• Latest News

    November 29, 2013

    எமது பெண்கள் வலோத்காரப் பாலியல் பாதிப்புக்களுக்குள்ளாக்கப்படுகிறார்கள்! தெரிந்தும் நடவடிக்கை எடுக்க முடியாத நிலை: விக்னேஸ்வரன்

    எமது தமிழ்ப் பெண்கள் வலோத்காரப் பாலியல் பாதிப்புக்களுக்கு ஆளாக்கப்படுகின்றார்கள். யாரால் இவை நடக்கின்றன என்று பொலிசாருக்கு தெரிந்தும் நடவடிக்கையை எடுக்க முடியாத நிலையில் இருக்கின்றார்கள் என வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
    விசுவமடு விவசாயிகள் ப.நோ.கூ.ச.திறப்பு விழாவில் கலந்துகொண்டபோதே வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார்.
    இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஆணையரின் சிறப்புப் பிரதிநிதி மற்றும் அனைத்துலக தொழிலாளர் அமைய இலங்கைக்கான பணிப்பாளர், வடமாகாண சபை உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
    முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனது உரையில்,
    அவுஸ்திரேலியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் இருக்கும் மிகப் பெரிய பிணக்கு சட்ட விரோதமாக எங்கள் மக்கள் அங்கு செல்வதே. அதற்குப் பல காரணங்கள் உண்டு. அதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
    முதலில் எங்கள் வடமாகாணம் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பது. அதாவது மக்களுக்குரிய காணிகள் இராணுவத்தினரால் பலாத்காரமாகக் கையேற்கப்பட்டு மண்ணின் சொந்தக்காரர்கள் தமது மண்ணில் வாழ வழியில்லாமல் இராணுவக் கெடுபிடிக்குள் அகப்பட்டுத் தத்தளிக்கின்றனர்.
    இரண்டாவது, கலவாகப் பல வழிகளில் தென்னாட்டில் இருந்து சிங்கள மக்களைக் கொண்டு வந்து வட மாகாணத்தில் குடியேற்றி தமிழ் மக்கள் தமது சொந்த இடங்களை விட்டுச் செல்ல நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். இதற்கு இராணுவம் ஒத்துழைப்புக் கொடுத்து வருகின்றது.
    மூன்றாவது, எமது மக்களுக்குப் பாதுகாப்பு இல்லை. எமது பெண்கள் வலோத்காரப் பாலியல் பாதிப்புக்களுக்கு ஆளாக்கப்படுகின்றார்கள். பொலிசார் யாரால் இவை நடக்கின்றன என்று தெரிந்தும் நடவடிக்கையை எடுக்க முடியாத நிலையில் இருக்கின்றார்கள்.
    நான்காவது தொழில் வாய்ப்பற்ற நிலை. வறுமையின் கோட்டிற்குக் கீழ் வசிக்கும் எம் மக்களுக்கு தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுக்க முடியாத நிலையில் இது வரை காலமும் இருந்து வந்துள்ளோம்.
    எமது வீடுகளையும், காணிகளையும் இராணுவம் எடுத்து வைத்திருக்கும் போது எமது மீனவர்களின் தொழில்களை இராணுவமும், கப்பல்ப் படையுஞ் செய்யும் போது, எமது வேளாண்மை நிலங்களை இராணுவத்தினர் எடுத்துப் பயிரிடும் போது, ஏ9 தெரு நெடுக எம்மால் செய்யக் கூடிய தேநீர்க் கடை, உணவக வியாபாரங்களை அவர்களே செய்யும் போது எமக்குத் தொழில் வாய்ப்புக்கள் எங்கிருந்து கிடைக்கப் போகின்றன?
    ஆகவே வேலையில்லாமல், காணியில்லாமல், பாதுகாப்பு இல்லாமல், போகும் இடம் தெரியாமலத் தான் அவுஸ்திரேலியா செல்ல முடிவு எடுக்கின்றார்கள் எம் மக்கள். ஆனால் பலரும் தமது சுயநலத்திற்காக அப்பாவி மக்களை ஏமாற்றுகின்றனர்.
    போரின் கடைசி நாட்களில் இராணுவ பலத்தை எமது மத்திய அரசாங்கம் வெகுவாகக் கூட்டியது. சுமார் 3 இலட்சம் வரையில் கூட்டியதாகக் கூறப்படுகின்றது.
    போர் முடிந்த பின்னர் வடமாகாணத்தில் தரிக்க வைத்து அவர்களின் குடும்பங்களையும் அங்கு செல்ல விட்டால் வடமாகாணத்தைக் காலா காலத்தில் சிங்களமயம் ஆக்கிவிடலாம் என்ற எண்ணத்தில்தான் தொடர்ந்து போரின் பின்னர் சுமார் ஐந்து வருட காலம் இராணுவத்தை இங்கு நிலை நிறுத்தி வைத்துள்ளார்கள் போல்த் தெரிகின்றது.
    இதனால் போரின் பின்னர் கூட எமது மக்களுக்கு ஜனநாயகம் கிடைக்கவில்லை. இதனை மாற்றி அமைக்க வேண்டும் என்றால் ஒரு புறம் ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையில் இங்கிருக்கும் இராணுவத்தினர் அனுமதிக்கப்படலாமா என்பதை ஆராய வேண்டும். அத்துடன் மறுபுறம் அவர்களில் பெரும்பாலானோர் சிவில் வாழ்க்கைக்குத் திரும்ப ஆவன செய்ய வேண்டும். அது நடக்கும் வரையில் எம் வட இலங்கை மக்களுக்கு விடிவே கிடையாது.
    இவ்வாறு நான் கூறுவதால் என்னை அழித்தால் என்ன என்று இராணுவத்தினர் எண்ணக்கூடும். என்னை அழிப்பதால் நான் தியாகிப்பட்டம் பெற்று விடுவேன். ஒரு மகாத்மா ஆகி விடுவேன். ஆனால் உண்மை எங்கும் போகாது. இங்கு தான் இருக்கும். அந்த உண்மைகள் தான் இன்று ஜெனிவாவில் நர்த்தனம் ஆடுகின்றன என்றார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: எமது பெண்கள் வலோத்காரப் பாலியல் பாதிப்புக்களுக்குள்ளாக்கப்படுகிறார்கள்! தெரிந்தும் நடவடிக்கை எடுக்க முடியாத நிலை: விக்னேஸ்வரன் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top