இலங்கையில் காப்புறுதி மற்றும் உயிர்ப்பாதுகாப்பு அங்கியின்றி மீனவர்கள் கடலுக்குச் செல்ல முடியாது எனும் நடைமுறை ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
இந்த நடைமுறையை கடுமையாக அமல்படுத்தும்படி மாவட்ட கடற்தொழில் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காப்புறுதி செய்யப்படாத படகுகளுக்கு 2014 ஆம் ஆண்டுகான கடற்தொழில் அனுமதிப் பத்திரம் வழங்கப்பட மாட்டாது எனும் அறிவித்தல் மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அரசின் இந்த முன்னெடுப்பு வரவேற்கத்தக்கது என்கிறார் தேசிய மீனவர் சம்மேளனத்தின் உறுப்பினரான ஏ.சி.எம்.முனாவர். சீரற்ற காலநிலை மற்றும் எதிர்பாராமல் ஏற்படும் பாதிப்புகளுக்கு இந்தக் காப்புறுதி உதவிகரமாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
உயிர்ப்பாதுகாப்பு அங்கியை அனைத்து மீனவர்களுக்கும், படகுகளின் உரிமையாளர்கள் வழங்க முடியாத சூழலும் சில இடங்களில் இருப்பதால், ஒரு படகுக்கு ஒரு அங்கியாவது வழங்கவும், காப்புறுதித் தொகையில் ஒரு பகுதியை செலுத்தவும் அரசு முன்வர வேண்டும் என தமது சங்கம் அரசிடம் கோரியுள்ளது எனவும் முனாவர் கூறியுள்ளார்.
எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் காப்புறுதி மற்றும் உயிர் பாதுகாப்பு அங்கியின் இருப்பு குறித்த பரிசோதனைகள், கிராமிய மீன்பிடி அமைப்புகளினால் இறங்குதுறைகளில் மேற்கொள்ளப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
தேவையேற்பட்டால் கடற்படைகளின் உதவியும் நாடப்படும் என கிழக்கு மாகாண மீன்பிடித் திணைக்கள உதவி இயக்குநர் ஜோர்ஜ் தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment