• Latest News

    December 16, 2013

    தனக்கு எதிரான வடக்கு மாகாண சபையின் தீர்மானத்தை ஆளுநர் சந்திரசிறி நிராகரித்தார்

    தன்னை ஆளுநர் பதவியில் இருந்து நீக்கக்கோரி, வடக்கு மாகாணசபை நிறைவேற்றிய தீர்மானத்தை மாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி நிராகரித்துள்ளார்.

    தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நல்ல முறையிலேயே பணியாற்றி வருவதாகவும் அவர் கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றிடம் கூறியுள்ளார்.

    மாகாணசபையில் இவர்களின் அழுத்தங்களுக்கு அடிபணிந்தோ,அச்சத்துடனோ பணியாற்ற முடியாது. ஒவ்வொரு எதிர்ப்பையும், அவர்கள் வெளிப்படுத்தும் கருத்தையும், நான் கேட்டுக் கொண்டிருந்தால், என்னால் வேலை செய்ய முடியாது.
    எனக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் எந்த பிரச்சினையும் இல்லை. மாகாணசபையில் நாம் நல்ல முறையிலேயே பணியாற்றி வருகிறோம். நாம் ஒவ்வொருவரும் பேசிக்கொண்டால், எந்தப் பிரச்சினையும் இல்லை.

    தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கும் குறிப்பிட்ட சில கட்சிகள் தான், பிரச்சினைகளை உருவாக்குகின்றன. அரசியலமைப்புக்கு விரோதமாக நான் எந்த தவறையும் இழைக்கவில்லை. எனவே அவர்கள் எப்படி என்னை நீக்க முடியும்?

    நான் இராணுவத்தில் இருந்த போது, நாட்டுக்கு நன்றாக சேவையாற்றினேன். அந்த மகத்தான சேவையை கௌரவிக்கும் வகையிலேயே என்னை வடக்கு மாகாண ஆளுனராக நியமிக்க சிறிலங்கா ஜனாதிபதி முடிவு செய்தார்.

    இராணுவ சேவையில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் இப்போது நான் ஒரு சிவிலியன். நான் இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் ஒரு சிவிலியனாகவே இருக்கிறேன் என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கவனத்தில் கொள்ளவில்லை.

    மனிதஉரிமைகள் விவகாரத்திலும், எமக்குள் எந்தப் பிரச்சினையும் இல்லை. எனவே என்னை நீக்குவதற்கு எந்தக் காரணத்தையும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. என்னை நீக்குவதற்கு வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அரசியலமைப்புக்கு முரணானது.

    அவர்களால் ஆளுனரை பதவி நீக்கும்படி தீர்மானம் நிறைவேற்ற முடியாது. மூன்று காரணங்களை முன்வைத்து மட்டுமே, ஆளுனர் ஒருவரை நீக்கும் தீர்மானத்தை நிறைவேற்ற முடியும். ஊழல் செய்திருந்தால், மோசடி செய்திருந்தால், அல்லது அரசியலமைப்புக்கு முரணாக செய்ற்பட்டிருநதால் தான், அவ்வாறு கோர முடியும்.

    நான் அவ்வாறு எந்தத் தவறையும் செய்யவில்லை. எனவே இந்த தீர்மானம் அரசியலமைப்புக்குட்பட்டது அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தனக்கு எதிரான வடக்கு மாகாண சபையின் தீர்மானத்தை ஆளுநர் சந்திரசிறி நிராகரித்தார் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top