• Latest News

    December 16, 2013

    ஒபாமா, கெமரூனுடன் படம்பிடித்து பிரபல்யமான டென்மார்க் பிரதமர்

    தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக கடந்த 9 ஆம் திகதி  ஜொஹானஸ்பேர்க் நகரிலுள்ள ஸ்வேதோ அரங்கில் நடைபெற்ற அஞ்சலிக் கூட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் ஆகியோருக்கு மத்தியில் அமர்ந்திருந்த டென்மார்க் பிரதமர் திருமதி ஹெல்லீ தோர்னிங் ஸ்மித் கலகலப்பாக சிரித்துக்கொண்டும் ஒபாமா, கெமரூன் ஆகியோருடன் நெருக்கமாக அமர்ந்து செல்லிதொலைபேசி மூலம்  புகைப்படம்பிடித்துக்கொண்டும் காணப்பட்டமை சர்ச்சையை ஏற்படுத்தியது.

     தோர்னிங் ஸ்மித்தின் செல்லிட தொலைபேசிக் கமெராவின் மூலம் புகைப்படம் பிடித்துக்கொள்வதற்கு ஒபாமாவும் டேவிட் மெகரூனும் தோர்னிங்குக்கு மிக நெருக்கமாக அவரை நோக்கி சாய்ந்தனர். (இவ்வாறு தன்னைத்தானே பிடித்துக்கொள்ளும் படங்கள் 'செல்ஃபீ' என அழைக்கப்படுகின்றன)  டேவிட் கெமரூன் மிகவும் வளைந்து திருமதி தோர்னிங் ஸ்மித் மீது சாய்ந்தார். ஒரு கட்டத்தில் கெமரூனின் முகத்தை தனது கையால் மறைத்தவாறும் ஸ்மித் காணப்பட்டார்.

    இவர்களின் வேடிக்கையான நடவடிக்கையை அரங்கிலிருந்த ஏ.எவ்.பி. புகைப்படவியலாளர் ஒருவர் படம்பிடித்து வெளியிட்டதையடுத்து அத்தகவலும் படமும் இணையத்தளங்களில்  வேகமாக ஆரம்பித்தது.
     
    ஏ.எவ்.பி. செய்தியாளரின் பிடித்த படங்களில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் பாரியாரான மிஷெல் ஒபாமா இறுக்கமான முகத்துடன் இருப்பதை போல் தென்பட்டார். இதனால், தனது கணவர் ஒபாமா மற்றும் பிரித்தானிய, டென்மார்க் தலைவர்களின் மேற்படி செயற்பாட்டில் மிஷெல் ஒபாமா கடுப்பாகிவிட்டதாகவும் விமர்சிக்கப்பட்டது.
     
    இச்சம்பவத்தின்பின் இணையத்தளங்களில் மிக பிரபலமான ஒருவராகிவிட்டார் திருமதி ஹெல்லே தோர்னிங் ஸ்மித். கூடவே யார் இந்த திருமதி தோர்னிங் ஸ்மித் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
     
    46 வயதான ஹெல்லே தோர்னிங் ஸ்மித், 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற டென்மார்க் பொதுத்தேர்தலின்  பின்னர் அந்நாட்டின் முதல் பெண் பிரதமராக பதவிவியேற்றார்.
     
    டென்மார்க் சமூக ஜனநாயகக் கட்சி, மற்றும் சோஷலிஸ மக்கள் கட்சி, டென்மார்க் சமூக தாராளவாத கட்சி ஆகியவை இணைந்த அரசாங்கத்துக்கு அவர் தலைமை தாங்குகிறார். 1999 முதல் 2004 ஆம் ஆண்டு வரை ஐரோப்பிய நாடாளுமன்றத்திலும் இவர் பணியாற்றினார். 

     கவர்ச்சியான தோற்றம் கொண்ட தோர்னிங் ஸ்மித்,  வழக்கமான பிரதமர்களைப் போல் அல்லாமல் ஒரு மொடல் போன்று தன்னை அலங்கரித்க்கொள்பவர். எப்போதும் ஸ்டைலாக, உயர்தரமான ஆடைகளை  அணிவதில் ஆர்வம் கொண்டவர் இவர். இதனால் அவரை குச்சி ஹெல்லீ என அவரின் சகாக்கள் அழைக்கின்றனர். (Gucci என்பது இத்தாலியின் பிரபல ஆடைவடிவமைப்பு நிறுவமொன்றின் பெயர்).
     
    கொப்பன்ஹேகன் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற அவர் பின்னர் பெல்ஜியத்திலுள்ள ஐரோப்பிய கல்லூரியில் முதுமானி கல்வி கற்ற காலத்தில்  ஸ்டீபன் கின்னோக்கை முதலில் சந்தித்தார். பின்னர் இவர்கள் காதலித்து பின்னர் திருமணம் செய்துகொண்டனர்.
     
    தோர்னிங்கின் கணவர் ஸ்டீபன் கின்னோக் ஒரு பிரித்தானியர். இவர் பிரித்தானிய தொழிற்கட்சியின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான நீல் கின்னோக்கின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
     
    தோர்னிஸ் ஸ்மித்தின் புகைப்படத்துக்காக வளைந்துகொடுத்தமை குறித்து பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் விளக்கமளித்தபோது, 'கின்னோக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் புகைப்படம் பிடித்துக்கொள்ள அழைத்தபோது, 'ஆம்' என்று சொல்வதுதான் முறையானது என எண்ணினேன்' என்றார்.
     
    இதேவேளை ஜொஹான்னர்ஸ்பேர்க் ஸ்வோதோ அரங்கில் தான் மேற்கொண்ட நடவடிக்கையை டென்மார்க் பத்திரிகையொன்றுக்கு அளித்த பேட்டியின்போது நியாயப்படுத்தி பேசினார் தோர்னிங் ஸ்மித்.

     'அந்த சூழல் மனச்சோர்வானதுதான். ஆனால், பின்னர் 95 வயதுவரை வாழ்ந்த ஒரு மனிதரின் வாழ்க்கை கொண்டாடுவதற்கான தருணமாக அது மாறியது. அரங்கில் பலரும் ஆடிப் பாடிக் கொண்டிருந்தனர். எனவே மனநிலை சாதகமானதாக இருந்தது. நாம் உண்மையில் வேடிக்கையான 'செல்பீ' பிடித்துக்கொண்டோம்' என அவர் கூறினார்.
     
    'அன்றயை தினம் பெரும் எண்ணிக்கையான புகைப்படங்கள் பிடிக்கப்பட்டன.  ஒபாமாவின் படங்களும் அதிகம் பிடிக்கப்பட்டன. அது சற்று வேடிக்கையானது என எண்ணுகிறேன். தலைவர்கள் சந்தித்துக்கொள்ளும்போதும் நாங்களும் சாதாரண மனிதர்கள் என்பதை அது வெளிப்படுத்துகிறது' எனவும் தோர்னிங் ஸ்மித் கூறினார்.
     
    'மிஷெல் ஒபாமா கோபமடையவில்லை'

    இதேவேளை, தோர்னிங் ஸ்மித்துடன் ஒபாமா சிரித்துப் பேசி புகைப்படம் பிடித்துக்கொண்டிருந்தபோது மிஷெல் ஒபாமா மகிழ்ச்சியடையாதவறாக காணப்பட்டார் என்ற செய்திகளை அக்காட்சியை புகைப்படம் பிடித்த ஏ.எவ்.பி. புகைப்படப்பிடிப்பாளர் ரொபர்ட்டோ ஸ்மித் மறுத்துள்ளார்.
     
    ஒரு கணம்தான் மிஷெல் ஒபாமா அந்த முகபாவத்துடன் காணப்பட்டார் எனவும் அப்படம் பிடிக்கப்படுவதற்கு  சில விநாடிகளுக்குமுன் மேற்படி மூவரின் செயற்பாடுகளைப் பார்த்து மிஷெல் ஒபாமா சிரித்தார் எனவும் ரொபர்ட்டோ ஸ்மித் தெரிவித்துள்ளார்.
     
    'அந்த பெண் (தோர்னிங்) தனது தொலைபேசியை எடுத்து தன்னையும் கெமரூன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதியையும் படம்பிடித்தார். நான் அந்த அரங்கில் என்னைச் சுற்றியிருந்த பலரையும் நான் படம்பிடித்துக்கொண்டிருந்தேன். தென்னாபிரிக்கர்கள் தமது தலைவரின் வாழ்க்கையை கௌரவிக்கும் வகையில் ஆடிப் பாடி சிரித்துக்கொண்டிருந்தனர்.  அங்கு ஒரு களியாட்ட சூழல்தான் தென்பட்டது' என ரொபர்ட்டோ ஸ்மித் தெரிவித்துள்ளார்.
     
    வெளியிடப்படாத புகைப்படம்

    சரி, இவ்வளவு சர்ச்சையை ஏற்படுத்திய தோர்னிங் ஸ்மித் பிடித்த அந்த 'செல்பீ' புகைப்படத்தை இணையத்தளங்களிலோ வேறு ஊடகங்களிலோ அவர் வெளியிடவில்லை. அப்படம் அவ்வளவு சிறந்த படமாக அமையவில்லை எனவும் அதை தான் வெளியிடப்போவதில்லை எனவும் கடந்த வார இறுதியில் டென்மார்க் பத்திரிகையொன்றுக்கு தோர்னிங் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஒபாமா, கெமரூனுடன் படம்பிடித்து பிரபல்யமான டென்மார்க் பிரதமர் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top