அம்பாரை மாவட்டம், நிந்தவூர் பிரதேசத்தில் இன்று பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகின்றது. இங்கு வர்த்தக நிலையங்கள், பாடசாலைகள், அரச மற்றும் தனியார்துறை காரியாலயங்கள் யாவும் மூடப்பட்டுள்ளன.
நேற்று (17.11.2013) இரவு நிந்தவூர் பிரதேசத்தில் திருட்டு, கொள்ளை, மக்களை அச்சுறுத்தல் போன்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக கருதப்படுகின்ற கும்பலை பொது மக்கள், நிந்தவூர் கடற்கரைப் பூங்காவிற்கு அருகில் வைத்து மடக்கி சுற்றி வளைத்துக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து, குறிப்பிட்ட கும்பல் பொது மக்களிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்காக வானை நோக்கி துப்பாக்கி வேட்டுக்களை மேற்கொண்டனர்.
மேலும், நிந்தவூர் பெரியபள்ளிவாசலில் பொது மக்களுக்கு விடுத்த வேண்டுகோளை அடுத்து, ஆயிரக் கணக்கில் பொது மக்கள் நிந்தவூர் கடற்கரை பிரதேசத்தில் குவிந்தனர்.இதே வேளை, அங்கு வருகை தந்த பாதுகாப்புப் பிரிவினர் குறிப்பிட்ட கும்பலை பொது மக்களிடம் இருந்து பாதுகாத்துக் கொண்டு சென்றார்கள். இதனைக் கண்டித்தே இன்று நிந்தவூர் பிரதேசத்தில் ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகின்றது.
நேற்று இரவு பாதுகாப்புத் தரப்பினர் மேற்கொண்ட துப்பாக்கி வேட்டுக்கள் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தின் காரணமாக பலருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன. இவர்களுள் நிந்தவூர் பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ.ஏம்.தாஹிர் , நிந்தவூரைச் சேர்ந்த முகம்மட் இல்யாஸ் ஆகியோர்கள் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசலையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
மேற்படி சம்வபங்களுடன் தொடர்புடையவர்கள் பாதுகாப்பு தரப்பினர் என்று தெரிவிக்கப்படுகின்றன.
நிந்தவூர் பிரதேசத்தில் கடந்த இரு வாரங்களாக இரவு வேளைகளில் இனந் தெரியாத நபர்கள் வீடுகளுக்கு கற்களை வீசியும், வீட்டின் கூரை ஓடுகளை கழற்றி பொருட்களைத் திருடியும் வந்துள்ளார்கள். பொது மக்கள் இக்கும்பலை பிடிப்பதற்கு பல முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், அவர்களை பிடிப்பதற்கு முடியவில்லை.
இந்நிலையில்ஈ பொது மக்களுக்கு பாதுகாப்பு தரப்பினரின் மீது சந்தேகங்கள் ஏற்பட்டன. இதனைத் தொடர்ந்து ஞாயற்றுக் கிழமை (17.11.2013) நிந்தவூர் பிரதேச செயலகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் தலைமையில் கூட்டமொன்று நடைபெற்றது. இதில் பொலிஸார், இராணுவத்தினர், நிந்தவூர் பிரதே சபை தவிசாளர், கிராம உத்தியோகத்தர்கள், பள்ளிவாசல் தலைவர் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
இக்கூட்டத்தில் மேற்படி சம்பவங்களில் ஈடுபடுகின்றவர்களை பிடிப்பதற்கு திட்டங்கள் வகுக்கப்பட்டன. இதன் அடிப்படையில் நிந்தவூர் கடற்கரையில் வைத்து, மேற்படி சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் என்று கருதப்படுகின்றவர்கள் தாங்கள் அணிந்திருந்த உடையை கழற்றி விட்டு, சீருடை அணிய முற்பட்ட வேளையில் இவர்களைப் பின் தொடர்ந்த பொது மக்கள் மடக்கிப் பிடிப்பதற்கு முயற்சிகளை எடுத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.




0 comments:
Post a Comment