அம்பாறை மாவட்டம், ஒலுவில் பிரதேசத்தில் 17.04.2014 இரவு கடற்படையினருக்கு எதிராக பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டனர். நேற்று வியாழக்கிழமை இரவு 10.30 மணியளவில் கடற்படை வீரர்
ஒருவர் வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து பெண்களை அச்சுறுத்திய சம்பவம்
தொடர்பிலும் குறித்த கடற்படை வீரர், பொது மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட
போதிலும் ஒலுவில் கடற்படை முகாமிலுள்ள வீரர்கள் தலையிட்டு அவரை விடுவித்து
அழைத்துச் சென்றமை தொடர்பிலும் கண்டனம் தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம்
இடம்பெற்றது.
இதன்போது ஸ்தலத்திற்கு விரைந்த
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ. அன்ஸில், பொதுமக்களின்
நியாயமான கோரிக்கைகளை பொலிஸாருக்கும், கடற்படையினருக்கும்
தெளிவுபடுத்தியதுடன், குறிப்பிட்ட சம்பவத்துடன் தொடர்புபட்ட கடற்படை
அதிகாரியை பொலிஸார் கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
இதன் பின்னர் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை
மேற்கொள்வதாகவும், குறிப்பிட்ட கடற்படை அதிகாரியை கைது செய்வதாகவும்
பொலிஸார் உறுதியளித்ததைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு பொது மக்கள்
கலைந்து சென்றனர்.
அதேவேளை, இதனைத் தொடர்ந்து குறித்த கடற்படை வீரர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இச்சம்பவங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.- TC




0 comments:
Post a Comment