரும்பியபோது இரண்டு மகள்மாரும் மனைவியும் தம்மருகே நின்றுகொண்டிருந்ததாக சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
    மூளை மற்றும் இதயம் தவிர்ந்த உடலிலுள்ள அனைத்து பகுதிகளிலும் காயம் ஏற்பட்டிருந்ததாக வைத்திய அதிகாரிகள் தம்மிடம் கூறியதாக அவர் மேலும் நீதிமன்றத்தில் அளித்த சாட்சியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    வைத்தியசாலையில் தம்மை பார்வையிடுவதற்கு பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ வருகைதந்தாகவும்  சில தினங்களுக்காக மேலதிக சிகிச்சைகளுக்காக தாம் சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் சரத் பொன்சேகா நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.
    சிகிச்சைகளின் பின்னர் திருகோணமலைக்கு சென்று மாவிலாறு நடவடிக்கையை ஆரம்பித்ததாகவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
    இந்த வழக்கின் மேலதிக விசாரணை அடுத்த வருடம் மார்ச் 20 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தம்மீதான தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பான வழக்கில் முன்னாள் இராணுவத் தளபதி சாட்சியம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top