• Latest News

    November 23, 2013

    அடுத்த ஜெனிவா கூட்டத்தொடர் சிறிலங்காவை தூக்குமேடைக்கு இழுத்துச் செல்லும் – தயான் ஜெயதிலக எச்சரிக்கை

    அடுத்த ஆண்டு மார்ச் மாதம்  நடக்கவுள்ள  ஐ.நா.மனிதஉரிமைகள்  பேரவையின் கூட்டத்தொடர், சிறிலங்காவை   அனைத்துலக விசாரணை என்ற தூக்குமேடைக்கு இழுத்துச் செல்வதற்கான கூட்டமாகவே, அமையப் போகிறது என்று சிறிலங்காவின் மூத்த இராஜதந்திரிகளில் ஒருவரான கலாநிதி தயான் ஜெயதிலக எச்சரித்துள்ளார்.

    'பிரித்தானியப் பிரதமர் கமரொனின் எச்சரிக்கையை நாம் குறைத்து மதிப்பிடவோ அல்லது அதனை கணக்கிலெடுக்காது விடவோ கூடாது.

    நவநீதம்பிள்ளையை இணைத்துக் கொண்டு சிறிலங்காவுக்கு எதிரான அனைத்துலக விசாரணைக்கான முழு ஆதரவையும் பிரித்தானியா வழங்கும் என்று கமரொன் தெரிவித்துள்ளார்.
    2012, 2013 ஆண்டு ஐ.நா மனிதஉரிமை பேரவையில் சிறிலங்கா தொடர்பாக முன்வைக்கப்பட்ட தீர்மானங்களைப் போன்று 2014 ம் ஆண்டு அமையப் போவதில்லை. அது பயங்கரமானதாக இருக்கும்.

    கடந்த ஆண்டுகளில் முன்வைக்கப்பட்ட தீர்மானங்கள், 2016ம் ஆண்டில் முன்வைக்கப்படவுள்ள, சிறிலங்காவை அனைத்துலக விசாரணை என்ற தூக்குமேடையில் நிறுத்துவதற்கான முன்னேற்பாடுகளாகும்.

    சிறிலங்கா அரசாங்கம் இதற்கு எதிராக தலைகீழாக நின்று அடம் பிடித்தாலும், கருத்துக்களை முன்வைத்தாலும் எதுவுமே நடக்கப் போவதில்லை. மாறாக ஜெனிவாவுக்கே வெற்றி கிடைக்கும்.

    2012, 2013ம் ஆண்டுகளில் நடந்த வாக்கெடுப்புகளில் தோல்வி கண்ட நாம், 2014 இல் எவ்வாறு வெல்ல முடியும்?

    ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், எமது நட்பு நாடுகள் இருக்கின்றனவே எனச் சிலர் கூறலாம். அவ் வாறு நட்பு நாடுகள் அங்கம் வகித்த நிலையிலேயே 2012இல் நாம் தோல்வி கண்டோம்.

    இந்த முயற்சியானது சிறிலங்கா அதிபரினதும், மக்களினதும் கண்களில் மண்ணை தூவுவது போலானது.

    ஐ.நா மனிதஉரிமை பேரவையில், எமது நட்பு நாடுகளான 6 நாடுகளே அங்கம் வகிக்கின்றன. அதாவது ரஷ்யா, சீனா, கியூபா, வியட்நாம், அல்ஜீரியா, சவூதி அரேபியா ஆகியனவே அந்த நாடுகள்.

    இந் நாடுகள் இருப்பதால் வாக்கெடுப்பில் எம்மால் வெல்ல முடியாது.

    2009 ம் ஆண்டு பிரித்தானியப் பிரதமர் கமரொன் அரசினால், டேவிட் மிலிபேண்ட் தலைமையில் நவநீதம்பிள்ளையின் ஒத்துழைப்புடன் இதே போன்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

    அப்போது அந்தக் கூட்டணிக்கு 12 வாக்குகளே கிடைத்தன. சிறிலங்காவினால் 29 வாக்குகளை பெற்றுக்கொள்ள முடிந்தது.

    ஆனால் நான்கு வருடங்களுக்கு பிறகு என்ன நடந்துள்ளது?

    சிறிலங்காவுக்கு நேரடியாகவே பயணம் செய்த கமரொன் ஜெனிவாவில் சிறிலங்காவைத் தோல்வியடையச் செய்வேன் என்று எச்சரித்து விட்டுச் சென்றுள்ளார்.

    இவ்வாறான நிலைமைக்கு சிறிலங்கா எப்படித் தள்ளப்பட்டது?

    எமக்கு நட்பு நாடுகள் உள்ளன எனக் கூறுவது வெறும் எண்ணிக்கை கணக்காகும்.

    கமரொனின் அச்சுறுத்தல் செயற்படத் தொடங்கினால் அனைத்துலக விசாரணைக்கு முகம் கொடுக்க நேரிடும். இந்தக் கூட்டத்தில் சிறிலங்கா கலந்து கொள்ளாவிட்டாலும் தனித்து தீர்மானம் மேற்கொள்ளப்படும்.

    அந்தத் தீர்மானம் எவ்வாறு அமையும் என்பதை ஏற்கனவே தருஸ்மன் அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.

    அதுதான் தூக்குமேடைக்கான அனைத்துலக விசாரணை என்ற தீர்ப்பாகும்.

    இத் தீர்ப்புக்கு அமைய உலகின் பலம் பொருந்திய நாடுகள் தத்தமது நாடாளுமன்றங்களில் தீர்மானங்களை நிறைவேற்றி பல்வேறுவிதமான பொருளாதாரத் தடைகளை விதிக்க ஆரம்பிக்கும். இதனால் மக்கள் கஷ்டங்களுக்குள் தள்ளப்படுவார்கள். வேலையில்லாப் பிரச்சினை தலைதூக்கும்.

    அத்தோடு பொருளாதாரத் தடைகளால் நாட்டு மக்களின் வாழ்க்கை நடைமுறைகள் தலைகீழாக மாறும்.

    அவ்வாறானதொரு நிலைமையை ஏற்படுத்தவே முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.  எனவே, 2009ம் ஆண்டு பெற்ற வெற்றி, 2012 2013 ஆண்டு­களில் பெற்ற தோல்விகளை பாடமாகக் கொள்ள வேண்டும்.

    எதிர்வரும் 4 மாதங்களில் ஜெனிவா போராட்டத்திற்கு தீர்க்கமான இராஜதந்திர ரீதியில் புத்திக்கூர்மையுடன் காய் நகர்த்தல்களை அரசாங்கம் நகர்த்த தயாராக வேண்டும். இது தவிர்க்க முடியாத சவால்.  இந்த அனைத்துலக பொறிமுறையால் நாம் பெற்ற வெற்றிக்கும் கௌரவத்திற்கும் இழுக்கு ஏற்படும்.

    இதனால் எப்போதாவது ஒரு நாள் வடக்கில் தனி நாடு உருவாவதற்கு தேவையான அனைத்துலக மற்றும் தெற்காசிய வலயத்தின் எழுத்து மூலமான நிபந்தனைகள் தயாராகும் நிலை உருவாகும்.

    கொமன்வெல்த் மாநாட்டில் மேற்குலக நாடுகள் சிறிலங்கா தொடர்பிலும் நாட்டுத் தலைவர் மற்றும் வடபகுதி தொடர்பில் வெளிக்காட்டிய செய்திகள் சாதகமற்றதாகவே காணப்பட்டன. இது சிறிலங்காவின் எதிராளிகளுக்கு விருந்தாக அமைந்தது.

    கமரொனின் யாழ்.பயணம் தமிழ் இனவாத சக்திகளின் பரம்பலுக்கு உத்வேகம் கொடுத்துள்ளது' என்றும் தயான் ஜெயதிலக தெரிவித்துள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அடுத்த ஜெனிவா கூட்டத்தொடர் சிறிலங்காவை தூக்குமேடைக்கு இழுத்துச் செல்லும் – தயான் ஜெயதிலக எச்சரிக்கை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top