• Latest News

    December 30, 2013

    எதிர்காலத்தில் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பன்முகப்படுத்தப்பட்ட நிதியினை வழங்க வேண்டும்!

    எஸ்.அஷ்ரப்கான்;
    சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தை தொழிற்பயிற்சி டிப்ளோமா கல்வித் தரத்திற்கு உயர்த்த வேண்டுமென்ற வேண்டுகோளை விடுத்து சாயந்தமருது பிரதேச செயலக இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும், சகவாழ்வு பிரதியமைச்சருமான முஹம்மட் றிஸான் உரையாற்றினார்

    இளைஞர் பாராளுமன்றத்தில் கலந்துகொண்டு விசேட உரை நிகழ்த்தும்போது இந்த வேண்டுகோளை அவர் விடுத்துள்ளார்.
    இளைஞர் பாராளுமன்றத்தின் 5 வது அமர்வில்  2014ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட விவாதம் தற்போது நடைபெறுகின்றது.  கடந்த 27ம் திகதி தொடக்கம் 29 ஆம் திகதி வரை இவ்நிகழ்வில் பிரதம விருந்தினராக தேசியமொழி  மற்றும் ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மற்றும் இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும ஆகியோர்  கலந்துகொண்டார்கள்.

    இவ்வமர்வின் முதலாவது நாளில் சாய்ந்தமருது பிரதேச இளைஞர் பாராளுமன்ற  உறுப்பினரும், சகவாழ்வு பிரதி அமைச்சருமான எம்.எல்.எம்.றிஸான் இளைஞர் பாராளுமன்றத்தில் விஷேட உரையினை நிகழ்த்தினார்.

    இவர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது:

     2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் வரலாற்றில் முதல் தடவையாக எமது நாட்டின்  இளைஞர், யுவதிகளின் முன்னேற்றத்திற்கு கூடுதலான நிதியினை வழங்குவதனையிட்டு இளைஞர்களாகிய நாம் மகிழ்ச்சியடைகின்றோம்.  இந்த இளைஞர் பாராளுமன்றத்தின் இளைஞர் சகவாழ்வு பிரதி அமைச்சர் என்ற ரீதியில் எமது நாட்டின் ஜனாதிபதி அதிமேதகு மஹிந்த ராஜபக்க்ஷவுக்கு  விஷேட நன்றியை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

    எதிர்காலத்தில் வரவு செலவுத்திட்டத்தினூடாக இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பன்முகப்படுத்தப்பட்ட நிதியினை வழங்க வேண்டும்' என்ற வேண்டுகோள் ஒன்றை இவ்விடத்தில் விடுக்க  விரும்புகின்றேன்.

    எமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தியாகத்துடனும் அர்ப்பணிப்புடனுடனும் விவசாயம், கடல் தொழிலில் என்பவற்றை மேற்கொண்டுவரும் தொழிலாளர்களுக்கு வரவு செலவு திட்ட நிதியினூடாக கூடுதலான நிதியினை வழங்கி அவர்களின் குடும்ப வருமானம் முன்னேற்றமடைய தேவையான  உதவிகளை வழங்க வேண்டும். விவசாயம், கடற்றொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களின் பிள்ளைகள் கல்வியில் முன்னேற்றம் அடைய புலமைப் பரிசில்களும்  விஷேடமாக வழங்க வேண்டும் .

    மஹிந்த சிந்தனை அடிப்படையில் நாட்டில் 25 தொழிற்பயிற்சி கல்லூரிகள்  தரம் உயர்த்தும் வேலைத்திட்டத்தில் சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையம் உள்வாங்கப்படவேண்டும். அம்பாறை மாவட்டத்தின் இளைஞர், யுவதிகளின் கல்விக் கேந்திர நிலையமாக இப்பயிற்சி நிலையம் தற்போது செயற்பட்டுவருகின்றது. 2011 ஆம் ஆண்டு இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அமைச்சர் டலஸ் அழகப்பெருமவினால் இது திறந்துவைக்கப்;பட்டது. 

    இவ் இளைஞர் தொழிற்பயிற்சி நிலையத்தை தொழிற்பயிற்சி  டிப்ளோமா கல்வித் தரமாக உயர்த்த வேண்டும் அத்தோடு இத்தொழிற்பயிற்சி நிலையத்தை  'மொழி ஆய்வுகூட தொழிற்பயிற்சி கல்லூரியாக' மாற்றி சிங்களம், தமிழ், ஆங்கிலம் மற்றும் வெளிநாடுகளில் எமது இளைஞர்கள் தொழிவாய்ப்பைப்பெற்று  அதிக சம்பளத்துடன் பணியாற்றுவதற்கு ஏற்ப அரபு, ஜப்பான், கொரியா  ஆகிய மொழிகளை கற்பிக்கும் மொழிக் கல்லூரியாகவும் மாற்ற வேண்டும். எங்களது இளைஞர் பாராளுமன்றத்தின் பிரதம விருந்தினராக கலந்துகொண்டிருக்கும்  அமைச்சர் வாசுதேச நாணயக்கார இத்திட்டதிற்கு பங்களிப்பு வழங்கவேண்டும்.

    அம்பாறை மாவட்டத்தில் பதிவு செய்யப்படாமல் வியாபார இலாபத்தைக் கொண்டதாக குறுகிய நோக்குடன் இயங்கும் தனியார் கல்வி மையத்தினூடாக இளைஞர்கள் பல பாதிப்புக்களுக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள். பதிவு செய்யப்படாமல் இயங்கும் இத்தகைய கல்வி மையத்தின் சிறப்பற்ற கல்வியினையும், தரமற்ற சான்றிதழ்களையும்  பெற்று எமது இளைஞர்கள் பல ரூபாய்களை இழப்பதுடன் தமது காலங்களையும் வீணாக்கிவிடுகின்றார்கள். எனவே, இதனைக் கவனத்திற்கொண்டு நாம் செயற்படவேண்டிய கட்டாயமான ஒரு  காலத்தில் உள்ளோம்     என்றார்.

    சாய்ந்தமருது தொழிற்பயிற்சி நிலையத்தை  'தரமுயர்த்தக்கோரி' கோரிக்கைகள் அடங்கிய  விஷேட அறிக்கையை  சகவாழ்வு பிரதியமைச்சரும் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினருமான  ஏ.எல்.எம். றிஸான்   சபாநாயகருக்கு   கையளித்தார்.

    இளைஞர்  பாராளுமன்றத்தின் ஆளும்கட்சி, எதிர்கட்சி  உறுப்பினர்கள் அனைவரும் இத்திட்டத்திற்கு ஆதரவு வழங்கினார்கள் என்பதும்  குறிப்பிடத்தக்கது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: எதிர்காலத்தில் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பன்முகப்படுத்தப்பட்ட நிதியினை வழங்க வேண்டும்! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top